Published:Updated:

கே.பி முனுசாமி வைத்த செக்... இறங்கி வந்த பா.ஜ.க! - `முதல்வர் வேட்பாளர்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர், மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி
பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர், மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி

கே.பி முனுசாமி பற்றவைத்த நெருப்பால்தான் இன்று பி.ஜே.பி இறங்கி வந்திருப்பதாகவும், பா.ஜ.க-வை எடப்பாடி சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கியிருக்கின்றன.

சமீபகாலமாக `தமிழகத்தில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க அறிவிக்கும்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கருத்து தெரித்துவந்த நிலையில், `அ.தி.மு.க-தான் பெரிய கட்சி. அவர்கள்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கே.பி.முனுசாமியின் பேச்சைப் பொருட்படுத்தப்போவதில்லை’ என்று இரு கட்சிகளுக்கும் நடக்கும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பா.ஜ.க மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி.

மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி
மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி

பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி, திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டைப் பகுதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``தமிழகத்தில் பெரிய கட்சியாக இருப்பது அ.தி.மு.க-தான். அவர்களுக்குப் பிறகுதான் பா.ஜ.க. எனவே, அவர்களை முன்வைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலைச் சந்திக்கப்போகிறோம். தமிழக மக்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு சரியான வெற்றியைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

பிரதமர் மோடி செய்திருக்கும் நன்மைகள் பற்றி மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அத்தோடு மோடியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவரைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

திருச்சி பா.ஜ.க வினர்
திருச்சி பா.ஜ.க வினர்

தமிழகத்தில் அ.தி.மு.க பெரிய கட்சி என்பதால், அவர்கள்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கே.பி.முனுசாமி சொல்லும் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுப்பதே இறுதி முடிவு. அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

`யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க அறிவிக்கும் என்று உங்களது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து பேசிவருகிறார்களே...’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, `அதெல்லாம் ஒன்றுமில்லை. எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்’ என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டுச் சென்றார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

முன்னதாக அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் ஒன்று அ.தி.மு.க அல்லது தி.மு.க மேல் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும். அவர்களால் இங்கு எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது’ என்றார் அதிரடியாக.

கே.பி.முனுசாமி பற்றவைத்த நெருப்பால்தான் இன்று பா.ஜ.க இறங்கி வந்திருப்பதாகவும், பா.ஜ.க-வை எடப்பாடி சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்றும் அ.தி.மு.க வட்டாரத்தினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு