Published:Updated:

`ஈகோவால் நீக்கப்பட்டாரா திருச்சி மாவட்டத் தலைவர்?’ - விஜய் மக்கள் இயக்க சர்ச்சை

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டத் தலைவராக இருந்த ராஜா, நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

`விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ராஜா. நேற்று திடீரென ராஜாவை, தலைவர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுமார் 10 ஆண்டுக் காலமாக மாவட்டப் பொறுப்பிலிருந்த ராஜா, திடீரென நீக்கப்பட்டிருப்பது விஜய் மக்கள் இயக்கத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.``தளபதி விஜய் மக்கள் இயக்கத்துக்குக் கௌரவ தலைவர் மற்றும் பொருளாளராகவும் இருப்பவர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான். கடந்த சில வருடங்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாட்டில் தன் தந்தை தலையிடுவதை நடிகர் விஜய் விரும்பவில்லை. இதன் காரணமாகக் கடந்த சில வருடங்களாக மக்கள் இயக்கத்தைப் பொறுத்தவரையில், மாநிலப் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் சொல்வதை மட்டுமே விஜய் கேட்டு வருகிறார். எஸ்.ஏ.சந்திரசேகருடன் எந்த மாவட்டத் தலைவரும் தொடர்பில் இருப்பதை புஸ்ஸி ஆனந்த் விரும்பவில்லை. அந்த வகையில், கிட்டத்தட்ட 95 சதவிகித நிர்வாகிகளைத் தனது கட்டுப்பாட்டில் ஆனந்த் கொண்டு வந்துவிட்டார்.

திருச்சி மாவட்டத் தலைவராக இருந்த ராஜா ஆரம்பத்திலிருந்தே எஸ்.ஏ.சந்திரசேகரோடு தொடர்பில் இருப்பவர். பல முறை சொல்லியும் கேட்காததால்தான் அவர் நீக்கப்பட்டிருக்கிறார். `உங்க அப்பாவிடம் எங்களைப் பற்றி பேசக்கூடாது’ எனபுஸ்ஸி ஆனந்த் கூறுகிறார்.'

நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த்
நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த்

என விஜய்யிடம் நேரடியாகப் புகார் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. `ஆனந்த் சொல்வதைக் கேளுங்கள்' எனச் சொல்லிவிடுகிறார். அப்பா - மகன் ஈகோதான் ராஜா நீக்கப்பட்டதற்குக் காரணம்" என்கின்றனர்.

ராஜா நீக்கம்
ராஜா நீக்கம்

திருச்சி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம். ``பெரிய கட்சிகளில் உள்ள கோஷ்டி பூசல்களைவிட இங்கு அதிக அளவில் நடந்துகொண்டிருக்கிறது. நடிகர் விஜய் மக்கள் இயக்கத்துக்குக் கௌரவத் தலைவர் மற்றும் பொருளாளராகவும் இருப்பவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில், சந்திரசேகர் மூலமாகத்தான் ராஜா இப்பதவிக்கு வந்துள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக அவருடன் நல்ல தொடர்பில் இருந்துவருகிறார். இந்நிலையில் கொஞ்ச நாள்களுக்கு முன்பு நடிகர் விஜய்யும் அவரின் தந்தை சந்திரசேகரும் பேசிக்கொள்வதில்லை.

இதைத்தொடர்ந்து,`எந்த நிகழ்ச்சியிலும் சந்திரசேகரின் போட்டோக்களைப் போட வேண்டாம்' என்று தலைமையிலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. முக்கால்வாசி மாவட்டங்களில் இதைத் தவிர்த்துவிட்டார்கள். ஆனால், ராஜா, பில்லா ஜெகன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் அப்பாவின் படங்களைப் போட்டுப் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர்.

சந்திர சேகருடன் ராஜா குடும்பத்தினர்.
சந்திர சேகருடன் ராஜா குடும்பத்தினர்.

இது மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்துக்குப் பிடிக்கவில்லை. அதேபோல் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவியாக இருக்கும் தேவி என்பவர் அவரின் மகளுக்குத் திருமணம் முடிந்து நேர்த்திக்கடனுக்காகத் திருச்செந்தூர் சென்றிருக்கிறார். ஊரடங்கு அறிவித்த நேரத்தில் கையில் காசு இல்லாமல் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டிருக்கிறார். அப்போது மாவட்டச் செயலாளருக்கும் புஸ்ஸி ஆனந்த்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்கள் எதுவும் உதவி செய்யவில்லை.

இந்நிலையில், திருச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவரும் சேர்ந்துதான் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். தேவி சென்னைக்கு வந்ததும், 'பில்லா ஜெகன், ராஜா, இவர்கள் இல்லையென்றால் நாங்கள் நடுத்தெருவில் நின்றிருப்போம்' என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். இதுதான் மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்துக்குப் பிடிக்கவில்லை. இதுபோல் இன்னும் இரண்டும் மூன்று சம்பவங்கள் இருக்கின்றன. மாவட்டத் தலைவர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தளபதி விஜய்யிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ராஜாவைத் தூக்கியிருக்கிறார்கள். இவருக்கு வேண்டியவர்களைக் கையில் வைத்துக்கொண்டு வேண்டாதவர்களைத் தூக்கிக் கொண்டிருக்கிறார் அவர். புஸ்ஸி ஆனந்த் இருந்தால் கண்டிப்பாக விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மலராது’’ என்று முடித்துக்கொண்டார்.

விஜய்
விஜய்

இதுகுறித்து திருச்சி மாவட்டத் தலைவர் ராஜாவிடம் பேசினோம்.``நான் இளைய தளபதியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவன். தற்போது என்னைக் கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். ஏன்? எதற்காக நீக்கினார்கள் என்று தெரியவில்லை. கூடிய விரைவில் தளபதியைச் சந்தித்து எனது கருத்தைத் தெரிவிக்க இருக்கிறேன். கடுகு அளவும் அவருக்குத் துரோகம் நினைக்காதவன் நான் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மற்ற எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் உங்களிடம் பேசத் தயாராக இல்லை’’ என்று முடித்துக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்தை பலமுறை தொடர்புகொள்ள முயன்றோம். அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். பதிலளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் பதிவு செய்யத் தயராகவே இருக்கிறோம்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

அடுத்தாகத் தகவலைச் சொல்லி நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசினோம்.``தம்பி இச்சம்பவம் தொடர்பாக நான் எதுவும் பேசுவதாக இல்லை. என்னிடம் வேறு எதுவும் கேட்காதீர்கள்’’ என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு