Election bannerElection banner
Published:Updated:

கோடிகளில் டீல்... மணல் மாஃபியாவுக்கு சீட்? - காய்நகர்த்தும் தி.மு.க-வின் முக்கியப் பொறுப்பாளர்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வில் மூன்று தொகுதிகளில் தன்னுடைய ஆட்களைp போட்டியிடவைப்பதற்கு, மணல் மாஃபியா பிரமுகர் ஒருவர் கோடியில் டீல் பேசியிருப்பதாகப் பரவும் தகவலால் அறிவாலயம் அலறிக்கிடக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை. அதற்குள்ளாக தி.மு.க விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டு, வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் நடத்திவருகிறது. ஐபேக்கும், மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பங்குக்கு ஆளுக்கொரு வேட்பாளர் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஸ்டாலின் ஒருபக்கம் தனியாக ஆய்வு செய்துவருவதோடு, விருப்ப மனு கொடுத்தவர்களிடமெல்லாம் நேர்காணலை நடத்திவருகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதற்கிடையே, தெற்கு மண்டலத்தை கவனித்துவரும் `முருகப்பெருமானின் ஆயுதம்’ பெயர்கொண்ட தி.மு.க பிரமுகர் ஒருவர், மூன்று தொகுதிகளுக்கு மிகப்பெரிய டீல் ஒன்றைப் பேசியிருக்கிறாராம். இது பற்றி நம்மிடம் பேசிய தி.மு.க.வினர், ``கொரோனா பணிகளில் முக்கியப் பங்குவகித்த அமைச்சரின் சொந்த மாவட்டமான, டெல்டா மாவட்டம் ஒன்றில் `காலா’ பெயர்கொண்ட மணல் மாஃபியா ஒருவர் இருக்கிறார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க. இருபக்கமும் நல்ல தொடர்பை ஏற்படுத்திவைத்திருக்கிறார். சமீபத்தில் அந்த தி.மு.க பிரமுகரை சந்தித்த அந்த மணல் மனிதர், `மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளை என்னிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றில் ஒன்றில் நான் நிற்பேன், அடுத்த இரண்டிலும் நான் சொல்பவர்களை வேட்பாளர்களாக அறிவியுங்கள். கட்சிக்கு 50 சி, இந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து 50 சி, உங்களுக்குத் தனியாக கவனித்துவிடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறாராம். அதோடு அந்த தி.மு.க பிரமுகரின் மகன் தேர்தலில் போட்டியிட்டால், அதற்குத் தனியாக 25 சி தந்துவிடுவதாகவும் உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.

நிழலாக வலம்வரும் எம்.எல்.ஏ காந்தியின் மகன்கள் - கொதிக்கும் ராணிப்பேட்டை தி.மு.க நிர்வாகிகள்!

மொத்தமாக 150 சி வரவு வருவதால் குஷியான அந்த தி.மு.க பிரமுகர், மணல் மனிதரின் டீல் குறித்து தி.மு.க-வின் டெல்டா மாவட்டப் பொறுப்பாளரிடம் பேசியிருக்கிறார். கடுப்பான அந்தப் பொறுப்பாளர், ``மாவட்டத்துக்குள் நடப்பது தெரியாமல் பேசாதீர்கள். அந்தக் குறிப்பிட்ட மூன்று தொகுதிகளும் இந்த முறை கண்டிப்பாக நாம் ஜெயிக்கக்கூடியவை. வேட்பாளரை மாற்றினால் தோற்றுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார். இவர்களின் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, `காலா’ மணல் மனிதர், திடீர் என்ட்ரி கொடுத்தாராம். `எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டுதான், என்னைக் கூப்பிட்டீங்களா?’ என்று டென்ஷனான அந்த மாவட்டப் பொறுப்பாளர் கோபத்துடன் வெளியேறியிருக்கிறார். இப்போது இந்த விவகாரம் தலைமைக்கும் பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. இனிமேல் ஸ்டாலின் கைகளில்தான் எல்லாம்!” என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு