Published:Updated:

டபுள் கேம் ஆடும் ரணில்... நாடற்று அலையும் கோத்தபய... இலங்கையில் நடப்பது என்ன?

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

நாளுக்கு நாள் அரசின் அடக்குமுறைகள் அதிகமாவதை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும், மாணவர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.

டபுள் கேம் ஆடும் ரணில்... நாடற்று அலையும் கோத்தபய... இலங்கையில் நடப்பது என்ன?

நாளுக்கு நாள் அரசின் அடக்குமுறைகள் அதிகமாவதை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும், மாணவர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி சற்று தணிந்திருந்தாலும், பொருளாதார நெருக்கடியைச் சரிக்கட்ட ஒரு நிரந்தரத் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. ரணில் விக்ரமசிங்க அதிபராகி ஒரு மாதம் கடந்துவிட்டது. என்ன நடக்கிறது இலங்கையில்?

நாடற்று அலையும் கோத்தபய!

கடந்த ஜூன் 9-ம் தேதி அன்று, லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அங்கிருந்து தப்பி மாலத்தீவுக்குச் சென்றார் கோத்தபய ராஜபக்சே. ஜூன் 14-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றவர், ஆகஸ்ட் 11-ம் தேதி தாய்லாந்துக்குப் பறந்தார். எந்த நாடும் அவருக்கு அடைக்கலம் கொடுக்கத் தயாராக இல்லாததால், மீண்டும் இலங்கைக்கு வரத் திட்டமிட்டார். கோத்தபயவின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதருமான உதயங்க வீரதுங்க, ``ஆகஸ்ட் 24-ம் தேதி, கோத்தபய இலங்கைக்கு வரவிருக்கிறார்’’ என்றார். இந்தச் செய்தி வெளியானதும், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்ப, கோத்தபய இலங்கைக்கு வர ரணில் அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில், தன் மனைவியின் அமெரிக்கக் குடியுரிமையை முன்வைத்து, அங்கு கிரீன் கார்டு பெறும் வேலைகளிலும் கோத்தபயவின் வழக்கறிஞர்கள் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கே குடியுரிமை பெற்றிருக்கும் தன்னுடைய மகன் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்பது கோத்தபயவின் திட்டம். ஆனால், அவருக்கு அமெரிக்கா விசா வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. 2019 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது அமெரிக்கக் குடியுரிமையை கோத்தபய ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.

டபுள் கேம் ஆடும் ரணில்... நாடற்று அலையும் கோத்தபய... இலங்கையில் நடப்பது என்ன?

``கோத்தபய, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, தமிழ் மக்கள்மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல்களால், ஏராளமான மக்கள் நாடற்று, `அகதிகள்’ என்ற பெயருடன் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந் திருக்கின்றனர். இன்று, அதேநிலைதான் கோத்தபயவுக்கும். இப்போதாவது தனது தவறுகளை அவர் உணர்ந்திருப்பாரா என்பது தெரியவில்லை’’ என்கின்றனர் இலங்கையிலுள்ள சமூக ஆர்வலர்கள்.

டபுள் கேம் ஆடும் ரணில்!

நீண்டகாலம் தாய்லாந்தில் இருக்க முடியாது என்பதால், எப்படியாவது இலங்கைக்கோ, அமெரிக்காவுக்கோ சென்றுவிட வேண்டும் என்ற முடிவிலிருக்கிறார் கோத்தபய. இதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் தனது `இலங்கை பொதுசன முன்னணி’ கட்சியின் எம்.பி-க்கள் மூலம் அதிபர் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். இந்த அழுத்தம் காரணமாக ரணில், `இலங்கைக்கான ஐ.நா-வின் நிரந்தரப் பிரதிநிதியாக நீங்கள் நியமிக்கப்பட்டால், ராஜாங்கரீதியாக உங்களுக்கு அமெரிக்கா விசா வழங்கும். அதனால், நீங்கள் அதிபராக இருந்தபோது நியமித்த இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியிடம் பேசி, அவரை அந்தப் பதவியிலிருந்து விலகிக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்று கோத்தபயவுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். ஆனால், தற்போதைய இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி, கோத்தபயவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ``ரணில் நினைத்தால், தன்னுடைய அதிபர் அதிகாரத்தை வைத்து தற்போதைய பிரதிநிதியை நீக்கிவிட்டு, கோத்தபயவை இலங்கைக்கான ஐ.நா-வின் நிரந்தரப் பிரநிதியாக நியமிக்க முடியும். ஆனால், தான் அதிபராக நீண்டகாலம் இருக்க வேண்டும் என்பதால், எந்தவொரு ரிஸ்க்கையும் அவர் எடுக்கத் தயாராக இல்லை. எல்லா விவகாரங்களிலுமே டபுள் கேம் ஆடுகிறார் ரணில்’’ என்கின்றனர் இலங்கை அரசியல் நோக்கர்கள்.

