Published:Updated:

`ஜனநாயகம் காப்பாற்றப்பட பா.ஜ.க., அ.தி.மு.க வீழ்த்தப்பட வேண்டும்!’-அரசியல் எழுச்சி மாநாட்டில் டி.ராஜா

சி.பி.ஐ அரசியல் எழுச்சி மாநாடு
சி.பி.ஐ அரசியல் எழுச்சி மாநாடு

`மோடி அரசைத் தூக்கி எறிந்தால்தான் இந்தியா காப்பாற்றப்படும். தமிழகத்தில் இந்தியாவின் கூட்டாட்சி நடைபெறவில்லை. மோடியின் தலைமையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன’ - டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதுரையில் நடத்திய அரசியல் எழுச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

சிபிஐ அரசியல் எழுச்சி மாநாடு
சிபிஐ அரசியல் எழுச்சி மாநாடு

சி.பி.ஐ-யின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசும்போது, ``பா.ஜ.க என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கருவி. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை நாசப்படுத்தும் அரசாக பா.ஜ.க செயல்படுகிறது. மோடி பிரதமரானவுடன்தான் அரசியலுக்கு நேரடியாக ஆர்.எஸ்.எஸ் வந்திருக்கிறது. இது பாசிச ஆட்சியை உருவாக்க முயல்கிறது. இதுதான் இந்துத்துவா என்கின்றனர்.

மனு சாஸ்திரபடி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது பா.ஜ.க. மதச் சார்பின்மையை குழிதோண்டிப் புதைக்கிறது. மோடி பிரதமரானவுடன் இந்திய வளங்கள் மற்றும் உற்பத்திகளை சில கார்ப்பேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்கிச் செயல்படுகிறார்.

பொதுத்துறை நிறுவனங்கள், தனியார்மயமாக வேண்டும் என இதுவரை எந்தப் பிரதமரும் பேசாத ஒன்றை மோடி பேசுகிறார். பாதுகாப்புதுறை, வங்கித்துறை உட்பட அனைத்தையும் தனியார்மயமாக்கிவருகிறார்.

டி.ராஜா  மு.க.ஸ்டாலினுடன்
டி.ராஜா மு.க.ஸ்டாலினுடன்

மோடி அரசு மக்களுக்கான அரசாக இல்லை. பெரும் முதலாளிகளுக்கான அரசாகச் செயல்படுகிறது. விவசாயிகள் போராட்டம் வீறுகொண்டு எழுகிறது. ஆனால், மோடி அரசு அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் இந்திய நலனுக்கு எதிரானவை என விவசாயிகள் கூறுகின்றனர். மக்களின் உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட்டை வளர்க்கும் மத்திய அரசு தேவையா?

ஒருபக்கம் பாசிஸ்ட் அரசு, மற்றொரு பக்கம் கார்ப்பரேட் ஊக்கம் என்பது மோடியின் கொள்கையாக இருக்கிறது.

மோடி அரசைத் தூக்கி எறிந்தால்தான் இந்தியா காப்பாற்றப்படும். தமிழகத்தில் இந்தியாவின் கூட்டாட்சி நடைபெறவில்லை. மோடியின் தலைமையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

அ.தி.மு.க அரசு, பா.ஜ.க-வின் எடுபிடியாகச் செயல்படுவதால் அதை தமிழ் மக்கள் அனுமதிக்கலாமா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மாநில உரிமை, நலன் காப்பாற்றப்படவில்லை. மாநில உரிமைகள் பட்டியலிலுள்ள கல்வி, வேளாண்மையில் மாநில அரசைக் கேட்காமலேயே மத்திய அரசு மாற்றம் கொண்டுவருகிறது.

வந்திருந்த தொண்டர்கள்
வந்திருந்த தொண்டர்கள்

இந்தியக் கல்வியை, காவிமயமாக்க வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு செயல்படுகிறது. போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு மீதான தாக்குதல் வரும்போது தமிழக அரசு, எதிர்ப்புக்குரல் எழுப்பவில்லை. மாநில நலனுக்காக அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதே இல்லை.

ஆளும் எடப்பாடி அரசு, அரசியல் பிழைகளைச் செய்துவருகிறது. இவர்களைச் சரித்திரம் மன்னிக்காது. வரும் தேர்தலில் ஆட்சிமாற்றம் மூலம் இவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தோல்வியடையும் என்பதால் மோடி அனைத்து மாநிலங்களிலும் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநிலங்களில் பா.ஜ.க-வுக்குக் கிடைக்கும் தோல்வி மோடியின் தோல்விக்கான தொடக்கமாக இருக்கும்.

தமிழக மக்கள், அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள், இது பெரியார் மண். இங்கு மதவெறி அரசியல் வெற்றி பெறாது... பா.ஜ.க வீழும்.

டி.ராஜா  மு.க.ஸ்டாலினுடன்
டி.ராஜா மு.க.ஸ்டாலினுடன்

அரசைக் கேள்வி கேட்டாலோ, விமர்சனம் செய்தாலோ தேச விரோதி என்று கூறி ஜனநாயகத்தை நாசப்படுத்திவிட்டது. இந்திய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க - அ.தி.மு.க வீழ்த்தப்பட வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு