Published:Updated:

நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்: முத்தரசன் கோரிக்கையும் கூட்டுறவு சம்மேளன தலைவரின் விளக்கமும்!

கூட்டுறவு வங்கி

நகைக்கடன் பெற்ற 48 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில், சுமார் 10 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்: முத்தரசன் கோரிக்கையும் கூட்டுறவு சம்மேளன தலைவரின் விளக்கமும்!

நகைக்கடன் பெற்ற 48 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில், சுமார் 10 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

Published:Updated:
கூட்டுறவு வங்கி

நாட்டிலேயே கூட்டுறவு சங்கங்கள் வலுவாக உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதேநேரம், மற்ற மாநிலங்களைவிட கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடப்பதிலும் தமிழகம் முந்திச் செல்கிறது என்கிறார்கள் விவரமறிந்த சிலர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் மட்டும் ரூ.2,000 கோடிக்கும் மேலாக ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கொதிக்கிறார்கள் காம்ரேடுகள். அதில் நகைக்கடனும் ஒன்று.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி ஆட்சி முடியும் தறுவாயில், கூட்டுறவு சங்கங்களில் நகை அடமானம் வைத்து பெறப்பட்டுள்ள நகைக்கடன் மற்றும் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதையே தி.மு.க-வும் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதன்படி, ஆட்சி அமைந்ததும் 5 பவுனுக்குக் கீழ் நகை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக்கடனைத் தள்ளுபடி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், முறைகேடுகள் நடந்திருப்பதால் அது பற்றி ஆராய்ந்து தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவித்தனர். அதன்படி, 48,84,726 நகைக்கடன்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், வெறும் 10,18,066 நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 35,37,693 நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் முதலவர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதலவர் மு.க.ஸ்டாலின்

இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், ``சுமார் 72 சதவிகித நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்பது வருத்தமளிக்கிறது. ஏ.ஏ.ஒய் என்றழைக்கப்படும் மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் நகைக்கடனை மட்டுமாவது தள்ளுபடி செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

முத்தரசன்
முத்தரசன்

நூறில் வெறும் 28 சதவிகித நகைக்கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதற்கான காரணம் குறித்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு சம்மேளனம் (சி.ஐ.டி.யூ) தலைவர் கிருஷ்ணமூர்த்திடம் கேட்டோம். ``பல கடன்கள் வைத்திருந்தால் தள்ளுபடி கிடைக்காது. ஒரு நபர் ஒரே ஆதார் அட்டை மூலம் பல கடன் பெற்றிருந்தால் அவருக்குத் தள்ளுபடி கிடைக்காது. மத்திய, மாநில அரசு ஊழியராக இருந்தால் அவருக்குத் தள்ளுபடி கிடையாது. 5 பவுனுக்கு மேல் நகை அடமானம் வைத்திருந்தால் அவருக்கும் தள்ளுபடி சாத்தியமில்லை. ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் நகைக்கடன் பெற்றிருந்தால் ஒருவருக்குத்தான் தள்ளுபடி கிடைக்கும். ஒரே நபர் ஒன்றும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தாலும் தள்ளுபடி இல்லை.

நகைக்கடன் தள்ளுபடி எனக் கடந்த ஆட்சி இறுதியில் அறிவிக்கப்பட்ட பின்னர், எப்படியும் தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்று சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மேற்கு மாவட்டங்களில் மட்டும் அதிகப்படியான நகைக்கடன் பெறப்பட்டது. ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியையும் முதல்வர் அறிவித்தார். பயிர்க்கடனில் நகைக்கடனும் ஓரளவு இருக்கும். பயிர்க்கடன் வாங்கக்கூடியவர்கள் பயிருக்கும் நகைக்கடன் பெற்றிருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் இரண்டு நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நகைக்கடன் பெற்றிருந்தால் அதுவும் தள்ளுபடி செய்யப்படாது.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

கூட்டுறவு சங்கம் ஒவ்வொன்றிலும் 11 இயக்குநர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க-வினர்தான். அவர்கள் பெற்ற நகைக்கடனும் தள்ளுபடிப் பட்டியலில் இல்லை. இப்படியாக ஆராய்ந்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் குறைவான நபர்களுக்கு தள்ளுபடி என்பதாகத் தெரிகிறது.

முத்தரசன் சொல்வதும் சரியான பாயின்ட்தான். ஆனால், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் ஏ.ஏ.ஒய்., பி.ஹெச்.ஹெச்., என்.பி.ஹெச்.ஹெச் உள்ளிட்ட ஐந்து வகையான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

மத்திய அரசின் விளக்கத்தின்படி பார்த்தால் மாதம் வெறும் 10,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்கூட வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிடுகிறார். அதனால், இது பற்றி தெளிவான ஒரு முடிவு எட்டப்படாத வரை இது சாத்தியமா என்பது தெரியவில்லை" என்று முடித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் விளக்கம் பெற தொடர்புகொண்டோம். ஆனால் அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. இந்த விவகாரத்தில் அவர் தனது விளக்கத்தைத் தரும் பட்சத்தில், அதை உரிய பரிசீலனைக்குப் பின் பதிவிடத் தயாராக இருக்கிறோம்!