Published:Updated:

`வீர் சாவர்க்கர் கித்னா வீர்’- சர்ச்சை புத்தகத்தால் காங்கிரஸ்-சிவசேனா கூட்டணிக்குள் மோதல்!

காங்கிரஸ் வெளியிட்டுள்ள 
 வீர் சாவர்க்கர் புத்தகம்
காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீர் சாவர்க்கர் புத்தகம்

காங்கிரஸ் கட்சி தன் மனதுக்குள் அழுக்கை வைத்துக்கொண்டு வீர் சாவர்க்கரைத் தொடர்ந்து அவமதித்து வருகிறது என்று பாரதிய ஜனதா, சிவசேனா கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீர் சாவர்க்கர் பற்றி போபாலில் வெளியிடப்பட்ட புத்தகத்தால் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. புத்தகத்துக்குத் தடை விதிக்க வேண்டுமென்று பாரதிய ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த மாதத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'ரேப் இன் இந்தியா' என்று பேசியதால் சர்ச்சைவெடித்தது. நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். ராகுலின் பேச்சுக்கு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நெருக்கடி கொடுத்தனர். ஆனால், 'நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் அல்ல' என்று ராகுல் காந்தி பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கு பதிலடி கொடுத்தார். சுதந்திர போராட்டத்தின்போது வீர் சாவர்க்கர் அந்தமானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் விடுதலை பெறுவதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. வீர் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை குறிப்பிடும் வகையில், ராகுல் காந்தி இப்படிப் பேசினார்.

காங்கிரஸ் கட்சி இன்னும் எத்தனை காலம்தான் நாட்டுக்காகப் போராடிய மாமனிதரை அவமதித்துக்கொண்டிருக்கும்.
ஸ்மிரிதி இரானி

ராகுல் காந்தி பேசிய சர்ச்சை ஓய்வதற்குள், புதிய சர்ச்சை வெடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சேவா தளம் சார்பில் தொண்டர்களுக்கு 'வீர் சாவர்க்கர் கித்னா வீர்' என்ற புத்தகம் விநியோகிக்கப்பட்டது. புத்தகத்தில் வீர்சாவர்க்கருக்கும் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கும் உடல்ரீதியான தொடர்பு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் சிறையில் இருந்து விடுதலை பெற்ற வீர் சாவர்க்கர் ஆங்கிலேய அரசிடமிருந்து பணம் பெற்றதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

லேரி கோலின்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய ''Freedom at Midnight” புத்தகத்தில் இந்தத் தகவல் இருந்ததாக சேவா தளம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளால், மகாராஷ்டிரத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சித் தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

`வீர் சாவர்க்கர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். எழுத்தாளர், வழக்கறிஞர், இந்துத்துவவாதி என அவருக்கு பல முகங்கள் உண்டு. 'வீர் சாவர்க்கரை அவமதித்ததன் மூலம் மராத்திய மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி அவமதித்துள்ளது' என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்துப் பேசிய ஸ்மிரிதி இரானி, 'காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வீர் சாவர்க்கரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறது. மராத்திய மக்களுக்கும் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டும் ' என்று கொந்தளித்துள்ளார்.

சிவசேனா கட்சியும் காங்கிரஸ் மீது பாய்ந்துள்ளது. இந்தக் கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத், ''காங்கிரஸ் கட்சி மனதுக்குள் அழுக்கை வைத்துக் கொண்டு சுதந்திரத்துக்காகப் போராடிய வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகிறது. சிலர் தொடர்ந்து வீர் சாவர்க்கருக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். வீர் சாவர்க்கர் அப்போதும் மாமனிதர்தான் இப்போதும் மாமனிதர்தான்'' என்று கடுமை காட்டியுள்ளார்.

`மெஜாரிட்டி அ.தி.மு.க, 3 இடங்களில் பா.ஜ.க.!' -செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த கரூர் நிலவரம்

மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பது ஊரறிந்த ரகசியம். வீர் சாவர்க்கர்போல, சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் காங்கிரஸ் கட்சியிலேயே கிடையாது. காந்தி கொலை வழக்கில் இருந்து வீர் சாவர்க்கர் விடுவிக்கப்பட்ட பிறகும், அவரைக் குற்றவாளியாகச் சித்திரிப்பதை காங்கிரஸ் கட்சி வழக்கமாகக் கொண்டுள்ளது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ரஞ்சித் சாவர்க்கர்
ரஞ்சித் சாவர்க்கர்

ஜோத்பூரில் சி.ஏ.ஏ ஆதரவுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''இந்தியா பெற்றெடுத்த உன்னத மகனை காங்கிரஸ் கட்சி தன் அரசியல் காரணத்துக்காக, ஓட்டு வங்கிக்காக அவமானப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சி செய்யும் வெட்கக்கேடான காரியங்களுள் இதுவும் ஒன்று' என்று காட்டமாகப் பேசியுள்ளார். இந்து மகாசபையோ, 'ராகுல் காந்திதான் அந்த மாதிரியான உறவில் ஆர்வம் கொண்டவர்' என்று பதிலடி கொடுத்துள்ளது.

இதற்கிடையே, தன் தாத்தா குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருவதால், வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கருக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகரித்தது. இதை தொடர்ந்து, அவர் மாஹிம் பகுதியில் உள்ள ரஹேஜா மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளளார். மருத்துவர்கள் ரஞ்சித் சாவர்க்கரின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு