Published:Updated:

இந்தியாவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி!

பகத் சிங்
பிரீமியம் ஸ்டோரி
பகத் சிங்

ஜூ.வி 2020

இந்தியாவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி!

ஜூ.வி 2020

Published:Updated:
பகத் சிங்
பிரீமியம் ஸ்டோரி
பகத் சிங்

- தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.மகேந்திரன்

வம்பர் புரட்சியின் ஈர்ப்பில் கிளர்ந்து உருவானதுதான் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்! ரஷ்யாவில், லெனின் தலைமையில் 1917-ம் ஆண்டு புரட்சி நடைபெற்றது. இதன் புரட்சிகர வெளிச்சம் உலகம் முழுமைக்கான சுடரொளியைத் தந்தது. அடிமை இருளில் மூழ்கிக்கிடந்த இந்தியாவுக்கு இந்த வெளிச்சம் புது உற்சாகத்தை வழங்கியது. ஆங்கிலேயே ஆட்சி யாளர்களுக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தின் தீவிர வடிவமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறப்பெடுத்தது.

நம் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாள் எது என்ற கேள்வி எழுந் துள்ளது. ‘அந்நிய நாட்டவரின் துணையுடன் சுதந்திரத்தைப் பெற வேண்டும்’ என்ற உணர்வுடன் இந்தியாவை விட்டு பலர் வெளியேறினர். அவர்களில் சிலர், கம்யூனிஸ்ட்களாக வளர்ச்சி பெற்று ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் 1920-ம் ஆண்டில், ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற பெயரில் ஏழு பேரை அமைப்புக் குழுவாகக் கொண்டு ஒரு கட்சியை உருவாக்கினர். இந்திய நிலைமைகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு, 1925-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கான்பூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட் டுக்கு, தமிழகம் பெற்றெடுத்த வீரப்புதல்வர் சிங்கார வேலர் தலைமையேற்றார்.

இந்தியாவில் சிதறிக்கிடந்த கம்யூனிஸ்ட் உணர்வுகொண்டவர்களை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி முதலில் ஒருங்கிணைத்தது. காந்தியின் வருகைக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் கட்சி, ஓர் இயக்கமாக மாறியது. ‘பல்வேறு கொள்கை வேறுபாடு இருந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்’ என்று காந்தி செயல் பட்டார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில், இந்திய அளவில் ஜெயபிரகாஷ் நாராயணன், டாங்கே போன்றவர்கள் இருந்தனர். தமிழ்நாட்டில், ப.ஜீவானந்தம், பி.சீனிவாச ராவ், பி.ராமமூர்த்தி ஆகியோரும் செயல்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பகத் சிங் என்னும் கம்யூனிஸ்ட்!

ஆரம்பக் காலங்களில், கம்யூனிஸ்ட் இயக்கம் பலத்த நெருக்கடிகளைக் கொண்டி ருந்தது. புரட்சிகர உணர்வு கொண்டவர்கள் பல்வேறு குழுக்களின் தலைமறைவு இயக்கங்களில் இணைந்து செயல்பட்டார்கள். இதில் கம்யூனிசக் கொள்கைகளை அடிப்படை யாகக்கொண்ட இந்தியக் குடியரசு சங்கத்தைச் சேர்ந்தவர்தான் பகத் சிங். அவர் தூக்குமேடை செல்வதற்கு முன் வாசித்தது, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்னும் நூல்தான். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு இந்தியாவிலும் உலக அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘நான் மார்க்சிய லெனினியத்தை அடிப்படையாகக் கொண்டவன்’ என்று தூக்கிலிடப் படுவதற்கு முன் பகத் சிங் அறிவித்திருந் தார். வேறு எந்த இயக்கத் தையும்விட பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை எதிர்ப்பதிலும் இந்தியச் சுரண்டலை அகற்றுவதிலும் சகல அர்ப்பணிப்பு களையும் செய்யக் கூடிவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்ற உணர்வு இதன் பின்னர் பல தரப்பினருக்கும் ஏற்படத் தொடங்கியது. இதை கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கத்தில் முக்கியமான பகுதியாக நான் கருதுகிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சி!
கம்யூனிஸ்ட் கட்சி!

