Published:Updated:

சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சருடன் வாக்குவாதம்! - காங்கிரஸ் நிர்வாகியின் பதவி பறிப்பு பின்னணி

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

காங்கிரஸில் புதிதாக ஒருவரை இணைப்பதற்காக அணுகினால், "இந்தத் தொகுதியில் காங்கிரஸில் ஜெயித்து பலமுறை அமைச்சராக இருந்தவரே மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இப்போது எம்.பி-யாக இருப்பவரும் எதுவும் செய்யவில்லை” என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கடந்த 11-ம் தேதி இரவு வெள்ளிகுறிச்சி என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தலைமை வகித்தார்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு என்பவர் எழுந்து நின்று, ``மாவட்டம் முழுவதுமே பெரிதாக காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. கட்சியில் புதிதாகப் பலரையும் இணைப்பதற்காக அணுகும்போது, பல முறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், இப்போது எம்.பி-யாக இருக்கும் கார்த்தி சிதம்பரமும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். குறிப்பாக, மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி அறவே வளரவில்லை, தொண்டர்கள் என்று யாருமே இல்லை.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

பொய்யாகக் கணக்கு காட்டுகிறார்கள். இங்குள்ள பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யுங்கள்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்தநிலையில்தான், ப.சிதம்பரம் பாண்டிவேலுவைப் பார்த்து, `ஒழுங்கீனமாகப் பேசக்வ்கூடாது’ என்றவர் தொடர்ந்து, `மற்றவர்களும் பேச வாய்ப்பளிக்க வேண்டும், நிறுத்துங்கள் ’என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், தொடர்ந்து பாண்டிவேலு பேசியிருக்கிறார்.

`கே.எஸ்.அழகிரி, இரண்டு தேர்தல்களைப் பார்த்துவிட்டார், எனவே..!' - என்ன சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்?

இதனால் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த ப.சிதம்பரம், ``நீங்கள் போய் மேடையில் அமருங்கள். நான் உங்கள் நாற்காலியில் அமர்ந்துகொள்கிறேன்" என்று பாண்டிவேலுவைப் பார்த்துக் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே கோபமாக பாண்டிவேலு அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டார். இந்தநிலையில், தற்போது பாண்டிவேலு வகித்துவந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

``கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் தங்களுக்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்தபோது பேசினீர்கள். தொடர்ந்து பலர் பேச முற்படும்போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும் நடந்துகொண்டீர்கள். அப்போது நிதியமைச்சர் அவர்கள் ஒழுங்கீனமாகப் பேசக் கூடாது என்று அறிவுறுத்தியும், நீங்கள் அதையும் மீறித் தொடர்ந்து பேசி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டீர்கள். மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் சொல்லியும் கேட்காமல் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொண்டீர்கள். மானாமதுரை தொகுதியிலுள்ள வட்டார, நகர நிர்வாகிகள் தங்களின் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதனடிப்படையில் செப்டம்பர் 13-ம் தேதி முதல் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறீர்கள்.

பாண்டிவேலு
பாண்டிவேலு

மேலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறீர்கள். இது சம்பந்தமான விளக்கத்தை 10 நாள்களுக்குள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள்" என்று தெரிவித்து, சிவகங்கை மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, பாண்டிவேலுவுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இதனால், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பரபரத்துக் கிடக்கிறது.

இது பற்றி பதவி பறிக்கப்பட்ட பாண்டிவேலுவிடம் பேசினோம். ``கடந்த 20 வருஷமா கட்சிக்காக உழைச்சுக்கிட்டு இருக்கேன். மாவட்ட செயற்குழு உறுப்பினராக என்னை நியமிச்சாங்க. மானாமதுரையில கிழக்கு, மேற்கு வட்டாரம், நகரம்னு நிர்வாகிகள் போட்டுருக்காங்க. மொத்தம் 39 ஊராட்சி இருக்கு. ஒரு ஊராட்சிக்கு 25 பேர் வரையிலும் உறுப்பினர்கள் சேர்க்கணும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்க கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் போடணும், அது போடலை. கிராமத்துக்கு ஒன்றிரண்டு பேர்தான் உண்மையான உறுப்பினர்களாக இருக்காங்க. அவங்களாகப் பெயர் எழுதிக்கிட்டு கணக்கு காட்டுறாங்க. மானாமதுரையில சுத்தமா கட்சி வளரவே இல்லை. அதனாலதான் பழைய நிர்வாகிகளை நீக்கிட்டு, புதிய நிர்வாகிகளை சேர்க்கணும்னு பேசினேன். அதோட, காங்கிரஸ் கட்சியில புதிதாக ஒருவரை இணைப்பதற்காக அணுகினால், `இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் ஜெயித்து பலமுறை அமைச்சராக இருந்தவரே வேலைவாய்ப்பு தொடங்கி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இப்போது காங்கிரஸ் கட்சியில் ஜெயிச்சு எம்.பி-யாக இருப்பவரும் எதுவும் செய்யவில்லை. அப்படியிருக்க காங்கிரஸ் சேர்ந்து என்ன பண்ணுறது’ என்கின்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில்...
ஆலோசனைக் கூட்டத்தில்...

எனவே, மாவட்டத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன். அதோட கீழ்மட்டத்தில் நடக்கும் விஷயங்கள் இவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் அனைத்தையும் உடைத்துப் பேசினேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக என்னைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இது பற்றி விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அதை நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இதற்கிடையே டெல்லியிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. விரைவில் டெல்லி செல்லவிருக்கிறேன்" என்றார்.

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``கட்சியின் கட்டுப்பாடு, கோட்பாடுகளை மீறி நடந்துகொண்டதால்தான் பாண்டிவேலு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு தலைமைதான் முடிவு செய்யும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு