Election bannerElection banner
Published:Updated:

`டபுள் டிஜிட்டே எங்கள் நோக்கம்' - சி.பி.எம்; `சிங்கிள் டிஜிட்டே உங்களுக்குப் போதும்' - தி.மு.க.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒருவழியாகச் சமாளித்து சி.பி.ஐ கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை ஃபைனல் செய்துவிட்டார் ஸ்டாலின். காங்கிரஸ் கட்சிபோலவே, சி.பி.எம் கட்சியும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவருகிறது. இன்று இரவுக்குள் விடை தெரிந்துவிடும்.

ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பிஸியாக இருக்கின்றன. இரண்டு திராவிடக் கட்சிகளுமே கூட்டணிக் கட்சிகளிடம் இந்த முறை ரொம்பவும் கறார் காட்டிவருகின்றன. அதிலும், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படும் தி.மு.க-வோ, சர்வாதிகாரத்தனமாகச் செயல்படுகிறது என்கிறார்கள் சிலர். நேற்று (மார்ச் 5-ம் தேதி) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர்விட்டு அழுததைவைத்தே இதைத் தெரிந்துகொள்ளலாம்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இதுவரை தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும், சி.பி.ஐ-க்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. சி.பி.எம்., காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இன்னும் பிடிவாதமாகவே இருக்கின்றன. மார்ச் 6-ம் தேதியான இன்று காலைகூட சி.பி.எம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர்.

இது குறித்து சி.பி.எம். கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது, ``முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஸ்டாலின் அதிகமாகக் கறார் காட்டுகிறார். எந்தக் கட்சி பேச்சுவார்த்தைச் சென்றாலும், அந்தக் கட்சியின் சமீபத்திய வாக்கு சதவிகிதம் குறித்த கிராஃப் ஒன்றை வைத்துக்கொண்டுதான் பேசுகிறார்கள். சி.பி.ஐ-கூட மனவேதனையுடன்தான் ஒப்புக்கொண்டது. சி.பி.ஐ-க்கு 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை நாட்டிலேயே ஒரு எம்.பி-தான் இருந்தார். அந்தத் தேர்தலில் வெற்றிபெறாமல் போயிருந்தால், அந்தக் கட்சியின் அங்கீகாரமே கேள்விக்குறியாகியிருக்கும். அப்படி நடக்கவிடாமல் தி.மு.க இரண்டு எம்.பி தொகுதி கொடுத்து கைதூக்கிவிட்டது. இதைச் சொல்லிக்காட்டியே சி.பி.ஐ-யை ஆறு தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது. முத்தரசனும் கோபமான முகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

முத்தரசன்
முத்தரசன்
ம.அரவிந்த்

அதுபோல, எங்களால் குறைவான தொகுதிகளுக்கு கமிட்டாக முடியாது. ஏனெனில், ஏற்கெனவே கேரளாவில் ஆட்சியில் இருக்கிறோம். இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். மேற்கு வங்கத்திலும் விட்ட ஆட்சியைப் பிடிப்போம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதனால், குறைந்த இடங்களுக்கு ஒப்புக்கொண்டால் தன்மானத்துக்கான இழுக்கு. 2011 சட்டமன்றத் தேர்தலின்போதே அ.தி.மு.க எங்களுக்கு 12 தொகுதிகள் கொடுத்தது. 10 ஆண்டுகளில் கட்சி வளர்ச்சி அடைந்திருப்பதால், 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டுவருகிறோம். அப்படி இல்லையென்றால், இரண்டு எம்.பி தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் ஜெயலலிதா கொடுத்ததுபோலவே 12 தொகுதிகளாவது வேண்டும் என்கிறோம்.

தி.மு.க நான்கு தொகுதிகளில் இருந்து பேரத்தைத் தொடங்கியது. இறுதியில், இன்று பேச்சுவார்த்தைக்கு போனபோது, `சி.பி.ஐ.க்கு ஆறு தொகுதிகளை ஃபைனல் பண்ணிவிட்டோம், அதேயளவு கொடுக்கிறோம். இல்லையென்றால், ஒன்று கூட்டி ஏழு-ஆகக் கொடுக்கிறோம். மறுக்காமல் பெற்றுக்கொண்டு ஜெயிக்கிற வழியைப் பாருங்கள்’ என்று சி.பி.ஐ-யைக் காட்டிச் சொல்கிறார்கள். எதுவும் பேச முடியாத சூழலில், `ஆலோசனை செய்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம். பின்னர், மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் டபுள் டிஜிட்டிலிருந்து இறங்கி வரவே கூடாது என்ற முடிவை எடுத்திருக்கிறோம்” எனச் சொல்லி முடித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு