Published:Updated:

``அண்ணே நீங்க யாருனு சொல்லுங்க..!" - கடலூர் திமுக-வில் கலகத்தை ஏற்படுத்தும் வைரல் ஆடியோ

திமுக | செல்போன் உரையாடல்

கடலூர் மாவட்ட தி.மு.க-வில் ஏற்கெனவே உட்கட்சிப் பூசல் நிலவி வரும் சூழலில், தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவரின் வாரிசு அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவரை மிரட்டுவதாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

``அண்ணே நீங்க யாருனு சொல்லுங்க..!" - கடலூர் திமுக-வில் கலகத்தை ஏற்படுத்தும் வைரல் ஆடியோ

கடலூர் மாவட்ட தி.மு.க-வில் ஏற்கெனவே உட்கட்சிப் பூசல் நிலவி வரும் சூழலில், தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவரின் வாரிசு அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவரை மிரட்டுவதாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Published:Updated:
திமுக | செல்போன் உரையாடல்

புதிதாக உருவாக்கப்பட்ட கடலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், கடலூர் தி.மு.க நகரச் செயலாளருமான கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை அறிவித்தது தி.மு.க. ஆனால் மேயர் சீட்டை எதிர்பார்த்து ஏமாந்துபோன மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தரப்பு, மேயர் தேர்தலுக்கு முதல் நாள் தங்களது ஆதரவு கவுன்சிலர்களை விழுப்புரம் ரிசார்ட்டில் தங்கவைத்தது. அதற்கடுத்த சில மணி நேரங்களில் அந்த ரிசார்ட்டில் குவிந்த போலீஸார், அங்கு தங்கியிருந்த கவுன்சிலர்களைச் சுற்றி வளைத்தனர். தகவலறிந்து குணசேகரனுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை மீட்டுவரச் சென்ற கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனையும் போலீஸ் ரிசார்ட்டில் சிறைவைக்க, மேயராக அறிவிக்கப்பட்டார் சுந்தரி.

ஜூவி கட்டுரை
ஜூவி கட்டுரை

இந்த அதிரடித் திருப்பத்தால் மருந்துகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.எல்.குணசேகரன். அதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த மார்ச் மாதம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் எம்.எல்.ஏ அய்யப்பனை சஸ்பெண்ட் செய்தது கட்சித் தலைமை. அதையடுத்து ஊரில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவுக்கு ’கப்சிப்’ ஆனார் எம்.எல்.ஏ அய்யப்பன். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் பேசிய மேயர் சுந்தரி, “தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்குக் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது” என்று கூறி எம்.எல்.ஏ அய்யப்பனை மறைமுகமாக சீண்டினார். மேயரின் அந்த பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பியது. அதிலிருந்து இருதரப்பு ஆதவாளர்களுக்குமிடையே கோஷ்டி பூசல் நிலவி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் 25.05.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ‘கலெக்‌ஷன்.. கமி’சன்’ அரசியல்… எம்.ஆர்.கே மீது குவியும் புகார்கள்’ என்ற தலைப்பில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையை தி.மு.க-வைச் சேர்ந்த பலர் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அப்படி பதிவு செய்த ஒரு தி.மு.க தொண்டரை தி.மு.க-வின் முக்கியப் புள்ளி ஒருவரின் வாரிசு செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிகச் சரியாக 2.58 விநாடிகள் ஓடும் அந்த செல்போன் ஆடியோ உரையாடலில்…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: ``ஆனந்த் பாபுவா..?”

இரண்டாம் நபர்: ”ஆம் சொல்லுங்க..”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “இந்த வெள்ளப்பாக்கம் கார்த்திக் போட்டார் என்று ஒரு பதிவை காப்பி செய்து போட்டிருக்கிறீர்களே, அதோட கண்டெண்ட் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள் ஆனந்த் பாபு. பதிவு போடுவது முக்கியமில்லை. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கங்க. இது கட்சி சம்மந்தப்பட்டது. இரண்டாவது அதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்கள் ஆதாரத்துடன் இருக்கிறது புரியுதா?”

இரண்டாவது நபர்: “சரிங்க சார்.. நீங்க யாரு..”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “சொல்றேன் முடிச்சிட்டு சொல்றேன். ஆதாரத்தோட இருக்குது. எம்.எல்.ஏ போனை போட்டு கவுன்சிலர்களை கூப்பிட்டாரா? இல்லை கவுன்சிலர்கள் தானாகவே போனாங்களா? இல்லை கவுன்சிலர்கள் உள்ளே வந்ததும் பி.ஏ மூலம் அவர்களின் போனை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் பண்ணதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க”

செல்போன் உரையாடல்
செல்போன் உரையாடல்
மாதிரிப் படம்

இரண்டாவது நபர்: “சரி..”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: ”2021 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிச்சாரு ஜெயிச்சாருன்னு சொல்றீங்களே அது எப்படின்னு எனக்கு தெரியல. 2018 வரைக்கும் அ.தி.மு.க-வில் இருந்துட்டு 2019-ல் தி.மு.க-வுக்கு வந்ததும் இவருக்கு எல்லோரும் ஓட்டு போட்டுட்டாங்களா?”

இரண்டாவது நபர்: “இல்லைண்ணே நீங்க யாருன்னு சொல்லுங்க..”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “பதில் சொல்றேன் இரு. முதலில் நான் சொல்ல வந்ததை தெரிஞ்சிக்கங்க. ரிட்டர்ன் கம்ப்ளைண்டில் அந்த பதிவுகளை யாரெல்லாம் போட்டார்களோ அனைத்தும் இருக்குது. இது கட்சி சம்மந்தப்பட்ட விஷயம். உங்க எம்.எல்.ஏ மேல எத்தனை நில அபகரிப்பு வழக்கு இருக்குது தெரியுமா ? எஃப்.ஐ.ஆர் போட்டு நான்கு கேஸ்கள் பெண்டிங்கில் இருக்குது. எல்லாத்தையும் நெட்டில் விட்டுடுவோம்”

இரண்டாவது நபர்: “சரி.. சரி..”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “உங்க ஐடியை டேக் பண்ணி எல்லாத்தையும் நாங்கள் போட்டால் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மானம் மரியாதையும் போயிடும். இரண்டாவது நீயும் உள்ளே போயிடுவ.

இரண்டாவது நபர்: “அப்படிங்களா..?”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “தம்பி நீ சேலஞ்ச் பண்றியா ?

இரண்டாவது நபர்: “யாருன்னு பேரு கூட சொல்லாம நீங்க பேசக்கூடாது”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “நான் சொல்றேன் தம்பி..”

ஃபேஸ்புக் | Facebook
ஃபேஸ்புக் | Facebook

இரண்டாவது நபர்: “எங்களுக்கு சி.எம் தளபதி இருக்காரு. நீங்க யாருன்னு தெரியாது. தளபதியோட கட்டளையைத்தான் நாங்கள் கேட்போம்”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “தளபதி கட்டளையை கேளு.. கட்டையில கேளு. அது வேற”

இரண்டாவது நபர்: “தளபதியை கொச்சைப்படுத்தி பேசக் கூடாது ஓ.கே-வா? ”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “தளபதியை யார் கொச்சைப்படுத்தி பேசியது?”

இரண்டாவது நபர்: ”இந்த நம்பரை ட்ராக் செய்து நீங்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட முடியும். தளபதிக்கிட்டயே நேரில் போய் சொல்ல முடியும்”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “யோவ் நீ ட்ராக் பண்ண வேணாம்டா..”

இரண்டாவது நபர்: “யார் நீங்க ? அதை சொல்ல முடியல. பெயரை சொல்ல முடியல. என் பேரை மட்டும் ஆனந்த் பாபுன்னு சொல்றீங்க?”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “உனக்கு அவ்ளோ தைரியம்தானே.. ஏய் நீ அந்த பதிவை நீக்காத. அதோட விளைவு என்னனு உனக்கு காட்டறேன். நான் கம்ப்ளைண்ட் கொடுக்கும்போது, உன்னை போலீஸ் தூக்கிட்டு வருவாங்க இல்ல. எதற்காகனு விளக்கம் சொல்வ இல்ல அப்போ நேரில் பார்க்கிறேன்”

இரண்டாவது நபர்: “போலீஸ் தூக்கட்டும் சார்.. உங்க பேர் சொல்லுங்க”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “நீ யாருய்யா கட்சியைப் பற்றி பேசுறதுக்கு? கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கற? கட்சியில் நீ யாரு?”

இரண்டாவது நபர்: “நான் தளபதி தி.மு.க கட்சியில்..”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: ”அடச்சீ வாயை மூடு. தளபதியை வச்சி என்ன தளபதி.. எவன் தளபதி ? 2016-ல் இருந்து 2019 வரைக்கும் அ.தி.மு.க-வில் புடுங்கிட்டு இருந்தியா? தளபதி.. கட்சிங்கற?”

இரண்டாவது நபர்: “உங்க வார்த்தையை என்னாலும் பேச முடியும். ஆனால் தளபதிக்கு நான் கட்டுப்பட்டு இருக்கேன்”

முக்கியப் புள்ளியின் வாரிசு எனச் சொல்லப்படும் நபர்: “உன் பதிவை நீ நீக்காதே. உன் பதிவுக்கு நீ உள்ளே போறியா இல்லையான்னு மட்டும் பாரு, வை”

இரண்டாவது நபர்: ”உங்க பேரு என்னன்னு சொல்லுங்க” என்று கேட்பதுடன் அந்த உரையாடல் முடிவுக்கு வருகிறது.

சொந்தக் கட்சியினருக்குள்ளே நடைப்பெற்ற இந்த செல்போன் உரையாடல் கடலூர் மாவட்ட தி.மு.க-வினரிடையே கலகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது ஒருபுறமிருக்க ஜூனியர் விகடனில் வெளிவந்த அந்த கட்டுரையை வாட்ஸ்-அப் குழுக்களில் பதிவிட்ட ஒரு நகராட்சி உயரதிகாரி, தானும் சாதி ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பதிவு செய்திருந்தார். அதன் விளைவாக தற்போது அந்த அதிகாரி மலை மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism