Published:Updated:

சசிகலா என்ன சூப்பர் வுமனா? - சீறுகிறார் சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.வி.சண்முகம்

அரசாங்கத்துக்கு எல்லா உரிமையும் உள்ளது. மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவர் வாழ்ந்த வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக அரசுடைமையாக்குகிறோம்

‘வேதா இல்லம் வாரிசுகளுக்கே சொந்தம்’ என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஜெ.தீபாவும் தீபக்கும் வேதா இல்லத்துக்குள் மகிழ்ச்சியோடு அடியெடுத்துவைத்திருக்கும் நேரத்தில், ‘தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய’ அனுமதியளித்திருக்கிறது நீதிமன்றம். இதையடுத்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கும் ‘ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை’ உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்திடம் பேசினோம்...

“வேதா இல்லம் தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு பதிலாக நீங்களே மேல்முறையீடு சென்றிருப்பதன் காரணம் என்ன?’’

“இந்த வழக்கில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு, தமிழக அரசுக்கு 21 நாள் கால அவகாசம் கொடுத்திருந்தது நீதிமன்றம். ஆனால், ‘தி.மு.க அரசு மேல்முறையீடு செய்யாது’ என்று நாங்கள் பயந்த மாதிரியே நடந்துவிட்டது. எனவேதான் ‘மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று நான் மனுத்தாக்கல் செய்திருந்தேன். நீதிமன்றமும் அனுமதி அளித்துவிட்டது.’’

“ `மூன்று வார காலத்துக்குள் சாவியை வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற நீதிமன்றத் தீர்ப்பைத்தானே அரசு செயல்படுத்தியிருக்கிறது?’’

“மேல்முறையீடு செய்வதற்கு 21 நாள் கால அவகாசம் இருக்கும்போது, தற்போதைய தமிழக அரசும் சாவியை யாரிடமும் ஒப்படைக்காமல் காத்திருக்க வேண்டும். ‘சாவியை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது’ என்று சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் கடந்த 8-ம் தேதியே நாங்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தோம். ஆனால், மறுநாளே வேதா இல்லத்தின் சாவியை அவசரம் அவசரமாக தீபா, தீபக்கிடம் வழங்கிவிட்டார்கள். காரணம் அ.தி.மு.க மீது இந்த அரசாங்கத்துக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சிதான்.”

“ஆனால், ‘அ.தி.மு.க மீது எங்களுக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது’ என்றுதானே முதல்வரே சொல்லிவருகிறார்?’’

“வெளியில் பேசும்போது மட்டும், ‘எங்களுக்கு அ.தி.மு.க மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. எங்களுக்கும் அம்மாவைப் பிடிக்கும்; ஆட்டுக்குட்டியைப் பிடிக்கும்’ என்றெல்லாம் மகான் மாதிரி மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், நடந்துகொள்வதெல்லாம் சின்னப்புத்தித் தனமாகத்தான் இருக்கிறது. கருணாநிதி இறந்த சமயத்தில், சமாதி தொடர்பாக எழுந்த பிரச்னையின்போது, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல்முறையீடு சென்றிருக்க முடியாதா? ஆனால், நாங்கள் அப்போது பெருந்தன்மையோடு நடந்துகொண்டோம். அந்தப் பெருந்தன்மை தி.மு.க-வுக்கு இல்லை!’’

“ஜெயலலிதாவின் குடும்ப வாரிசுகள் அனுமதியின்றி, அ.தி.மு.க அரசே அறக்கட்டளையை உருவாக்கியது மட்டும் எந்த வகையில் சரி?’’

“அரசாங்கத்துக்கு எல்லா உரிமையும் உள்ளது. மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவர் வாழ்ந்த வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக அரசுடைமையாக்குகிறோம். இதில் என்ன தவறு? எந்தவொரு சொத்தையும் கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. அடுத்து, அறக்கட்டளை ஆரம்பிப்பதற்குச் சம்பந்தப்பட்டவரின் குடும்ப வாரிசுகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.’’

சசிகலா என்ன சூப்பர் வுமனா? - சீறுகிறார் சி.வி.சண்முகம்

“ஆனால், ‘வாரிசுகள் இருக்கும்போதே வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது தவறு’ என்றுதானே நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது?’’

“அது நீதிமன்ற நடைமுறை சம்பந்தப்பட்டது. நாங்களும் அதனால்தான் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிடுங்கள். ‘இவர்கள் ஜெயலலிதாவின் ரத்த வாரிசு இல்லை’ என்றெல்லாம் நாங்கள் யாரையும் சொல்லவில்லை. கையகப்படுத்தப்பட்ட இல்லத்துக்கான மதிப்பைக் கணக்கிட்டு உரிய இழப்பீட்டுத் தொகையைத்தான் அ.தி.மு.க அரசு கட்டிவிட்டதே... சொத்தை இனாமாகக் கேட்டால்தானே குறை சொல்ல வேண்டும்!’’

“ `ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்ல’த்தை வெறுமனே அரசியல் அடையாளமாகப் பார்க்கிறீர்கள். அது எங்கள் குடும்பத்தின் உணர்வுபூர்வமான ஓர் அங்கம்’ என்று ஜெ.தீபா சொல்கிறாரே?’’

“இருக்கலாம்... இந்தச் சர்ச்சைகளுக்குள் நான் வர விரும்பவில்லை. பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட ஓர் அரசியல் தலைவருக்குச் சொந்த பந்தங்களையெல்லாம் தாண்டி, அவர்களது உயிர் என்பது தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியும் பொதுமக்களும்தான்.’’

“சசிகலாவின் கைகளுக்கு ‘வேதா இல்லம்’ சென்று அவரது அரசியலுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், நினைவு இல்லமாக்கத் துடிக்கிறது அ.தி.மு.க என்கிறார்களே?’’

“அரசியலில் இப்படியெல்லாம் ஆயிரம் சொல்லலாம்... இப்போது மட்டும் வேதா இல்லம் எப்படி சசிகலாவின் கைகளுக்குப் போய்விடும்... சசிகலாவா வாரிசு? வேதா இல்லத்தில், ஜெயலலிதா வாழ்ந்தபோது, அவருக்கு உதவியாளராக சசிகலா இருந்தார். அவ்வளவுதான்... உதவியாளருக்கு எப்படி சொத்து போய்விடும்... திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கெல்லாம் சொத்து சேருமா என்ன? இந்தக் கேள்வியே அபத்தமானது!’’

“தனிப்பட்ட நபர்களிடமிருந்து யாரும் சொத்தை விலைக்கு வாங்கிவிட முடியும் என்கிறபோது, அரசுடைமையாக்கிவிடுவதுதான் பாதுகாப்பு என்ற நோக்கம் அ.தி.மு.க-வுக்கு இருக்கலாம்தானே?’’

“அப்படி ஆகிவிடும், இப்படி ஆகிவிடும் என்கிற இது போன்ற கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தால், யாருடைய வீடும் யாருடைய கைகளுக்கும் போய்விடும்தான். வாரிசாக இருக்கும் ஜெ.தீபா, தீபக் யாருக்கு வேண்டுமானாலும் அவர்களது சொத்தை விற்கலாம். சசிகலாவிடம்தான் வீட்டை விற்பார்கள் என்று யார் சொல்ல முடியும்? வருமான வரி கட்டுவது சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் ஜெயலலிதாவின் சொத்துகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி, சசிகலாவால் செயல்பட்டுவிட முடியுமா... சசிகலா என்ன சூப்பர் வுமனா? எனவே, அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா. 100 வருடங்களுக்குப் பிறகு நிலைமை என்னவாகும் என்றெல்லாம் யோசித்து நான் பதில் சொல்ல முடியாது. இப்போதைய நிலை என்னவென்று மட்டுமே பார்த்து நாங்கள் செயல்படுகிறோம். அவ்வளவுதான்!’’