அலசல்
சமூகம்
Published:Updated:

சாவி வாங்கியும் புண்ணியமில்லை... காத்து வாங்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!

எம்.ஜி.ஆர் மாளிகை
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.ஜி.ஆர் மாளிகை

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆளுங்கட்சிக்கு எதிராக நடந்தவேண்டிய போராட்டம் குறித்து மூத்த நிர்வாகிகள் இங்குதான் ஆலோசனை நடத்துவார்கள்.

அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையின் சாவிக்கொத்துக்காக நடந்த சண்டை கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த ஜூலை 11-ம் தேதி, வானகரத்தில் ஒற்றைத் தலைமைக்காக எடப்பாடி தரப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, பன்னீர் தன் ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டார். அப்போது, எடப்பாடி தரப்பு மற்றும் பன்னீர் தரப்புக்கு இடையில் நடந்த கைகலப்பால் அந்த இடமே கலவரமானது. இதனால் சீல் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மாளிகை, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி தரப்புக்கே கொடுக்கப்பட்டது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த எம்.ஜி.ஆர் மாளிகை தற்போது எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு நேரடி விசிட் அடித்தோம்...

சாவி வாங்கியும் புண்ணியமில்லை... காத்து வாங்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!

வெறிச்சோடிய அலுவலகம்!

எம்.ஜி.ஆர் மாளிகை அமைந்திருக்கும் அவ்வை சண்முகம் சாலையின் இருமுனையிலும் பேரிகார்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றைத் தாண்டி அலுவலகத்துக்குச் சென்றபோது, ‘தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகமா இது?’ என்ற அதிர்ச்சி எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ஜூலை 11-ம் தேதி கலவரத்துக்குப் பிறகு, அலுவலகத்தைச் சுற்றி 30 போலீஸார் எப்போதும் காவலுக்கு இருக்கிறார்கள். அலுவலகத்தில் பணிபுரியும் ஓரிரு ஊழியர்களைத் தவிர வேறு யாருமே இல்லை.

கலவரத்தின்போது உடைக்கப்பட்ட நாற்காலிகள், கண்ணாடிகள் அப்புறப்படுத்தப் படாமல் அப்படியே போட்டு வைக்கப்பட்டிருந்தன. பாசி படர்ந்த பாத் ரூம், நீண்ட நாள்களாக ஒழுகும் தண்ணீர் பைப்புகள் மாற்றப்படாமல் இருந்தன. ஆனால், அலுவலகத்தின் முகப்பிலிருந்த பன்னீரின் படங்கள் இருந்த பேனர்கள் மட்டும் மாற்றப்பட்டு, எடப்பாடி மட்டும் இருக்கும் புது பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வன்முறையின்போது உடைக்கப்பட்டதில் ஓரிரு கதவுகளை மட்டும் சரிசெய்திருக்கிறார்கள்.

சாவி வாங்கியும் புண்ணியமில்லை... காத்து வாங்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!

நிர்வாகிகளே வருவதில்லை!

‘கட்சியின் தலைமை அலுவலகத்துக்குக் கட்சிக்காரர்களே வருவதற்குத் தயக்கம் காட்டுவது ஏன்?’ என்று அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “அம்மா இருந்தபோது கட்சி அலுவலகத்துக்கு எப்போதாவதுதான் வருவார். ஆனால், ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் லோக்கல் உட்கட்சி பிரச்னை, நிர்வாகிகள்மீது புகார் கொடுப்பது, அது தொடர்பான விசாரணை, உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் என்று அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் இருக்கும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆளுங்கட்சிக்கு எதிராக நடந்தவேண்டிய போராட்டம் குறித்து மூத்த நிர்வாகிகள் இங்குதான் ஆலோசனை நடத்துவார்கள். கட்சியின் வழிகாட்டுதல் குழு நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்வார்கள். குறிப்பாக, சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே அலுவலகங்கள் இருந்தாலும், தலைமை அலுவலகத்தில்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இப்போது எல்லாமே தலைகீழாக ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர் மாளிகையே காத்து வாங்குகிறது. எந்த ஆலோசனைக் கூட்டமும் நடப்பதில்லை. எடப்பாடி வரும்போது மட்டும்தான் கூட்டம் வருகிறது. தலைமை அலுவலகத்துக்கு நியூஸ் பேப்பர்கூட முறையாக வாங்குவதில்லை.

சாவி வாங்கியும் புண்ணியமில்லை... காத்து வாங்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!

சொந்த வேலையாக சென்னைக்கு வரும் தொண்டர்கள், ‘ஒரு எட்டு நம்ம கட்சி ஆபீஸுக்குப் போயிட்டு வருவோம்’ என உற்சாகத்தோடு வந்த காலமெல்லாம் போய்விட்டது. தலைமை அலுவலகம் இப்படி முடங்கிக்கிடக்கும் நிலையில், தொண்டர்கள் எப்படி வருவார்கள்... தலைமை அலுவலகத்தில் விசாரிக்கவேண்டிய உட்கட்சிப் பிரச்னைகளையெல்லாம், இப்போது மாவட்டச் செயலாளர்களே பஞ்சாயத்து பேசி முடித்து விடுகிறார்கள். இதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தலைமையிடம்தான் இருக்கின்றன. தலைமை அலுவலக நிர்வாகிகளிடம் கேட்டால், ‘பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதால் அடிக்கடி அலுவலகம் வர முடிவதில்லை’ என்று காரணத்தை அடுக்குகிறார்கள்.

`அவரை விடுங்கள்... துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன்கூட தலைமை அலுவலகம் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லையே ஏன்?’ என்ற கேள்விக்கு பதிலில்லை. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் போன்றோரெல்லாம் எடப்பாடி வந்தால்தான் இந்தப் பக்கமே வருகிறார்கள். பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் எம்.எல்.ஏ-க்கள்கூட அலுவலகத்தை எட்டிப் பார்ப்பதில்லை. இப்படியே போனால் கட்சியின் நிலைமை மோசமாகிவிடும். ஏற்கெனவே, சென்னையை மொத்தமாக தி.மு.க-வுக்குத் தாரைவார்த்து விட்டோம். நீதிமன்றத்துக்குச் சென்று அலுவலகத்தின் சாவியை வாங்கியும் எந்தப் புண்ணியமும் இல்லை. கட்சியின் பொன்விழாவைக் குறிக்கும்விதமாக தலைமை அலுவலகத்தில் ஒரு போர்டுகூட வைக்கவில்லை. நிலைமை மேலும் மோசமாவதற்குள் தலைமை அலுவலகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொரிந்து தள்ளினார்கள்.

சாவி வாங்கியும் புண்ணியமில்லை... காத்து வாங்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!

கட்சி அலுவலகம், கட்சியின் இன்றைய நிலையையும்தான் காட்டுகிறது. தலைமை சுதாரிக்கவில்லையென்றால், இழப்பு அவர்களுக்குத்தான்!