Published:Updated:

கொரோனா வைரஸ்: `மூச்சுத்திணறும் தேசம்’ - இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய அரசு

கொரோனா
News
கொரோனா ( AP )

மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில், அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும் மோசம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால், டெல்லியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் நால்வரில் ஒருவருக்கு கொரோனா என்பது இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல.

``ஒரு பெரும் புயல் வந்துகொண்டிருக்கிறது. நாம் கைகளில் குடையைவைத்து அதை எதிர்கொள்ள யத்தனிக்கிறோம்’’, ``உலகின் மிகப்பெரிய மைதானம், உலகின் உயரமான சிலை எனப் பெருமை பீற்றினோம். ஆனால், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் தவிக்கிறோம்.” - இவை கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் இடுகைகள்.

சமூக ஊடகங்கள் நிதர்சனத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. மத்திய அமைச்சர் ஒருவரே தன் உறவினருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாதது குறித்து ட்வீட் செய்திருந்தார் என்றால் நிலைமையைப் பார்த்துக்கொள்ளுங்கள். (பின்னர் அந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.)

ஆம்… கைமீறிப்போயிருக்கிறது கொரோனாவின் இரண்டாம் அலை!

பிரதமர் மோடி கூறியதுபோல கொரோனா பரவல் தொற்று பரவத் தொடங்கியபோது இருந்த நிலை இப்போது இல்லை. நமக்கு அப்போது என்ன செய்வது என்று தெரியாது. கையுறைகள் இல்லை. தேவையான முகக் கவசங்கள் இல்லை. தடுப்பு மருந்து இல்லை. இதை எதிர்கொள்ளத் தேவையான அனுபவமும் இல்லை. ஆனால், புயல் வேகத்தில் எல்லாவற்றையும் தயாரித்தோம். தன்னிறைவை அடைந்து, வேண்டிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையைக்கூட அடைந்தோம். ஆனால், நமக்குக் கிடைத்த அனுபவத்தை நாம் பயன்படுத்திக்கொண்டோமா?

கொரோனா சோதனை
கொரோனா சோதனை
AP

சர்வதேச நிலையும், இந்தியாவின் நிலையும்...:

இன்றைய காலை நிலவரப்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 கோடிக்கும் மேல். இதில் 3.1 கோடி என்ற எண்ணிகையுடன் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடி, மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1.7 லட்சம்.

மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில், அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும் மோசம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால், டெல்லியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் நால்வரில் ஒருவருக்கு கொரோனா என்பது இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொரோனா
கொரோனா

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் இப்போதுள்ள ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஆயிரத்துக்கும் கீழ்தான். மக்கள்தொகையில் நம்மைப் போன்ற நாடுதான் சீனாவும். எப்படி அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது... நாம் எங்கே தவறினோம்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெரிய நாடான சீனாவின் கதை இதுவென்றால், சிறிய நாடான இஸ்ரேல், இனி பொது இடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை என முடிவெடுத்திருக்கிறது. ஆம், தடுப்பு மருந்தை அதிக அளவில் மக்களுக்குச் செலுத்திய நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் இனி பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தேவையில்லை.

இஸ்ரேல் சமாளித்தது எப்படி?

இஸ்ரேலும் ஒரு சமயத்தில் கொரோனாவை எதிர்க்கொள்ள முடியாமல் திணறிய தேசம்தான். சொல்லப்போனால் கொரோனாவால் சூழப்பட்ட தேசமும்கூட. அண்டை நாடுகளான இரான், இராக் என கொரோனா தொற்று மிகுதியாக இருந்த நாடுகளை எல்லையில்கொண்டிருக்கும் நாடு இது.

இஸ்ரேல்
இஸ்ரேல்
Oded Balilty

சரி… எப்படி அவர்கள் கொரோனாவைச் சமாளித்தார்கள்? மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள், தடுப்பூசியை அதிக அளவிலான மக்களுக்குக் கொடுத்தார்கள்.

இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷெபா மருத்துவ மையத்தின் பேராசியார் இயால் இஷாம், இஸ்ரேலில் ஹெர்டு இம்யூனிட்டி வளர்ந்துவிட்டது என்கிறார். அங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே தவறியது இந்தியா?

பெயரளவில் மட்டுமே கட்டுப்பாடுகள் இருந்தது முதன்மைக் காரணம் என்றால், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசியல் ஆளுமைகளே தேர்தல் பிரசாரத்தில் தங்களுக்குக் கூடிய கூட்டத்தைப் பெருமையாக நினைத்தது மற்றொரு காரணம்.

பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் பி.ஶ்ரீநாத் ரெட்டி, ``நமக்கு ஹெர்டு இம்யூனிட்டி வந்துவிட்டது எனத் தவறாகப் பலர் நினைத்து, மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பிவிட்டனர். இது இரண்டாம் அலை, இவ்வளவு மோசமாக இருக்க முக்கிய காரணம்” என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். கொரோனாவைவிட மிகக் கொடுமையானது பசி. நோய் வந்து இறப்பதைவிடப் பசி வந்து இறப்பது கொடுமை. அவர்கள் வேலைக்கு போகத்தான் நினைபார்கள்… பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பத்தான் நினைப்பார்கள். கடந்த அலையின்போதே அரசு தங்களைக் கைவிட்டுவிட்டதாக எண்ணியவர்கள் அவர்கள். இது வறுமைக்கோட்டின் பக்கத்தில் இருப்பவர்களின் நிலை என்றால்… மத்தியதர வர்க்கத்தின் நிலை வேறு. கடன் கொடுத்தவர்கள் வீட்டின் கதவைத் தட்டினால் தற்கொலயை நோக்கிச் செல்லக்கூடியவர்கள் அவர்கள். அதனால், அவர்களாலும் வீட்டிலேயே முடங்கியிருக்க முடியாது. வேலைக்குச் செல்ல வேண்டும், பழைய வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும்.

மக்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. அரசு என்ன செய்தது என்பதுதான் கேள்வி?

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வைக்கூட அரசு முறையாக ஏற்படுத்தத் தவறிவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

கொரோனா ரயில் நிலையத்தில் சோதனை
கொரோனா ரயில் நிலையத்தில் சோதனை
Rajanish Kakade

பிப்ரவரி மாத மத்தியிலேயே மிச்சிகன் பல்கலைக்கழகதின் பேராசிரியர் பர்மர் முகர்ஜி, ``இந்தியா தனது தடுப்பூசி செயல்பாட்டை வேகப்படுத்த வேண்டும்” என எச்சரித்திருந்தார். ஆனால், அது அரசின் காதுகளை எட்டவில்லை.

கும்பமேளா மக்களின் நம்பிக்கை சார்ந்ததுதான். பண்பாடு, கலாசாரம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால், இப்படியான சூழலில் அதைக் குறைந்தபட்சம் முறைப்படுத்தியதா அரசு?

புளூம்பெர்க்கில் தொடர்ந்து எழுதும் பத்தி எழுத்தாளர் மிஹிர் சர்மா, ``இந்தியாவின் பொதுநிலையாகிப்போன அரசின், அதன் அங்கத்தினரின் ஆணவம், தேசியவெறி, அதிகாரத்துவ திறமையின்மை ஆகியவை ஒன்றிணைந்து இந்த நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன” என்று குறிப்பிடுகிறார்.

இதை நம்மால் மறுக்க முடியுமா?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரத்தைத் தன்னிடம் குவித்துவைத்திருக்கிறது மத்திய அரசு. தடுப்பூசி, மருந்து என அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. மாநில அரசுகள் தங்களுக்குப் போதுமான மருந்துகள் தாருங்கள் எனக் கதறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்கிறது மத்திய அரசு.

கொரோனா
கொரோனா

கால்களில் சங்கிலி பூட்டி, சாவியை வைத்துக்கொண்டு `ஓடு… ஓடு…’ என்றால் எப்படி ஓட முடியும்?

இதனால்தான், கடுப்பான ஓர் அமைச்சர் கொரோனாவால் மாண்டவர்களின் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் படம் அச்சடிக்க வேண்டும் என்கிறார்.

நிச்சயம் மீள்வோம்!

அரசு எப்போதும்போல மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வார்கள் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. நம்மாலும் இன்னொரு பொதுமுடக்கத்தைத் தாங்க முடியாது.

இந்தச் சூழலை கடப்பது கடினம்தான். ஆனால், நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வதன் மூலம் இதைக் கடக்க முடியும். தடுப்பூசி ஒரு வழி, தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்ப்பது பொதுவழி. நமக்கான வழிகளில் நாம் சென்று இந்த நிலையிலிருந்து மீள்வோம்.

நிச்சயம் மீள்வோம். எந்தச் சந்தேகமும் வேண்டாம். நாம் இதைவிட மோசமான சூழலிலிருந்தும் மீண்டிருக்கிறோம்.

- காவியன்