அரசியல்
Published:Updated:

“கட்சி மாறியவரின் சாவுக்குப் போகாதே!” - கட்டுப்பாடு விதித்தார்களா கம்யூனிஸ்டுகள்?

மணலி ஊராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மணலி ஊராட்சி

கடந்த அம்பது வருசத்துக்கு மேல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோட கோட்டையா மணலி ஊராட்சி இருந்துச்சு. தொடர்ச்சியா அந்தக் கட்சியைச் சேர்ந்தவங்கதான் ஊராட்சி மன்றத் தலைவராவும் இருந்துவந்தாங்க

கடந்த 1960-70-களில் கீழத்தஞ்சையில், சாதித் தீண்டாமைக்கு எதிராகக் கடுமையான போராட்டங் களை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இன்றைக்கு அதே கீழத்தஞ்சையில், அரசியல் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக கம்யூனிஸ்ட்டுகள்மீதே புகார் எழுந்திருக்கிறது. அதிலும், ‘கட்சி மாறியவரின் சாவுக்குப் போகக் கூடாது’ என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிரவைக்கிறது. திருவாரூர் மாவட்டம், மணலி ஊராட்சியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்கள்.

மணலி ஊராட்சியைச் சேர்ந்தவரும், ‘பசுமைச் சூழல் பாதுகாப்பு இயக்க’த்தின் ஒருங் கிணைப்பாளருமான பருத்திச்சேரி ராஜாவிடம் பேசினோம். ‘‘கடந்த அம்பது வருசத்துக்கு மேல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோட கோட்டையா மணலி ஊராட்சி இருந்துச்சு. தொடர்ச்சியா அந்தக் கட்சியைச் சேர்ந்தவங்கதான் ஊராட்சி மன்றத் தலைவராவும் இருந்துவந்தாங்க. ஆனா, 2019-ல நடந்த உள்ளாட்சித் தேர்தல்ல அ.தி.முக ஆதரவு பெற்ற சுமத்ரா ரவி ஜெயிச்சுட்டாங்க. இதை கம்யூனிஸ்ட்டுகளால பொறுத்துக்க முடியலை. ‘கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து அ.தி.மு.க-வுக்கு மாறிப் போன ஒருத்தர் வீட்டுச் சாவுக்கும் போகக் கூடாது’னு அவங்க கட்சியைச் சேர்ந்தவங்களுக்குக் கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க. சமத்துவமும் முற்போக்கும் பேசுற கம்யூனிஸ்ட்டுகளே இப்படிச் சொல்லியிருக்குறது உச்சகட்ட கொடுமை’’ என்று கொந்தளித்தார்.

பருத்திச்சேரி ராஜா - கவிதா - சாந்தா - பாஸ்கர்
பருத்திச்சேரி ராஜா - கவிதா - சாந்தா - பாஸ்கர்

‘‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலதான் நான் இருந்தேன். கடந்த உள்ளாட்சித் தேர்தல்ல சுயேச்சையா ஜெயிச்சு, அப்புறம் அ.தி.மு.க-வுல சேர்ந்தேன். எங்க நெருங்கிய உறவுக்காரரான விவசாயக் கூலித்தொழிலாளி கண்ணன் உட்பட இன்னும் சிலரும் இந்திய கம்யூனிஸ்ட்டுல இருந்து அ.தி.மு.க-வுக்கு மாறினாங்க. அதனால, மத்த உறவுக்காரங்க எங்ககூடப் பேசுறதை நிறுத்திட்டாங்க. ஈரோட்டுல ஒரு தோட்டத்துல வேலை பார்த்துக்கிட்டிருந்த கண்ணன், கொஞ்ச நாளுக்கு முன்னாடி மின்சாரம் தாக்கி இறந்துட்டாரு. கண்ணனோட பிரேதத்தை இங்கே கொண்டுவர கம்யூனிஸ்ட்டுகள் எந்த உதவியும் செய்யலை. அவரோட சாவுக்கும் அவங்க யாருமே வரலை’’ என்ற ஊராட்சி மன்ற உறுப்பினரான கவிதாவின் குரலில் அதிக ஆதங்கம்.

‘‘அந்தக் கட்சிக்காக நாங்க எவ்வளவோ உழைச்சிருக்கோம். கட்சி மாறிட்டோம்கிற ஒரே காரணத்துக்காக நெருங்கின சொந்தங்களேகூட சாவுக்கு வரலை. இந்தக் கொடுமை எங்கேயாவது உண்டா? கட்சி இன்னைக்கு வரும்... நாளைக்குப் போகும்... மனுஷங்க முக்கியமில்லையா?’’ என்று கலங்கினார் கண்ணனின் மனைவி சாந்தா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி ஒன்றிய சேர்மன் பாஸ்கரிடம் பேசினோம். ‘‘கட்சி மாறியவர்களிடம் நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு நடந்துகொள்வதாகக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. கட்சி மாறினவங்களோட சாவுக்குப் போகக் கூடாதுனு கட்டுப்பாடு விதிச்சதா சொல்றதும் பொய்’’ என்றார்.

“கட்சி மாறியவரின் சாவுக்குப் போகாதே!” - கட்டுப்பாடு விதித்தார்களா கம்யூனிஸ்டுகள்?

‘‘சாவுக்குப் போகக் கூடாதுனு யாராவது கட்டுப்பாடு விதிப்பாங்களா... இதெல்லாம் பொய்யான தகவல்’’ என்று மறுத்தார் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்.

மணலி கம்யூனிஸ்ட்கள்மீது வைக்கப்பட்டிருக்கும் ‘அரசியல் தீண்டாமை’ குற்றச்சாட்டைக் கட்சித் தலைமை சாதாரணமாகப் புறந்தள்ளிவிடக் கூடாது. அது குறித்து தீர விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மையென்றால் அதைச் சரிசெய்ய வேண்டியது அவசர, அவசியம்!