Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: 23 வயது உறவினருக்கு கொரோனா தடுப்பூசி! - தொடர் சர்ச்சையில் தேவேந்திர பட்னாவிஸ்

உறவினருடன் பட்னாவிஸ்
உறவினருடன் பட்னாவிஸ்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் 23 வயது உறவினர், தான் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டதாகக் கூறி போட்டோவை வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவதால், மாநில அரசு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதுவரை அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருந்தன. ஆனால் இதில் எந்தவிதப் பயனும் ஏற்படாததால், மாநில அரசு கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி காலை 7 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும். இது தொடர்பாக முறைப்படி இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 21-ம் தேதியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக பயனளிக்காத காரணத்தால் முழு லாக்டெளன் கொண்டுவருவது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்துவருகிறது. இது தொடர்பாக ஓரிரு நாள்களில் முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

உறவினருடன் பட்னாவிஸ்
உறவினருடன் பட்னாவிஸ்

இதற்கிடையே மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவிலுள்ள சிவசேனா கூட்டணி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டிவருகிறார். அதேசமயம், கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தை பா.ஜ.க தலைவர்கள் பதுக்கி வைத்துக்கொண்டு செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே தேவேந்திர பட்னாவிஸின் உறவினரான 23 வயது டென்மே பட்னாவிஸ் தான் இரண்டு தடுப்பூசியையும் போட்டுக்கொண்டேன் என்று கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

மத்திய அரசு 45 வயதுக்கு அதிகமானவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 45 வயதுக்கு குறைவான மருத்துவப் பணியாளர்களும், முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டென்மே பட்னாவிஸ் அது போன்று மருத்துவப் பணியாளராக இல்லாத நிலையில் 23 வயதில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். முதல் ஊசியை மும்பையிலும், இரண்டாவது ஊசியை நாக்பூரிலும் போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து சர்ச்சை எழுந்ததால் உடனே அந்தப் பதிவை டென்மே பட்னாவிஸ் நீக்கிவிட்டார்.

மகாராஷ்டிராவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் பா.ஜ.க தலைவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருந்தைப் பதுக்கிவைத்து போட்டுக்கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தனது ட்விட்டரில், டென்மே பட்னாவிஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இக்குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. மோடி அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என்று கூறுகிறது. அப்படி இருக்கும்போது தேவேந்திர பட்னாவிஸின் 23 வயது உறவினர் எப்படி தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பா.ஜ.க தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உயிர்தான் முக்கியம். சாமானிய மக்களின் உயிர் முக்கியமில்லை என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

இதற்கு விளக்கமளித்துள்ள பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராம்கதம், ``டேன்மே பட்னாவிஸ் தேவேந்திர படனாவிஸின் தூரத்து உறவினர் என்பதை மிரட்டி பணம் பறிக்கும் அரசு மறந்துவிடக் கூடாது. உறவினர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடுவாக இருந்தால் பட்னாவிஸ் தனது மனைவிக்கு முதலில் போடச் செய்திருப்பார்” என்றார். ஆனால் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீவஸ்தவா தனது ட்விட்டர் பக்கத்தில், ``23 வயதாகும் டென்மே பட்னாவிஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் மூலம் குற்றம் செய்துள்ளார். அவரை உடனே கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகளைப் பதுக்கிவைத்ததாக ஒரு சர்ச்சை பட்னாவிஸைச் சுற்றிவரும் நிலையில் தற்போது இந்த சர்ச்சை பட்னாவிஸுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் கொரோனாவைவைத்து ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியல் செய்துவருவது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. மக்கள் ஆக்ஸிஜன் மற்றும் கொரோனா மருந்து கிடைக்காமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் இதிலும் அரசியல் செய்வதாகப் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு