Published:Updated:

அடியாள் படையைப் போல காவல்துறையை பழக்கியிருக்கிறார்கள்!

கே.பாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன் பொளேர்

அடியாள் படையைப் போல காவல்துறையை பழக்கியிருக்கிறார்கள்!

கே.பாலகிருஷ்ணன் பொளேர்

Published:Updated:
கே.பாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பாலகிருஷ்ணன்

‘காவல் நிலைய மரணங்களை, கொலை வழக்குகளாகப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார். அவரிடம் சிதம்பரம் கோயில் விவகாரம், ஆளுநரின் சர்ச்சைப் பேச்சு, அண்ணாமலை அரசியல், பினராயி விஜயன் மீதான குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பினோம்...

“அ.தி.மு.க ஆட்சியைப்போலவே தி.மு.க ஆட்சியிலும் லாக்கப் மரணம் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. காவல்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்வர், லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லையே?”

“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையின் இத்தகைய அத்துமீறல்கள் இருக்கத்தான் செய்யும். குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கும் காவல்துறையினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படாமல், நவீன உத்திகளைக் கையாள்வதற்குக் கற்றுத் தராமல் இருப்பதுதான் காரணம். ஆட்சியாளர்களின் ‘அடியாள் படை’யைப்போல காவல்துறையைப் பழக்கியிருக்கிறார்கள். எனவே, மனித உரிமைகளை மதிக்காத போக்கு காவல்துறையினரிடம் இருக்கிறது. மிருகத்தனமான செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். எனவே, காவல்துறையில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவர முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”

அடியாள் படையைப் போல காவல்துறையை பழக்கியிருக்கிறார்கள்!

“சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கு வழக்குகளை ஆய்வுசெய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோது, தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற பிரச்னை வந்தது. இதில், உறுதியான நடவடிக்கையை எடுக்க தமழ்நாடு அரசு தயங்குவது ஏன்?”

“அது ஒரு வழிபாட்டுத்தலம் என்பதால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசால் செயல்பட முடியாது. கடுமையான நடவடிக்கை எடுப்பதால் எதிர்விளைவுகள் ஏற்படலாம். அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இதில் அரசியல் செய்ய நினைக்கின்றன. எனவே, அரசு நிதானமான அணுகுமுறையைக் கையாள்கிறது.”

“சிதம்பரம் கோயிலை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அரசின் கட்டுப்பாட்டில் கோயிலை எடுப்பதற்குத் தமிழக அரசு தயாராக இருக்கிறதா?”

“தமிழக அரசு தற்போது எடுத்திருக்கும் முயற்சிகளை அறைகுறையாக விட்டுவிடக் கூடாது; பின்வாங்கக் கூடாது என்கிறோம். இறைப்பணி என்ற பெயரில் கணக்கு வழக்குகளில் தீட்சிதர்கள் மோசடி செய்வதை அனுமதிக்க முடியாது. கோயிலுக்கான நிர்வாக அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும். உத்தரப்பிரதேச அரசு தனிச்சட்டம் இயற்றி, வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தைக் கையகப்படுத்தியதைப்போல, சிதம்பரம் நடராஜர் கோயிலைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.”

“நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநரைக் கடுமையாக விமர்சித்து சில மாதங்களுக்கு முன்பு எழுதிய தி.மு.க-வின் முரசொலி ஏடு, ‘ஆளுநர் மனது வைக்க வேண்டும்’ என்று இப்போது இறங்கி வந்திருக்கிறதே?”

“ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியால், மாநில ஆளுநரை எதிர்த்துக்கொண்டே இருக்க முடியாது. அ.தி.மு.க-வைப்போல, எந்நேரமும் கையைக் கட்டிக்கொண்டே நிற்பதும் தவறு. சிலநேரம் ஆளுநரை நிர்பந்தப்படுத்தவேண்டியிருக்கிறது. அதை தி.மு.க செய்கிறது. அதனால்தான், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தி.மு.க-வும், கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தோம். அதுபோல, சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுநர் பேசியிருப்பதை தி.மு.க கண்டித்திருக்கிறது. சனாதனம் பற்றிய ஆளுநரின் பேச்சு முழுக்க முழுக்க அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஒரே நாடு, ஒரே மதம் என்று ஆர்.எஸ்.எஸ் சொல்வதற்கும், ஆளுநர் பேசுவதற்கும் என்ன வித்தியாசம்?”

“தமிழ்நாடு அரசை விமர்சிப்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. ஆனால், தி.மு.க கூட்டணியில் இருப்பதால், அரசின் தவறுகளை விமர்சிப்பதில் நீங்கள் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கிறீர்களே?”

“எதிர்க்கட்சிக்கென்று பொறுப்பு இருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதும், விமர்சிக்கவேண்டிய நடவடிக்கைகளை விமர்சிப்பதும்தான் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியின் பணி. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆனால், `அரசை எதிர்ப்பதில் நம்பர் 1 நாங்கள்தான்’ என்று பா.ஜ.க செயல்படுகிறது. அரசை விமர்சிப்பதை மட்டுமே முழு நேர வேலையாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்துகொண்டிருக்கிறார். மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க., இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் போய் அதானிக்கும் அம்பானிக்கும் தரகர் வேலை பார்க்கிறது. அதை அண்ணாமலை விமர்சிப்பாரா... சில மீடியாக்களைக் கையில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எதையாவது செய்து பார்ப்போம் என்று அண்ணாமலை நினைக்கிறார். அவரது செயல்பாடுகளை பா.ஜ.க-வில் இருப்பவர்களே விரும்பவில்லை என்று தகவல்கள் வருகின்றன.”

“அண்ணாமலை, சீமான் போன்றோர் கட்சியை வளர்க்க தீவிரமாக முயல்கிறார்கள். ஆனால், நூற்றாண்டு பாரம்பர்யம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் அப்படியான முனைப்பு இல்லையே?”

“இது தவறான புரிதல். அவர்கள் யாரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வார்கள். பா.ஜ.க-வில் கிரிமினல்களையெல்லாம்கூட கட்சியில் சேர்த்தார்கள். அப்படியெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட முடியாது. எங்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. கொள்கையும் கோட்பாடும் இருக்கின்றன. கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகிறோம்.”

“கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்குத் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?”

“ ‘தங்கக் கடத்தல் விவகாரம் பற்றி விசாரிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு முதன்முதலில் கடிதம் எழுதியவரே பினராயி விஜயன்தான். அந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், ‘முதல்வருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும், அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லுமாறு தனக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள்’ என்று முன்பு சொன்னார். தற்போது ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய ஒரு நிறுவனத்திலிருந்து மாதா மாதம் ஸ்வப்னா சுரேஷுக்கு பணம் செலவாவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே, லாவ்லீன் வழக்கிலும் பினராயி விஜயன் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சி.பி.ஐ விசாரணை நடத்தி, அவருக்கு அந்தக் குற்றத்தில் சம்பந்தமில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பினராயி விஜயனின் தியாக வரலாறு என்ன... அவர் எவ்வளவு அப்பழுக்கற்ற தலைவர் என்பது கேரள மக்களுக்கு நன்றாகவே தெரியும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism