Published:Updated:

கொரோனாவின் இந்திய எபிசென்டர் ஆன பிறகும்... பூசி மெழுகுவது சரியா?! - வேண்டாம் தோழர்களே!

தப்லீக் ஜமாத் முஸ்லிம் மத  குரு மவுலானா சாத்
தப்லீக் ஜமாத் முஸ்லிம் மத குரு மவுலானா சாத்

`சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் கலந்துகொண்டார்கள் என்பதெல்லாம் எல்லா மதத்தினரிடையேயும் உள்ள சாதாரண நிகழ்வுகள்தான்’

தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவராக இருப்பவர் மவுலானா சாத் என்பவர். இவரின் முன்னோர்கள்தான் தப்லீக் ஜமாத்தை தோற்றுவித்துள்ளனர். நல்ல முஸ்லிமாக வாழ்வது எப்படி... குரானை முழுமையாகப் பின்பற்றுவது குறித்து தப்லீக் ஜமாத் பிரசாரம் செய்து வருகிறது. மேலும், 'தங்களுக்கு எது நடந்தாலும் அல்லா பார்த்துக் கொள்வான் ' என்பதும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் உறுதியான நம்பிக்கை ஆகும். இதனால்தான் கொரோனா எச்சரிக்கையை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் நடத்திய மாநாடு காரணமாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலாகப் பரவியுள்ளதைக் காணமுடிகிறது. தமிழகத்திலும் தினமும் கூடும் பாசிடிவ் கேஸ்களில் அதிகபட்சம் அம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்தான் கணக்கில் வருகின்றனர்.

தப்லீக் ஜமாத்
தப்லீக் ஜமாத்

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேர் தப்லீக் மாநட்டில் பங்கேற்றவர்கள் என்பதும் உத்தரப்பிதேசத்தில் மட்டும் 50 சதவிகிதம் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் , 'கொரோனா வைரஸ் பரவுவதால் தயவு செய்து மாநாடு நடத்தாதீர்கள்! 'என்று முஸ்லிம் மதகுருக்கள், இஸ்லாமிய கல்வியாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காமல் தன்னிச்சையாக இந்த மாநாட்டை தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் நடத்தியுள்ளார். சில முஸ்லிம் மதகுருக்கள் 'மவுலானா சாத், தன்னைப் பின்பற்றுபவர்களின் மரணத்துக்கும் காரணமாக அமைந்ததோடு, நாட்டில் இஸ்லாமிய மக்கள்தான் வைரஸைப் பரப்புகின்றனர் என்ற அவப்பெயர் ஏற்படவும் காரணமாகிவிட்டார். ஆனால், இன்றோ அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்'' என்று வெளிப்படையாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தப்லீக் ஜமாத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகமது ஆலம் கூறுகையில், 'மவுலான முகமது சாத்துக்கு அனைத்துமே தெரியும். தெரிந்தே தன் பிடிவாதத்தால் பெருந்தொற்று என்ற புதைக்குழிக்குள் எங்கள் உறுப்பினர்களைத் தள்ளியுள்ளார். தற்போது, மெக்கா, மெதீனாவுக்குப் பிறகு தப்லீக் மார்கஸ் பயப்படக் கூடிய பகுதியாக மாறிவிட்டது. இஸ்லாமியர்களின் அமீர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு மனிதர் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தெரியாமல் இருப்பாரா... இத்தகைய காரியத்தைச் செய்யலாமா?'என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் மீம் அஃப்ஷல் மற்றொரு முஸ்லிம் தலைவரான சாஃபல் ஷர்வேஷ்வாலா ஆகியோரும் மாநாட்டை ரத்து செய்து விடுமாறு, மவுலானா சாத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள மவுலானா சாத்தின் ஆதரவாளர்கள், 'மத்திய அரசு வெளிநாட்டவர்களை மாநாட்டில் பங்கற்க அனுமதியளித்துள்ளது. அப்படியிருக்கையில், நாங்கள் மாநாடு நடத்தியது எப்படி தவறாகும் ' என்று கேள்வி கேட்டுள்ளனர். ஆனால், வெளிநாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து தப்லீக் மார்கஸில் பங்கேற்ற 986 வெளிநாட்டவரை மத்திய அரசு கறுப்புப் பட்டியலில் வைத்துள்ளது. இனிமேல் அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய முடியாது.

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்
தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்

தப்லீக் மாநாடு நடந்த அதே சமயத்தில் டெல்லி துர்க்மான் கேட் பகுதியில், அமைந்துள்ள ஷூரா இ ஜமாத் என்ற, இஸ்லாமிய அமைப்பும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகமானதால், ஷூரா இ ஜமாத் மாநாட்டை உடனடியாக ரத்து செய்துவிட்டது. முன்னதாக, கடந்த மார்ச் 29-ந் தேதி தப்லீக் மார்கஸில் தங்கியிருந்தவர்களை , அப்புறப்படுத்தவே மத்திய அரசு பெரும் பாடு பட வேண்டியது இருந்தது. நிஜாமுதீன் மசூதிக்குள் தங்கியிருந்தவர்களை வெளியேற அரசு உத்தரவிட்டும் அங்கிருந்தவர்கள் நகரவில்லை. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். உடனடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அழைத்த அமித் ஷா, மசூதிக்கு நேரடியாகச் செல்லும்படி பணித்துள்ளார். மார்ச் 29- ந் தேதி நள்ளிரவு 2 மணியளவில் மசூதிக்குச் சென்றார் அஜித் தோவல். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலான சாத்தை சந்தித்துப் பேசினார். முதலில் உடன்படாத சாத்திடத்தில், ' நீங்கள் விபரீதத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும்!' என்று அஜித் தோவல் எச்சரித்த பிறகே, மசூதிக்குள் தங்கியிருந்தவர்களை வெளியேற்ற சாத் ஒப்புக்கொண்டார். மசூதியில் தங்கியிருந்தவர்கள் கொரோனா வைரஸ் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

`அதிக உடல் வெப்பநிலை; 10 நாளுக்குப் பின்னரும் பாசிடிவ்' - இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

மசூதிக்குள் 2,380 பேர் வரை இருந்துள்ளனர். அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு, மசூதி கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வைரஸ் தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா தொற்று தாக்கியிருக்கும், வெளிநாட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ''வெளிநாட்டவர்கள் சுற்றுலாப்பயணிகள் விசாவில் வந்து மதக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மதக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மிஷனரிகள் என்ற பிரிவின் கீழ் விசா எடுக்க வேண்டும். விசா நடைமுறைகளை மீறியவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள் '' என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், வெளிநாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

நாட்டின் நன்மை கருதி மத்திய அரசு ஒரு முடிவு எடுக்கிறது. மத்திய அரசு மட்டுமல்ல, `சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள்' என்று உலக நாடுகளே சொல்கின்றன. சமூக விலகல் என்பது ஒருவருக்கு ஒருவர் 2 மீட்டர் இடைவெளி விட்டு இருப்பது மட்டுமல்ல பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்வதைத் தடுப்பதும்தான். அது மதவழிபாடாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட மதம் சார்ந்த மக்களின் கடமை. இதில், உங்கள் நலன் மட்டுமல்ல உங்கள் சமுதாய நலன், நாட்டு நலனும் அடங்கியிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதது பெரும் வேதனை.

டெல்லி தப்லீக் மாநாடு பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு 'மனித நேய மக்கள் கட்சி'த் தலைவர் ஜவாஹிருல்லாவிடம் பேசினோம்.... ''மாநாட்டில் கலந்துகொள்ளாத நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது சரியாக இருக்காது. எனவே மாநாட்டில் கலந்துகொண்டவர்களிடம் கேளுங்கள்'' என்றார்.

இம்போர்ட்டட், லோக்கல், கம்யூனிட்டி, எபிடெமிக்... நான்கு வகை கொரோனா கடத்திகள்... மருத்துவர் விளக்கம்!

