Published:Updated:

`அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் ஊழல்!' - மு.க.ஸ்டாலின்

நாமக்கல் மருத்துவக் கல்லூரி - இடிந்த கட்டடம்
நாமக்கல் மருத்துவக் கல்லூரி - இடிந்த கட்டடம்

`ஒவ்வொரு டெண்டரும் கமிஷன் அடிப்படையிலேயே விடப்படுகிறது; அமைச்சர்கள் கொள்ளையடிப்பதற்கு என்றே உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ - மு.க.ஸ்டாலின்.

``அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது மாதிரி, தரக்குறைவாக நடக்கும் பணிகளுக்கு டெண்டர் விடுவது, கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷனில் ஈடுபடுவதற்காகவே என்பதை, சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்தச் சம்பவமும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இடிந்த கட்டடம்
இடிந்த கட்டடம்

நாமக்கல் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், 25 ஏக்கரில் ரூ.336 கோடி மதிப்பீட்டில், புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுவருகிறது. இந்தநிலையில், நேற்று அதிகாலை 2:30 மணியளவில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் போர்டிகோ பகுதி இடிந்து விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர், `சாரத்தை அகற்றும்போது இப்படி ஆகிவிட்டது' என்று இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இடிந்து விழுந்த மருத்துவக் கல்லூரி கான்கிரீட் தளம்! - நாமக்கல் அதிர்ச்சி

இந்தச் சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,`தரமில்லாத கட்டடம் உதிர்ந்ததுபோல், நீங்கள் ஆட்சியிலிருந்து உதிர்ந்துபோவீர்கள்' என்று ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்தச் சம்பவம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கடுமையான அறிக்கை மூலம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், ``நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில், ஐந்து பேர் காயமடைந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி, அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை - எளிய நடுத்தரப் பிரிவு மக்களுக்கு, உயிர் காக்கும் சிகிச்சைகளுக்காகக் கட்டப்படும் மருத்துவமனைகளும், அ.தி.மு.க ஆட்சியில் எப்படி உரிய தரமின்றி, மிகுந்த கவனக் குறைவுடன் கட்டப்படுகிறது என்பதற்கு நாமக்கல் நிகழ்வு ஓர் உதாரணமாகியிருக்கிறது. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மதிப்புள்ள பணி அல்ல; 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடப்பட்டிருக்கும் டெண்டர். வருகின்ற செய்திகளின்படி, 60 சதவிகிதப் பணிகள் நிறைவேறியிருக்கும் நிலையில், இப்படியொரு விபத்து அங்கே நடந்திருக்கிறது.

இடிந்து விழுந்த மருத்துவக் கல்லூரி கான்கிரீட் தளம்! - நாமக்கல் அதிர்ச்சி

இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இருப்பதாகச் செய்திகள் வரவில்லை. ஆனால், கட்டிக்கொண்டிருக்கும்போதே கூரை சரிந்து விழுவது, அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது. ஏனென்றால், கட்டுமானப் பணிகளின் லட்சணம் எப்படியிருக்கும், இந்த மருத்துவமனைக் கட்டடங்கள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்ன மாதிரி நிலையை அடைந்திருக்கும் என்பதெல்லாம் கவலையளிக்கக்கூடிய அம்சங்கள்.

`புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டோம்’ என்று வாய்நீளமாகப் பெருமையடித்துக்கொள்ளும் அ.தி.மு.க அரசு, இது மாதிரி தரக்குறைவாக நடக்கும் பணிகளுக்கு டெண்டர்விடுவது, கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷனில் ஈடுபடுவதற்காகவே என்பதை, சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்தச் சம்பவமும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு டெண்டரும் கமிஷன் அடிப்படையிலேயே விடப்படுகிறது; அமைச்சர்கள் கொள்ளையடிப்பதற்கு என்றே உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இடிந்த கட்டடம்
இடிந்த கட்டடம்

ஆகவே, புதிய மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் போன்றவை கட்டுவதற்கு விடப்பட்ட டெண்டர் பணிகளில் நடக்கும் முறைகேடுகள் மட்டுமல்ல... கமிஷனுக்காக விடப்பட்டிருக்கும் டெண்டர்கள் அனைத்துமே மக்களின் பேராதரவுடன், தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் ரத்துசெய்யப்பட்டு, வேலை செய்யாமலேயே கொடுத்த கமிஷன்கள், டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்திலும் முழு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அந்த நடவடிக்கையிலிருந்து எந்த அ.தி.மு.க அமைச்சரும் - தேர்தல் நிதி திரட்ட இது போன்ற டெண்டர்களை விட்டு கமிஷன் அடிக்கத் துணைபோகும் அதிகாரிகள் யாரும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு