Published:Updated:

எப்படி இருக்கிறது கோபாலபுரம்?

கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இரட்டை அரசியல் அடையாளங்களாகத் திகழ்ந்தவை கோபாலபுரமும் போயஸ் கார்டனும்!

எப்படி இருக்கிறது கோபாலபுரம்?

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இரட்டை அரசியல் அடையாளங்களாகத் திகழ்ந்தவை கோபாலபுரமும் போயஸ் கார்டனும்!

Published:Updated:
கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி

காலை எட்டு மணிக்கே துரைமுருகன் வந்துவிடுவார். அவருக்கு முன்பாக ஆற்காட்டார் அறைக்குள் இருப்பார். உதவியாளர் சண்முகநாதன் பரபரப்புடன் கோட்டைக்குக் கொண்டு செல்லவேண்டிய ஃபைல்களை எடுத்துவைத்துக்கொண்டிருப்பார். அறைக்குள்ளிருந்து “காரில் ஏறுவோமாய்யா?” என்று கரகரக் குரலில் கேட்டபடி வெளியே வந்து, காத்திருப்பவர்களுக்கு வணக்கம் வைத்துக் கொண்டே காரில் ஏறுவார் கருணாநிதி. கோட்டை யிலிருந்து மதியம் திரும்பிவரும்போதும் கிட்டத்தட்ட இதேபோன்ற அணிவகுப்பு இருக்கும். பொன்முடி, எ.வ.வேலு என தி.மு.க சீனியர்களும் அடிக்கடி இந்த அணிவகுப்பில் இணைவார்கள்.

முதல்வராக கருணாநிதி இருந்தபோது கோபாலபுரம் வீட்டில் வழக்கமாக நடக்கும் காட்சிகள் இவை. பதவியில் இல்லாத நாள்களிலும் இந்தப் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. காலையில் கிளம்பி அறிவாலயத்துக்கோ, முரசொலி அலுவலகத்துக்கோ போவார் கருணாநிதி. பரிவாரங்கள் அப்போதும் காத்திருந்து பின்தொடரும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இரட்டை அரசியல் அடையாளங்களாகத் திகழ்ந்தவை கோபாலபுரமும் போயஸ் கார்டனும்! வெறும் ஒரு கிலோமீட்டர் இடைவெளிக்குள் சென்னையில் அருகருகே கருணாநிதியும் ஜெயலலிதாவும் வசித்தார்கள். டான்சி வழக்கு வெற்றிக்காக போயஸ் கார்டனில் வெடித்த பட்டாசு சத்தம், கோபாலபுரத்தில் முரசொலி மாறன் மறைந்த சோகத்தில் இருந்த கருணாநிதி குடும்பத்துக்குக் கேட்கும் அளவுக்கு அருகருகே இருக்கும் வீடுகள். ஜெ. மறைவுக்குப் பிறகு நினைவு இல்லமாகி போயஸ் கார்டன் இல்லம் பூட்டப்பட்டுவிட்டது. கருணாநிதி இருந்தவரை பரபரப்புடன் காட்சியளித்த கோபாலபுரம் இல்லம், இப்போது அமைதியில் மூழ்கியிருக்கிறது. கோபாலபுரத்தில் இருந்த பரபரப்பு இப்போது செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் மையம் கொண்டுவிட்டது.

எப்படி இருக்கிறது கோபாலபுரம்?

கோபாலபுரம் இல்லத்தில் இப்போது வசிப்பது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மட்டுமே. “அந்த வீட்டின் அருகிலேயே மகள் செல்வியின் வீடு இருக்கிறது. தயாளு அம்மாளை அவர்தான் பொறுப்பாக கவனித்துக்கொள்கிறார். கருணாநிதி இருந்தபோதே, அம்மா தயாளுவைப் பார்த்துக்கொள்ளும் வேலையை செல்வியே செய்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் கருணாநிதி உடல்நலிவுறுவதற்கு முன்பாகவே தயாளு அம்மாள் உடல்நிலை நலிவுற்றார். அதிலிருந்து செல்வியின் அரவணைப்பில்தான் தயாளு இருந்துவருகிறார்” என்கிறார்கள் கோபாலபுரத்தின் பணியாளர்கள்.

கருணாநிதியின் ஆஸ்தான அறை அந்த வீட்டின் முதல் மாடியில் உள்ளது. அந்தச் சிறிய படுக்கையறையில் இருந்தபடிதான் முரசொலிக்குக் கடிதம் எழுதுவது, அறிக்கைகள் எழுதுவது என அனைத்துப் பணிகளையும் கருணாநிதி மேற்கொள்வார். அதற்குப் பக்கத்து அறையில் பிரமாண்டமான நூலகமும் விருந்தினர்களுடன் அமர்ந்து பேசும் அறையும் உள்ளது. அந்த அறைகள் எல்லாம் இப்போதும் அப்படியே உள்ளன. பணியாளர்களை வைத்து அவ்வப்போது சுத்தம் செய்து கச்சிதமாக வைத்திருக்கிறார்கள்.

கீழ்த்தளத்தில் உள்ள வரவேற்பறைக்குப் பக்கத்தில் மாடிப்படிக்குக் கீழே உள்ள சிறிய இடம்தான் கருணாநிதியின் கண்ணசைவாகக் கருதப்பட்ட சண்முகநாதனின் இடம். சண்முகநாதன் அமரும் இடமும் அவரது கணினியும் இருக்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பிறகும் தினமும் கோபாலபுரம் இல்லம் வந்துசென்ற சண்முகநாதன் இப்போது உடல்நலிவுற்றிருப்பதால், அந்த இடமும் இப்போது அமைதியாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி இருக்கிறது கோபாலபுரம்?