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுக் குழுத் தலைவரான முகம்மது ரூஹுல் ஹக், ''டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் நான் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பதிலளித்தால்தான் சரியாக இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்று மாநாட்டில் கலந்துகொண்டவர்களும் தற்போது மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால், மாநாட்டில் என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிவது இயலாத காரியமாக இருக்கிறது.

இன்னும் தமிழ்நாடு திரும்பமுடியாமல் டெல்லியில் இருந்துவந்தவர்களையும்கூட இப்போது எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக அவர்கள் அனைவரையும் தனித்தனியே பிரித்து அனுப்பியிருப்பதால், யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரமும் எங்களிடையே இல்லை. அவர்களைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை'' என்றார்.

இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து கிளம்பிவரும் விமர்சனங்களுக்கு விளக்கம் கேட்டு, 'மனிதநேய ஜனநாயகக் கட்சி'யின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் பேசினோம்....

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

``தப்லிக் மாநாட்டை ஒத்திவையுங்கள்' என்று பலரும் வலியுறுத்தியதாக நானும் கேள்விப்பட்டேன். அவர்களும் இதைக்கேட்டுக்கொண்டு நடந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் காலச்சூழலைக் கருத்திற்கொள்ளாமல் மாநாட்டை நடத்தியது தேவையற்ற சங்கடங்களுக்குக் காரணமாகிவிட்டது. அதேநேரம், கொரோனா விபரீதத்தை தாமதமாக உணர்ந்துகொண்ட பிறகு அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் கலந்துகொண்டார்கள் என்பதெல்லாம் எல்லா மதத்தினரிடையேயும் உள்ள சாதாரண நிகழ்வுகள்தான். அடுத்ததாக மத்தியப்பிரதேச சம்பவத்தை அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிற எல்லோருமே, உத்தரப்பிரதேசத்தில், கொரோனா பணிக்காக வந்தவர்கள் அடித்துவிரட்டப்பட்ட செய்தியை மட்டும் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். இரண்டு நிகழ்வுகளுமே தவறு என்கிறபோது, குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது ஏன் என்றுதான் நாங்களும் கேட்கிறோம்.

சிஏஏ போராட்டம்
சிஏஏ போராட்டம்

தென்காசியில் மசூதிக்குள் தொழுகை நடத்த முயன்றதான நிகழ்வு கண்டிக்கத்தக்கது. அதேநேரம் அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்டவும்கூடாது. கொரோனா விவகாரத்தில், ஆரம்பத்தில் மக்களிடையே விழிப்புணர்வு குறைவாகத்தான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், எடுக்கப்பட்ட வீடியோக்களை சிலர் இப்போது விஷமத்தனமாகப் பரப்பிவருவது மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துகிறது'' என்றார் வருத்தமாக.

முன்னர் இதே விஷயம் குறித்து, ‘’ஏன் உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயிலுக்கு பூஜை போடவில்லையா, எடியூரப்பா ஒரு கல்யாணத்தில் கலந்துகொள்ளவில்லையா? ஆனால், இஸ்லாமியர்கள் மீது மட்டும் திட்டமிட்டே பழிபோடப்படுகிறது. இதெல்லாமே இந்துத்வா சக்திகளின் திட்டமிட்ட வேலையே’’ என்ற ரீதியில் துவேஷமான கருத்துகளைச் சிலர் பரப்பினார்கள். ஆனால், இப்போது இவ்வளவு இக்கட்டான சமயம் வழிகாட்டுதலும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடாமல் பதுங்குவது நல்ல தலைமைப் பண்பா…!?

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸுக்கு மதம், ஜாதி தெரியாது. அதே போல கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அப்படியேதான் அமையும்.

இதை உலகின் ஒவ்வொரு குடிமகனின் நன்மைக்காகவே மேற்கொள்கிறோம் என்ற புரிதலுடன் கடைப்பிடிப்போம்!.

அடுத்த கட்டுரைக்கு