Election bannerElection banner
Published:Updated:

`சசிகலாவுக்கு கார் கொடுத்தவருக்கு சீட்’ - தட்சிணாமூர்த்தி Vs மூர்த்தி... மாதவரம் கள நிலவரம்

மாதவரம் தட்சிணாமூர்த்தி
மாதவரம் தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி, சசிகலாவைச் சந்தித்து மாதவரம் தொகுதி கள நிலவரம் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார். சசிகலாவும் தட்சிணாமூர்த்தி தக்க நேரத்தில் தனக்குச் செய்த உதவிக்கு நன்றிக்கடனாக டி.டி.வி.தினகரனிடம் தட்சிணாமூர்த்தியை வேட்பாளராக முன்னிறுத்த வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தலைமைக்கு எதிராகப் போராடுவதும், மாற்றுக் கட்சிகளுக்குத் தாவுவதும் என நாம் அனைவரும் எதிர்பார்த்த, எதிர்பாராத சம்பவங்கள் அனைத்தும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை திரும்பியபோது, அவரது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாதென்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சசிகலா அந்த நேரத்தில் திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவரின் காரில் ஏறி அதிமுக கொடியுடன் சென்னை வந்தடைந்தார்.

தட்சிணாமூர்த்தியின் காரில் பயணித்த சசிகலா
தட்சிணாமூர்த்தியின் காரில் பயணித்த சசிகலா

சசிகலாவுக்கு கார் கொடுத்த விவகாரம் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்தியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பிறகு அதிமுக-விலிருந்து விலகி அமமுக-வில் இணைந்த தட்சிணாமூர்த்தி டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் இணக்கமாகிப் போனார்.

அதிமுக-வில் இந்தமுறை முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு மாதவரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்த மாதவரம் மூர்த்தி, 2013-ல் ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் சிக்கினார். அதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைச்சர், மாவட்டச் செயலாளர் என மூர்த்தியின் அனைத்துப் பதவிகளையும் பறித்தார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மூர்த்தியை ஒதுக்கி வைத்துவிட்டு மாதவரம் தட்சிணாமூர்த்தியை வேட்பாளராக்கினார்.

மாதவரம் மூர்த்தி
மாதவரம் மூர்த்தி

ஆனால், மாதவரம் மூர்த்தியின் உள்ளடி வேலைகளால் தட்சிணாமூர்த்தி வெற்றிவாய்ப்பை இழந்து திமுக-விடம் தொகுதியைப் பறிகொடுத்தார். தோல்வியைத் தழுவிய போதிலும், மாவட்ட துணைச் செயலாளர் பதவியில் தட்சிணாமூர்த்தி இருந்துவந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கிய மூர்த்தி, தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கினார். அதிலிருந்தே தட்சிணாமூர்த்தி, அவருடைய ஆதரவாளர்களை மாதவரம் மூர்த்தி தொடர்ந்து கட்சி வேலைகளில் புறக்கணித்து வந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர், தொகுதியில் செல்வாக்குமிக்க நபர் எனப் புராணம் பாடி, மூர்த்தியை இந்தமுறை மாதவரம் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறது அதிமுக தலைமை. இந்நிலையில், அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி சசிகலாவைச் சந்தித்து மாதவரம் தொகுதி கள நிலவரம் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார். சசிகலாவும் தட்சிணாமூர்த்தி தக்க நேரத்தில் தனக்குச் செய்த உதவிக்கு நன்றிக்கடனாக டி.டி.வி.தினகரனிடம் மாதவரம் தொகுதியில் தட்சிணாமூர்த்தியை வேட்பாளராக முன்னிறுத்த வலியுறுத்தியிருக்கிறார்.

சசிகலா- தினகரன்
சசிகலா- தினகரன்

அதைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு கார் வழங்கியதால் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட தட்சிணாமூர்த்தியை மாதவரம் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவித்திருக்கிறார் டிடிவி தினகரன். மாதவரம் தொகுதியில் மூர்த்திக்கு எதிராக அமமுக சார்பில் களமிறங்கியிருக்கும் தட்சிணாமூர்த்தி கடந்த தேர்தலில் மாதவரம் மூர்த்தி தனக்குச் செய்த உள்ளடி வேலைகளை, வட்டியும் முதலுமாகத் திருப்பிச் செய்வதற்கு முனைப்பு காட்டிவருகிறாராம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு