Published:Updated:

அ.ம.மு.கவுக்கு பொதுச்சின்னம்... அ.தி.மு.க விளையாட்டா..? குழம்பும் தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்

உள்ளாட்சித் தேர்தலில் பொதுச் சின்னம் கோரி நீண்ட நாள்களாகப் போராடிவரும் அ.ம.மு.க-வுக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.

அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து மார்ச் 15, 2018-ல் உதயமானது அ.ம.மு.க. சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட அ.ம.மு.க, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னம் வழங்க கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் பொதுச் சின்னம் பெற விரைவிலேயே உயர் நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் கூறினார்.

போலி தேர்தல் ஆணைய அறிவிப்பாணை
போலி தேர்தல் ஆணைய அறிவிப்பாணை

இந்தநிலையில், அ.ம.மு.க-வை பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைத்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாக இன்று வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகியது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் அறிவிப்பாணை போன்ற வடிவத்தில் வெளியாகியுள்ள இந்தக் கடிதத்தில் அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் அரசாணை பட்டியல் 1-A’வில் மாற்றம் செய்யப்படுவதாகவும், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற இரண்டு கட்சிகளையும் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அ.ம.மு.க-வுக்கு பொதுச்சின்னம் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என அக்கட்சியினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால், அப்படியொரு அறிவிப்பாணையை வெளியிடவில்லை என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், ``அ.ம.மு.க-வுக்கு பொதுச்சின்னம் வழங்க முடியாது, சின்னம் ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்கலாம் என அக்கட்சியினரிடம் தெளிவுபெற கூறிவிட்டோம். அவர்களும் நீதிமன்றம் மூலமாக பொதுச் சின்னம் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில், அக்கட்சியைப் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைத்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானது. அப்படி எந்த அறிவிப்பையும் இதுவரையில் நாங்கள் வெளியிடவில்லை” என்று மறுத்தனர்.

வெற்றிவேல்
வெற்றிவேல்

இதே கருத்தை நம்மிடம் கூறிய அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல், ``தேர்தல் ஆணையம் எங்களுக்கு பொதுச்சின்னம் வழங்கிவிட்டதாகப் பரவும் தகவல் வெறும் வதந்திதான். சிலர் திட்டமிட்டே எங்கள் கட்சியினரை குழப்புவதற்காக இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புகிறார்கள். ஆளுங்கட்சியின் ஆதரவில் செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு சின்னம் வழங்கிவிடுமா என்ன?” என்றார்.

மாணவரைக் காக்க மனித கேடயமான மாணவிகள்! - ஜாமியா போராட்டத்தில் கவனம் ஈர்த்த கேரள மாணவி #video

இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க உட்பட பல கட்சிகளுக்கு ஆளுங்கட்சி கடும் நெருக்கடியைக் கொடுப்பதாக அ.ம.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும் அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளருமான தாம்பரம் நாராயணன் நம்மிடம் கொந்தளித்தார். ``உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரிகளே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. வேட்புமனுவிலேயே வேட்பாளர் மீதுள்ள குற்ற விவரங்கள் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.

அ.ம.மு.க-வை குழப்புவதன் மூலம், கட்சியினரின் மனோ தைரியத்தை சீர்குலைக்கும் வேலையை ஆளுங்கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
டி.டி.வி.தினகரன்

இதுபோதாதென்று பல அதிகாரிகள் அந்தந்தப் பகுதி காவல்நிலையங்களிலிருந்து தடையில்லா சான்று (என்.ஓ.சி) பெற்று வரச் சொல்லி வேட்பாளர்களைக் கட்டாயப்படுத்து கின்றனர். இப்படிச் சான்றளிக்க வேண்டுமென்று அவசியமில்லை. நான் பொறுப்பாளராக உள்ள கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மற்றும் குளித்தலை ஊராட்சி ஒன்றியங்களில் என்.ஓ.சி கேட்டு திருப்பி அனுப்பப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் ஏராளம். ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் அளிக்க பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை கண்காணிக்கவே அ.ம.மு.க-வில் இளைஞர் பட்டாளத்தை ஒவ்வொரு கிராமத்திலும் களமிறக்கியுள்ளோம்.

தாம்பரம் நாராயணன்
தாம்பரம் நாராயணன்

எங்கள் கரூர் மாவட்டச் செயலாளர் தங்கவேலுவின் மனைவி பிரபா, அரவக்குறிச்சி தாலுகா வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார். இவரைப் போன்று சொந்த ஊரில் செல்வாக்காக இருப்பவர்களையே தேர்ந்தெடுத்து களமிறக்குகிறோம். சிறிய கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களை அ.தி.மு.க-வினர் விலைபேசி வாங்கிவிடுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் வியாபாரம்தான் நடைபெறுகிறது” என்று கொந்தளித்தார்.

இந்தப் போலி அறிவிப்பாணையைத் தயாரித்து வெளியிட்டிருப்பது அ.தி.மு.க-வின் ஐ.டி விங்தான் என்பது அ.ம.மு.க-வின் குற்றச்சாட்டு. பொதுச் சின்னம் தொடர்பாகப் பரவும் வதந்தியால் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் அதிருப்தியடைந்துள்ளாராம்.

‘அ.ம.மு.க-வை குழப்புவதன் மூலம், கட்சியினரின் மனோ தைரியத்தை சீர்குலைக்கும் வேலையை ஆளுங்கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் தலைமைக் கழகத்திலிருந்து வந்தால் மட்டும் நம்புங்கள். இந்த உள்ளாட்சித் தேர்தல் கிராமத்தில் நாம் காலூன்ற மட்டுமல்ல, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதுதான் அச்சாரம்’ என்று கட்சியினரிடம் கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன.

அடுத்த கட்டுரைக்கு