Published:Updated:

மணியரசனின் பெயர் டேவிட்டா?! அவர் பின்னணி என்ன? கே.டி.ராகவனின் வாதமும் பெ.மணியரசனின் எதிர்வாதமும்

ராகவன் - மணியரசன்
ராகவன் - மணியரசன்

``தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமா சம்ஸ்கிருதத்தில் நடத்த வேண்டுமா... என்பதை ஆகமவிதிகள் அறிந்த இந்து சமயப் பெரியவர்கள் முடிவெடுக்கட்டும்... கடவுள் நம்பிக்கையே இல்லாத இவர்கள் ஏன் அதில் மூக்கை நுழைக்க வேண்டும்?’’

``தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழில்தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார்கள்... இதை நடத்துபவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஆனால், கிறிஸ்துவரான டேவிட் மணியரசன்...

`மணியரசனை தமிழ் ஆர்வலர் மட்டுமே என்று நினைத்தவர்களுக்கு இல்லை, அவர் வெறும் மணியரசன் இல்லை டேவிட் மணியரசன் என்று தெளிவுபடுத்தியது 21.01.2020 விகடன் இதழுக்கு அவர் மனைவி கொடுத்த பேட்டிதான்’ என பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் தன் முகநூல் பக்கத்தில் இட்ட பதிவு, கடும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு, தஞ்சைப் பெரிய கோவியில் மீட்புக்குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் பற்றித்தான் ராகவன் இப்படியொரு பதிவைப் பகிர்ந்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறவிருக்கிற குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் எனத் தொடர்ச்சியான போராட்டங்களை பெ.மணியரசன் முன்னெடுத்து வருகிறார். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் கே.டி.ராகவன் இப்படியொரு பதிவில் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

ராகவனின் பதிவு
ராகவனின் பதிவு

அதோடு, ``கிறிஸ்துவரான டேவிட் மணியரசன் இந்து ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்..?

தஞ்சையில் 01.02.2020 அன்று நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் டேவிட் மணியரசு, முஸ்ஸிம் லீக் மற்றும் இஸ்லாமிய அமைப்பான மனித நேய மக்கள் கட்சிக்கு என்ன வேலை...?

கும்பாபிஷேகம் எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்து ஆன்மீக அன்பர்கள் முடிவு செய்யட்டும்... நீங்கள் யார் இதைப் பற்றிப் பேச..?'' என மூன்று கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

ராகவனின் இந்தப் பதிவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

''எமர்ஜென்சி காலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதுதான் மணியரசனுக்கு டேவிட் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதை அவரின் உண்மையான பெயர் என கே.டி.ராகவன் திரித்து பதிவிட்டுள்ளார். அதையே பா.ஜ.க தொண்டர்களும் பின்பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்றும், சீமானை செபாஸ்டியன் சைமன் என்றும் குறிப்பிட்டுப் பேசி சமூகத்தில் விஷத்தை விதைத்தவர்கள்தாம் இப்போது பிறப்பிலும் வாழ்க்கை முறையிலும் இந்துவான மணியரசனுக்கு டேவிட் எனப் பெயர் வைத்துப் பரப்பி வருகிறார்கள்’’ எனக் கொந்தளிக்கிறார்கள் அவர்கள்.

மேற்கண்ட பதிவு குறித்தும் அதற்கான எதிர்வினைகள் குறித்தும் விளக்கம் கேட்க கே.டி.ராகவனைத் தொடர்பு கொண்டோம்...

'' மணியரசனின் மனைவி கொடுத்த ஒரு பேட்டியில் டேவிட் என்பவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்றுதான் சொல்லியிருக்கிறார். எமர்ஜென்சிக்காக மாற்றப்பட்ட பெயர் டேவிட் என்று அவர் சொல்லவில்லை. அவர் கிறிஸ்துவர் என்கிற விஷயம் வெளியில் தெரிந்த பிறகு, அது புனைப்பெயர் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

அடுத்ததாக ராஜராஜ சோழன் கல்வெட்டில் தமிழ், சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும்தான் குறிப்புகள் உள்ளன. தமிழ் மட்டுமே இருக்க வேண்டும்... சம்ஸ்கிருதம் கூடாது என எங்குமே சொல்லவில்லை. அதைவிட முக்கியமாக மணியரசனுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. அவர் ஏன் கோயில் கும்பாபிஷேக விஷயத்தில் தலையிடுகிறார் என்பதே என் கேள்வி.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

தமிழ்ப்பற்று காரணமாகத்தான் போராடுகிறார்கள் என்றால் சர்ச்சுகளில் மசூதிகளில் தமிழில் வழிபடுவதில்லை, அதை எதிர்த்து இவர்கள் ஏன் போராடுவதில்லை... அது அவர்களின் உரிமை அதில், தலையிடக்கூடாது என்பதே என் கருத்தும். ஆனால், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளை இணைத்துக்கொண்டு தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனப் போராட்டம் நடத்துகிறார் மணியரசன். அது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும். இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமா, சம்ஸ்கிருதத்தில் நடத்த வேண்டுமா என்பதை ஆகம் விதிகள் அறிந்த இந்து சமயப் பெரியவர்கள் முடிவெடுக்கட்டும். கடவுள் நம்பிக்கையே இல்லாத இவர்கள் ஏன் அதில் மூக்கை நுழைக்க வேண்டும் என்பதே என் கேள்வி'' என்கிறார் கே.டி.ராகவன்.

கே.டி.ராகவனின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க பெ.மணியரசனிடம் பேசினோம்...

''எங்களுடைய குலதெய்வம் ஶ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற வீரேசுவரம் பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில்தான். எங்கள் குடும்பம் செலுத்த வேண்டிய மரபுக்காணிக்கை இருக்கிறது. என் அப்பாவுக்குப் பிறகு, என் தம்பிதான் அதைச் செலுத்தி வருகிறார். கே.டி.ராகவன் வேண்டுமானால், அங்கு சென்று தெரிந்துகொள்ளட்டும். அதுவும் முடியாவிட்டால், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மாவட்டம், ஆச்சாம்பட்டிதான் என்னுடைய சொந்த ஊர். அங்கு சென்று விசாரித்தாலும் என்னைப் பற்றிய முழு விவரங்களும் தெரியவரும்.

நான் இந்துதான். ஒருவேளை நான் கிறிஸ்துவராக இருந்தால் என்ன குற்றம், என்ன தவறு. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் மொழிக்கான உரிமைப் போராட்டங்களில் கலந்துகொள்ளும் உரிமை உண்டு. அதன்படி கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் வேறுபட்டாலும் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். அவர்கள் தமிழர்கள்தாம். அந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் இணைந்து போராடுகிறார்கள். எங்களின் போராட்டத்துக்கு அவர்கள் துணை நிற்கிறார்கள் அவர்கள் போரட்டத்தை முன்னெடுக்கவில்லை.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

இந்துக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என நாங்கள் எப்படிப் போராடுகிறோமோ, அதேபோல நாளை மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என அந்த மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் போராடும்போது நாங்கள் துணை நிற்போம். ஆனால், அந்தப் போராட்டத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து வருகிறோம். நாங்கள் எங்கள் தாய்மொழிக்காகப் போராடுகிறோம். தமிழர் மரபுவழிப்பட்ட ஆன்மிகத்துக்காகப் போராடுகிறோம். ஆனால், தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பற்றிப் பேச கே.டி.ராகவனுக்கு என்ன உரிமை இருக்கிறது... அவர் எதற்காகப் போராடுகிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும்.

`நானும் கலைஞரின் பிள்ளைதான், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!' -பிறந்தநாளில் கடுகடுத்த மு.க.அழகிரி

எமர்ஜென்சி காலத்தில் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். அப்போது நெருக்கடிகளின் காரணமாகக் கட்சியில் சில தோழர்கள் தலைமறைவாக கட்சிப் பணியாற்ற வேண்டிய தேவை இருந்தது. அப்போது நான் தலைமறைவாகச் செயல்பட கட்சியின் சார்பாகத் தேரந்தெடுக்கப்பட்டேன். ஒருவருடம் தலைமறைவாக இருந்தேன். அப்போதுதான் எனக்கு டேவிட் எனப் பெயர் வைத்தார்கள். அப்போதுதான் எனக்குத் திருமணமும் நடந்தது. அதுகுறித்து என் மனைவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதைத்தான் தற்போது கே.டி.ராகவன் எடுத்து பகிர்ந்து வருகிறார். நான் தலைமறைவாக இருந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜனின் பொறுப்பில்தான் இருந்தேன். அவரிடம் வேண்டுமானால் ராகவன் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

ராகவன் குறிப்பிட்ட துண்டறிக்கை.
ராகவன் குறிப்பிட்ட துண்டறிக்கை.

கடந்த ஜனவரி 22-ம் தேதி, தஞ்சாவூரில் எங்கள் இயக்கத்தின் சார்பாக மாநாடு நடத்தினோம். அதில், கரூர் சித்தர் வழிவந்த பொன்னுச்சாமி அடிகளார், முத்துராச மூர்த்தி அடிகளார், சத்யபாமா அம்மா ஆகிய ஆன்மிகப் பெரியவர்கள்தாம் முன்னிலை வகித்தார்கள். ஆகம அறிஞர் சத்யவேல் முருகனார் தமிழில்தான் குடமுழுக்கு வழிபாடு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர் ஆன்மிகப் பெரியவர்தானே. துண்டறிக்கையில் இஸ்லாமியப் பெயர்களைப் பார்த்த ராகவன், இந்துமத ஆன்மிகப் பெரியவர்களின் பெயர்களைப் பார்க்கவில்லையா... அதைவிடுங்கள். நான் இந்துதானே. எனக்கு அந்த உரிமை இருக்கிறது தானே... நாத்திகரான மணியரசன் ஏன் கோயில்கள் பற்றி பேச வேண்டும் எனக் கேட்கிறார் ராகவன். இந்து மதத்தில் நாத்திகத்துக்கும் இடம் உண்டுதானே... ராகவனுக்கு அது தெரியாதா?

ராகவனின் பூர்வீகமொழி சம்ஸ்கிருதம் என அவர் கருதுகிறார். அந்த மொழிதான் தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அந்த மேலாதிக்கத்துக்கு ஒரு பாதிப்பு வருகிறதே என்பதற்காகத்தான் ராகவன் கொந்தளிக்கிறார், பயப்படுகிறார் வேறொன்றும் இல்லை'' என்கிறார் மணியரசன்.

தமிழில் குடமுழுக்கு...
தஞ்சையில் இடி முழக்கம்!
பின் செல்ல