பிரிட்டிஷ் இந்தியாவில், வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களில் பலர் இங்கிலாந் துக்குப் படிக்கச் சென்றார்கள். அவர் களில் பலர் தேர்ந்த கம்யூனிஸ்ட் களாகப் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்கள். குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்திலிருந்து மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன் போன்றவர்கள் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் களாகப் பரிணாமம் பெற்றார்கள். பார்வதி கிருஷ்ணன், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் வகுப்புத் தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களாலும் கம்யூனிஸ இயக்கம் புதிய ஈர்ப்பைப் பெற்றது.

இந்திய வரலாற்றில், காந்தி - பி.ஷி.ஜோஷி இடையி லான கடிதப் போக்குவரத்து பல உண்மைகளைத் தெளிவுப்படுத்துகிறது. கம்யூனிஸ்ட்கள் மீது சில சந்தேகங்களைக் கேள்வியாக முன் வைக்கிறார் காந்தி. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஷி ஜோஷி, ‘மேலும் தங்களுக்குச் சந்தேகம் இருந்தால், எங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து தாங்களே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்’ என்றார். அதற்கு காந்தி, ‘உங்கள் பதில் போதுமானது. உங்களைப்போல அர்ப்பணிப்பாளர்கள், நேர்மையாளர்கள் வேறு யாருமே இல்லை’ என்று பதிலளித்தார். இதை கம்யூனிஸ்ட்களின் நேர்மைக்கு ஆதாரமாகக் கூறமுடியும்.

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்!

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டான சிங்காரவேலர் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இவர் மீனவர் சமூகத்தில் பிறந்தவர். வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட சென்னை நகரத்தின் முக்கியக் குடும்பம் அவருடையது. அன்றைய துறைமுகங்கள் புரட்சிகர சித்தாந்தப் பரிமாற்றத்துக்கான முக்கிய இடங்களாக இருந்தன. இதனால், தடை செய்யப்பட்ட அரிய நூல்களை வாசிக்கும் வாய்ப்பை சிங்கார வேலர் பெற்றிருந்தார். தமிழ்நாட்டில், சிறந்த பொதுவுடமை இயக்கம் உருவாக இவர் அடிப்படைக் காரணமாக அமைந்தார். இவரது கொள்கை உறுதி அனைவரையும் பிரமிக்க வைக்கக்கூடியது.

காங்கிரஸ் கட்சியின் கயா மாநாடு 1922-ம் ஆண்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிங்கார வேலர், ‘நாட்டுக்கு முழு விடுதலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். இதைப்போலவே மாநாட்டு உரையில், ‘காம்ரேட்ஸ்’ என்று தன் பேச்சை ஆரம்பிக்கிறார். தோழர் என்னும் அந்தச் சொல், மாநாட்டுக்கு வந்திருந்த பலரில் கம்யூனிஸ்ட்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இதைப்போலவே அதற்கு முன், ‘டொமினியன் அந்தஸ்து’ என்கிற ‘குடியேற்ற நாடுகளுக்கு உண்டான சிறப்புரிமை’ என்பதுதான் காங்கிரஸ் கோரிக்கையாக இருந்தது. ஆனால், பூரண விடுதலை என்பதை கம்யூனிஸ்ட்களின் கருத்தாக சிங்காரவேலர் முன்வைத்தார். இது மாநாட்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தத் தீர்மானத்தை, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பகத் சிங்
பகத் சிங்

இந்திய மக்கள், கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரத்தைப் பெறவில்லை. போராட்டம் நடத்தித்தான் பெற்றார்கள். சுதந்திரப் போராட்டத்தில், 1946-ம் ஆண்டு ஏற்பட்ட கப்பற்படை எழுச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் ஆதரவு கொண்ட தொழிலாளர்களும் மாணவர்களும் பம்பாய் நகரத்தின் வீதிகளில் குவிந்துவிட்டார்கள். அப்போது கப்பல் படையில் கலகம் தொடங்கிவிட்டது. ராயல் இண்டியன் நேவி என்பது அதன் பெயர். கப்பல் படையில் இருந்த வீரர்கள் ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ் கொடியையும் கம்யூனிஸ்ட் கொடியையும் முஸ்லிம் லீக் கொடியையும் ஏற்றி விட்டார்கள். இந்தச் செயல்பாட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பின்புலமாக இருந்தது. கப்பற்படையின் இந்த எழுச்சிக்குப் பின்தான், இந்தியாவிலிருந்து வெளியேறுவது என்கிற முடிவுக்கே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வந்தனர்.

இந்தியாவில் எத்தனையோ அரசியல் இயக்கங்கள் இருந்தாலும், அரசியலை விஞ்ஞானபூர்வமாக உணர்ந்து மிக உயர்ந்த தியாகங்களைச் செய்யக்கூடிய இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் இயங்கி வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பும் அதற்குப் பிறகும் பல உதாரணங்களை இதற்குக் காட்ட முடியும். அனைவரும் சமம் என்ற சித்தாந்தத்தைக் கொள்கைபூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை வாழ்க்கை முறையாகவே கம்யூனிஸ்ட்கள் மாற்றிக்கொள்வது தான் இந்த அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்குக் காரணமாகும்.

தொழிற்சாலைகளை உருவாக்கு வதற்கான திட்டங்களை வகுத்தளித்து, அதைச் செயல்படுத்துவதற்கான போராட்டங்களை நடத்தியவர்களும் கம்யூனிஸ்ட்கள்தான். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி தமிழகத்தின் அனைத்துத் தொழிற் சாலைகளுக்கான முன்மொழிவையும் கம்யூனிஸ்ட்களே வழங்கியிருக் கிறார்கள். தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைகளை கம்யூனிஸ்ட்கள் நிலைநிறுத்தியதைப்போல யார் செய்திருக்க முடியும்?

ஒடுக்கப்பட்டோருக்கான கம்யூனிஸ்ட்!

விடுதலைப் போராட்டத்துக்கு முந்தைய காலத்தில், சிலரிடம் மட்டுமே நிலங்கள் குவிந்திருந்தன. ஒரே நபரிடம் இரண்டாயிரம்... மூவாயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. அவர்களுக்குக்கீழ் அடிமை முறை, கொத்தடிமை முறைகள் இருந்தன. சாதியக் கொடுமைகளை இந்தப் பண்ணையடிமை முறைதான், பாதுகாத்து வந்தது. 1936-ல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தொடங்கி இந்த வேறுபாடுகளை ஒழிக்கும் வேலையை கம்யூனிஸ்ட்கள் தொடங்கிவிட்டார்கள்.

இந்தியாவில், மக்களுக்கான சமூகப் பொருளாதார மாற்றங்களை அதிகமாக முன்மொழிந்தவர்களும் கம்யூனிஸ்ட்கள்தான். இந்த முன்மொழிவு இல்லாமல் எந்தச் சட்டமும் வரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, நிலமற்ற ஏழைகளுக்கு நிலம், வீடற்றவர்களுக்கு வீட்டுமனை, விவசாயிகளுக்கான உரிமைகள், பழங்குடி மக்களுக்கு உத்தரவாதமான சட்டங்கள் என இவற்றில் எதுவும் கம்யூனிஸ்ட்கள் இல்லாமல் வந்து விடவில்லை. இந்த உரிமைகளையும் சட்டங்களையும் பெறுவதற்காகப் பல அடக்குமுறைகளையும் ஏராளமான உயிர்த் தியாகங்களையும் செய்தது கம்யூனிஸ்ட் இயக்கம்தான்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சுதந்திர இந்தியாவிலும் கடுமையான பல சோதனைகளையும் அடக்குமுறைகளையும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்தது. ஹைதராபாத் நிஜாம் உட்பட இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. ‘சமஸ்தானங்கள் தனியாகவும் இருக்கலாம்; இந்தியாவுடன் சேர்ந்தும் இருக்கலாம். அது சமஸ்தானங்களின் விருப்பம்’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள். ஆகையால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா வுடன் சேருவதற்கு பல சமஸ்தானங்கள் மறுத்தன. சமஸ்தானங்களில் நிலக்குவியல் இருந்தது. சமூகத்தின் பின்தங்கிய நிலைமைகள் இருந்தன. ஹைதராபாத் நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்கள் நின்றனர். அந்தப் போராட்டத்தில், கிட்டத்தட்ட 30,000 கம்யூனிஸ்ட்கள் மரணமடைந்தனர். கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு அது மிகப்பெரிய இழப்பு.