கீழ்த்தளத்தில் உள்ள கடைசி அறையில் தயாளு அம்மாள் இருக்கிறார். பல ஆண்டுகளாகவே ஞாபகமறதி பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அந்த அறையை விட்டு அதிகம் வெளியே வருவதில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவரையும் ஸ்டாலின் குடும்பம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த மருத்துவர் மட்டும் அவ்வப்போது வந்து சிகிச்சை அளித்துவிட்டுச் செல்கிறார். அதேபோல் வாரத்திற்கு ஒருமுறை பிசியோதெரபி நிபுணரும் வந்து சிகிச்சை அளிக்கிறார். சில நேரங்களில் வீட்டிற்குள்ளேயே பணிப்பெண் உதவியுடன் சிறிது நேரம் மெதுவாக நடக்கிறாராம். திரவ உணவுகளே தயாளு அம்மாளுக்கு ஒத்துவருவதால், அப்படிப்பட்ட உணவுகள் அதிகம் கொடுக்கிறார்கள்.

மகள் செல்வி சென்னையில் இருந்தால், பல நேரங்களில் தயாளு அம்மாவுக்கு தனது வீட்டிலிருந்து உணவு தயார் செய்து எடுத்துவந்து ஊட்டிவிடுகிறார். செல்வி இல்லாத நேரங்களில், பணிப்பெண் இந்தப் பணியைப் பார்த்துக்கொள்கிறார். பேசுவதைவிட சைகைகள் மூலமே தனக்கு என்ன தேவை என்பதைச் சொல்லும் நிலையில் இருக்கிறாராம் தயாளு. சிறு குழந்தையைப் பார்த்துக்கொள்வதைப் போல தயாளு அம்மாளைப் பார்த்துக்கொள்கிறார்கள் அவரின் உறவுகள்.

எப்படி இருக்கிறது கோபாலபுரம்?

மிக நெருக்கமான ரத்த உறவுகளை மட்டும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அடையாளம் கண்டறிந்துகொள்ளும் நிலையில் உள்ளார் தயாளு. யார் பார்க்கச் சென்றாலும் ‘இன்னார் வந்திருக்கிறேன்’ என்று சொன்னபிறகே, அவர் முகத்தில் மாற்றத்தைப் பார்க்கமுடியும் என்கிறார்கள்.

ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபிறகு தயாளு அம்மாளிடம் ஆசி வாங்கச் சென்றபோது, ‘`அம்மா, அண்ணன் ஜெயிச்சு முதல்வராகிவிட்டார்” என்று செல்வி சத்தமாகச் சொன்னதும், அதைப் புரிந்துகொண்டு சிரித்துள்ளார் தயாளு. அந்தப் போட்டோவைத்தான் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மகன் மு.க.தமிழரசும் தினமும் வந்துவிடுகிறார். பேசுவதைப் புரிந்துகொள்ளும் தன்மை தயாளு அம்மாளிடம் குறைந்துவிட்டாலும், அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் பிள்ளைகள். கருணாநிதி பிறந்த தினம் அன்று கோபாலபுரம் வந்த அழகிரி, அம்மா தயாளு அம்மாள் அறையில் சுமார் ஒரு மணி நேரம் வரை அமர்ந்திருந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அழகிரியை அடையாளம் கண்டுகொண்ட தயாளு, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறார்.

தயாளு மாளுடன் இருக்கும் பணிப்பெண்ணை அவருக்கு நன்றாக அடையாளம் தெரிகிறது. அதே நேரம் கருணாநிதிக்கு நெருக்கமான கட்சியினரையெல்லாம் மறந்துவிட்டார் தயாளு. அவர்களின் பெயர்களைச் சொன்னால் மட்டும் பார்வையில் மாற்றம் தெரிகிறது. கட்சியினர் யாரும் வந்தால், வீட்டில் உள்ள பாதுகாவலர்கள் வரவேற்பறை வரை அனுமதிக்கிறார்கள். அங்குள்ள கருணாநிதியின் படத்தை அவர்கள் வணங்கிச் செல்ல முடியும்.

எப்படி இருக்கிறது கோபாலபுரம்?

முதல்வராகப் பொறுப்பேற்றபிறகும், வாரத்தில் மூன்று நான்கு முறை கோபாலபுரம் வந்துவிடும் ஸ்டாலின், அம்மாவைப் பார்த்துவிட்டு, வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து தன்னுடன் வரும் சக அமைச்சர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டே கிளம்புகிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு கருணாநிதி பிறந்த தினம் அன்று கோபாலபுரம் இல்லம் பரபரப்புடன் இருந்தது. உறவுகள் முதல், கருணாநிதியால் உடன்பிறப்புகள் என்று அழைக்கப்பட்ட பலரும் வந்து கருணாநிதியின் புகைப்படத்தை வணங்கிச் சென்றனர். கருணாநிதி மறைவுக்குப் பிறகும் கோபாலபுரம் இல்லத்தில் காவல்துறையின் பாதுகாப்பு இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது.

60 ஆண்டுக்காலம் தமிழக அரசியல் களத்தின் அடையாளமாக விளங்கிய கோபாலபுரம் இல்லம் இப்போது அமைதி தழுவும் இல்லமாக மாறிவிட்டது.