Published:Updated:

மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி: `குருஷேத்ரா போரின் மத்தியில் இருக்கிறோம்!' - சிவசேனா

உத்தவ் தாக்ரே
உத்தவ் தாக்ரே

பல முனையில் இருந்து நெருக்கடியை சந்தித்து வரும் மகாராஷ்டிரா குருஷேத்ரா போரின் மத்தியில் இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, இட ஒதுக்கீடு பிரச்னை, விமான நிலைய பெயர் பிரச்னை என பல முனைகளில் இருந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. பாஜகவின் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் சிவசேனா கூட்டணி அரசு திணறி வருகிறது. இது குறித்து சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா கொரோனா பரவலுக்கு எதிராக போராடி வருகிறது.

சரத் பவார் - உத்தவ் தாக்கரே
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

அதுமட்டுமல்லாமல் எதேச்சதிகாரர்களின் அமலாக்கத்துறை, சிபிஐக்கு எதிராகவும் போராடுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதேச்சதிகாரர்களுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றுவிட்டார். மகாராஷ்டிராவும் அதே போன்ற வழியை பின்பற்ற வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் முதல்வர் பிரதமரிடம் தெரிவிக்கவேண்டும். முதல்வர் உத்தவ்தாக்கரேயும், சரத்பவாரும் சந்தித்து பேசியது போன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும். மகாபாரதத்தில் கிருஷ்ணர் ரதத்தை குருஷேத்ர போரின் மைய பகுதிக்கு கொண்டு சென்று எதிரிகளுடன் அனைத்து திசைகளிலும் போரிட்டு அதர்மத்தை தோற்கடித்தார். அது போன்ற ஒரு நிலைதான் மகாராஷ்டிரா அரசுக்கு இருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை என பல முனையில் இருந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதில் பாஜக அபிமன்யுவாக இருக்கக்கூடாது. அபிமன்யு போர் யுத்திகள் இல்லாமல் கடினமான போரில் சென்று மாட்டிக்கொள்வார். அது போன்ற ஒரு நிலை பாஜகவிற்கு வேண்டாம்.

முதல்வர் இப்போது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். கூட்டணி அரசில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் திருப்தியளிக்கும் பதவிகளில் இருக்கின்றனர். எனவே மூன்று கட்சிகளை கொண்ட மகாவிகாஷ் அகாடி அரசு குருஷேத்ர போரில் கிருஷ்ணரின் ரதத்தை போன்று நகர்ந்து சென்று எதிரிகளை அழித்துக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா கூட்டணி அரசை கவிழ்த்துவிடலாம் என்ற பாஜகவின் நம்பிக்கை மொத்தமாக அழிந்துவிட்டது. மகாராஷ்டிரா அரசு கவிழும் என்று பாஜக தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம். ஆனால் அது நடக்கப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை உத்தவ்தாக்கரே தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது குறித்து குறிப்பிட்டுள்ள சாம்னா, இருவரும் சந்தித்து பேசியவுடன் ரகசியமாக ராஜ்பவனில் பதவியேற்பு நடக்கப்போவதாக வதந்தி பரவியது. அப்படி யாராவது கனவு கண்டிருந்தால் அது அரசியல் கனவாகவே இருக்கும். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை பயன்படுத்தி மகாராஷ்டிராவில் பாஜக அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் பாஜக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் அனில் பரப் மீதான லஞ்சப்புகார் குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இது தொடர்பாக அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் அமைச்சர் அனில் பரப் ஆகியோர் போலீஸாரிடம் மாமூல் வாங்கி கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்ததாக போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மூலம் முழுமையாக விசாரிக்கவேண்டும் என்று சந்திரகாந்த் பாட்டீல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சச்சின் வாஸ் மாமூல் புகார் தெரிவித்த மற்றொரு அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி வருவதையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு