ஜெயலலிதாவுக்கு ஏன் நன்றி சொல்லவில்லை? -3 ஆண்டு சாதனை விளம்பரத்தால் கொதிக்கும் சி.ஆர்.சரஸ்வதி

ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. எடப்பாடியின் மூன்றாண்டு சாதனை விளம்பரங்களில் ஒரு வார்த்தைகூட ஜெயலலிதாவுக்கு நன்றி கூறவில்லை என்று அ.ம.மு.க கொள்கைப் பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி பேசியிருக்கிறார்.
மதுரையில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, ``சமூக நல்லிணக்க மண்ணான மதுரையிலிருந்து சத்தியமிட்டுச் சொல்கிறேன். ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. எடப்பாடியின் மூன்றாண்டு சாதனை விளம்பரங்களில் ஒரு வார்த்தைகூட ஜெயலலிதாவுக்கு நன்றி கூறவில்லை.

மோடி அப்போது வந்து பார்த்திருந்தால் அம்மாவின் மரணம் குறித்த வதந்திகள் வந்திருக்காது, மோடி ஏன் வரவில்லை என்பது தெரியவில்லை. எட்டு வழிச்சாலை அமைக்க அடம் பிடித்த எடப்பாடி தற்போது தேர்தலுக்காக விவசாயி வேடமிடுகிறார். அப்பாவி மக்களைச் சுடுவதும், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவளித்து சிறுபான்மையினருக்குத் துரோகம் செய்ததுதான் இந்த அரசின் சாதனை.
அம்மாவுக்கு உடல் நலன் குன்றியதைப் பார்த்து கண்ணீர் வடித்து, பெற்ற தாயைப்போல கவனித்துகொண்டவர் சின்னம்மா. எடப்பாடி ஆட்சியை அமைத்து கொடுத்த சின்னம்மா விரைவில் வருவார்.
ஸ்டாலின் கனவு முதல்வராகவே வாழ்ந்துவருகிறார், அவரின் கனவு பகல்கனவுதான். அம்மாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின். பிரசாந்த் கிஷோரை அழைத்த ஸ்டாலினுக்கு தி.மு.க-வினர் மீது நம்பிக்கை இல்லையா... இந்து மந்திரங்களில் ஆபாச வார்த்தை உள்ளதாகக் கூறும் ஸ்டாலின் இந்துக்களின் வாக்குகள் வேண்டாம் என ஏன் கூறவில்லை.

அடுத்து அ.ம.மு.க ஆட்சிதான் அமையும். இரட்டை இலை துரோகிகளின் கையில் சிக்கியுள்ளது அதை அ.ம.மு.க மீட்கும். `நான் வாழ வைத்தவர்கள் எனக்குத் துரோகம் செய்துவிட்டனர். நான் பார்க்காத தொண்டர்கள் எனக்காக இருப்பதால் அவர்களுக்காகப் பாடுபடுவேன்' எனச் சின்னம்மா கூறி வருகிறார். நெல்லையில் கூடிய அ.ம.மு.க தொண்டர்களின் கூட்டம் அடுத்த ஆட்சி அமைப்பதற்காகக்கூடிய கூட்டம்.
அம்மாவின் மரணத்தில் மர்மம் எனக் கூறி அப்பட்டமாகப் பொய் சொல்லி வரும் ஓபிஎஸ்ஸுக்கு அம்மாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி முழுமையாகத் தெரியும். எடப்பாடி ஆட்சி பணம் சம்பாதிக்கும் ஆட்சிதான். பணத்தைக் கொடுத்து தேர்தலில் வென்று விடலாம் என்று நினைக்கின்றனர். அது நடக்காது'' என்றார்.