Published:Updated:

``காங்கிரஸ் கட்சிக்குள் கொரோனா நுழைந்துவிட்டது” - சச்சின் பைலட்டை மறைமுகமாகச் சாடிய அசோக் கெலாட்

அசோக் கெலாட்

சச்சின் பைலட்டை கொரோனா வைரஸ் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்திருக்கிறார்.

``காங்கிரஸ் கட்சிக்குள் கொரோனா நுழைந்துவிட்டது” - சச்சின் பைலட்டை மறைமுகமாகச் சாடிய அசோக் கெலாட்

சச்சின் பைலட்டை கொரோனா வைரஸ் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
அசோக் கெலாட்

நாட்டில் ஒருசில மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. அங்கும் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்குமிடையே தொடர்ந்து கட்சியில் அதிகாரப்போட்டி நிலவிவருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துவருகின்றனர். சச்சின் பைலட்டை அடுத்த முதல்வருக்கான வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முயற்சி எடுத்துவருகிறது. ஆனால், அதற்கு அசோக் கெலாட் இடையூறாக இருந்துவருகிறார். அடுத்த சில மாதங்களில் ராஜஸ்தானில் தேர்தல் நடக்கவிருப்பதால், சச்சின் பைலட் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அதுவும் கட்சித்தலைமையிடம் அனுமதி வாங்காமலேயே இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

இது அசோக் கெலாட்டுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், சச்சின் பைலட்டை கொரோனா வைரஸ் என்று விமர்சித்திருக்கிறார். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, ``நான் இங்கு ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறேன். முன்பு கொரோனா வந்தது. இப்போது காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய கொரோனா நுழைந்துவிட்டது” என்று அசோக் கெலாட் தெரிவித்திருக்கிறார். அவர் சச்சின் பைலட் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், சச்சின் பைலட்டை குறிவைத்துத்தான் பேசியிருக்கிறார் என்கிறார்கள். இது தொடர்பான வீடியோ வைரலாகியிருக்கிறது.

ஏற்கெனவே குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது சச்சின் பைலட்டை அசோக் கெலாட், `துரோகி’ என்று விமர்சனம் செய்தார். `துரோகிகள் முதல்வராக முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் சச்சின் பைலட்டை விமர்சனம் செய்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படி ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.