ஒடுக்கப்படும் போராட்டங்கள்!

நாளுக்கு நாள் அரசின் அடக்குமுறைகள் அதிகமாவதை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும், மாணவர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், `ரணில் - ராஜபக்சே டீல் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’ என்று கோஷம் எழுப்பப்பட்டது. பேரணியாக வந்த மாணவர்களை, தண்ணீர் பீய்ச்சி, தடியடி நடத்திக் கலைத்தது காவல்துறை. மேலும், பல்கலைக்கழக மாணவர் தலைவர் வசந்தம் முதலிகே உட்பட ஆறு பேர் கைதும் செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாணவர் தலைவரை 90 நாள்கள் காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதியளித்திருக்கிறது. இதனால், கடும் கொந்தளிப்பிலிருக்கிறார்கள் இலங்கை மாணவர்கள். மீண்டும் அரசுக்கு எதிராக மக்கள் கிளம்பிவிடக் கூடாது என்பதில், ரணில் மிகவும் கவனமாக இருப்பதைத்தான் இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உணர்த்துகின்றன.

ரணில் விக்ரமசிங்க - கோத்தபய ராஜபக்சே - மகிந்த ராஜ பக்சே
ரணில் விக்ரமசிங்க - கோத்தபய ராஜபக்சே - மகிந்த ராஜ பக்சே

பாதிக்கப்படும் குழந்தைகள்!

இலங்கையில், ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ரூ.87-க்கு (இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், தற்போது 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.10-க்கு கிடைத்த கோழிமுட்டை, தற்போது 65 ரூபாயாக உயர்ந்துவிட்டது. 50 ரூபாய்க்குக் கிடைத்த ஒரு ஆப்பிள் பழம், தற்போது 250 ரூபாயாகிவிட்டது. இப்படி, பல்வேறு பொருள்களின் விலையும் ஏறிக்கொண்டே செல்வதால், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ``உணவுப்பொருள்களின் விலை உச்சம் தொட்டிருப்பதால், பல குடும்பங்களுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்கிறது. இதனால், குழந்தைகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். ஊட்டச்சத்து குறைந்த ஒரு தலைமுறை இலங்கையில் உருவாகிக்கொண்டிருக்கிறது’’ என்று பகீர் கிளப்புகின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

`என்னிடம் கேட்டிருந்தால்..!’

சமீபத்தில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மகிந்த ராஜ பக்சே அளித்த பேட்டியில், ``நாட்டைவிட்டு வெளியேறலாமா என்று கோத்தபய என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்றிருப்பேன். இந்த நெருக்கடிக்கு அவர் மட்டுமே காரணமல்ல. நான், முந்தைய அரசுகள் உட்பட அனைவருமே நாட்டின் இந்த நிலைக்கு பதில் சொல்ல வேண்டும்’’ என்றவர், ``விரைவான பொருளாதார மீட்சியைக் கொண்டுவரக்கூடிய ஒரே திறமையான நபர் ரணில் மட்டுமே’’ என்றும் கூறியிருக்கிறார்.

இலங்கை மக்களின் போராட்டம், இப்போதைக்கு ஓயப்போவதில்லை!