1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, கட்சியின் வெகுமக்கள் செல்வாக்கு தேசிய அளவில் குறையத் தொடங்கியது.

1952-ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், அதிகமான இடங்களில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங் களை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட சென்னை ராஜதானியில், கம்யூனிஸ்ட்கள் ஆட்சியமைக்கக் கூடிய சூழல்கூட இருந்தது. ஆனால், சில காரணங்களால் ஆட்சியமைக்க முடியவில்லை.

1964-ம் ஆண்டுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலம் வாய்ந்த அரசியல் இயக்கமாக இருந்தது. ஆனால், 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, கட்சியின் வெகு மக்கள் செல்வாக்கு தேசிய அளவில் குறையத் தொடங்கியது. ஆனாலும், பிளவுக்குப் பிறகு சில மாநிலங்களில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வர முடிந்தது. சி.பி.எம் தலைமையிலான இந்த ஆட்சியில் சி.பி.ஐ அங்கம் வகித்தது. தற்போது, கேரளாவில் நடைபெறும் இடது ஜனநாயக முன்னணி அரசிலும் சி.பி.ஐ இடம்பெற்றுள்ளது. இந்திய அளவில் பொதுவான மாற்றம் நிகழ, கட்சியில் ஏற்பட்ட பிளவு ஒருவிதமான பின்னடைவை உருவாக்கிவிட்டது என்ற உண்மையை மறுக்க முடியாது.

கம்யூனிஸ்ட் பிளவு... உண்மை என்ன?

‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக காங்கிரஸை எதிர்க்கவில்லை’ என்பதே பிளவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் அந்தப் பிளவுக்கு உண்மையான காரணம். சீனாவும் ரஷ்யாவும் கம்யூனிசத்தை அடைவதற்கு வெவ்வேறு கொள்கை வழிமுறை களைக்கொண்டிருந்தன. அப்போது, சீன ஆதரவு நிலைப்பாட்டை சி.பி.எம்-மும், ரஷ்ய ஆதரவு நிலைப் பாட்டை சி.பி.ஐ-யும் எடுத்தன. அதுதான் பிளவுக்குக் காரணம்.

ஆனால், இன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரே இயக்கமாக இணைய வேண்டியது மிகவும் அவசியமானது. சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில், பிளவுகள் தேவையில்லை என்ற குரல் வலுவாக எழுந்தது. இந்தியாவில் தனித்தனியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கட்சியாகச் சேர்வதே நல்லது. ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்களும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ‘ஒரே கம்யூனிஸ்ட் கட்சி’ என்று வருமானால், இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை இடதுசாரி களால் ஏற்படுத்த முடியும்.

நேபாளத்தில், முரண்பட்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கட்சியாக ஆன பிறகுதான், அங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்சிப் பொறுப்பு கிடைத்தது. உலகமயத்தின் தீவிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதுமான முழக்கம். ஒற்றுமையாக இருப்பது என்ற கருத்தில் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளுமே வேறுபட வில்லை. இருவருமே அதைப் பேசுகிறார்கள். ஆனாலும், குறிப்பிட்ட கால வரையறை வகுத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கட்சியாக மாற வேண்டும். அதுதான் இன்றைய உலகமயமாக்கலை எதிர்ப்பதற்கும் மூர்க்கம்கொண்ட பா.ஜ.க-வின் தவறான அரசியலைத் தகர்ப்பதற்கும் அவசியமாக இருக்கிறது. அதை நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் அடியெடுத்து வைப்பதுதான் இன்றைய தேவையாகும்.