Published:Updated:

குறையும் மாவட்டங்கள்... நீக்கப்படும் மா.செ-க்கள்?! - திமுக உட்கட்சித் தேர்தல் திகுதிகு

தி.மு.க-அண்ணா அறிவாலயம்

திமுக-வில் ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.

குறையும் மாவட்டங்கள்... நீக்கப்படும் மா.செ-க்கள்?! - திமுக உட்கட்சித் தேர்தல் திகுதிகு

திமுக-வில் ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.

Published:Updated:
தி.மு.க-அண்ணா அறிவாலயம்

தமிழ்நாட்டை ஆளும் கட்சியான தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் நடந்துவருகிறது. ஜூன் 9-ம் தேதியுடன் ஒன்றியச் செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. அதில், பல மாவட்டங்களிலும் பிரச்னைகளுக்குப் பஞ்சமில்லாமல்தான் தேர்தல் நடந்திருக்கிறது என்கிறார்கள்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அது குறித்து அறிவாலய முக்கியப் புள்ளி ஒருவரிடம் பேசினோம். ``வருவாய் மாவட்டங்களின்படி 38 மாவட்டங்களும், கட்சி அமைப்புரீதியில் 77 மாவட்டங்களும் தி.மு.க-வில் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணியில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் தி.மு.க-வில் சேர்ந்த அருள் நம்பிக்கு ஒன்றியச் செயலாளர் பதவி கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்த தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியன், ’பத்து வருடங்களாக உறுப்பினர் கார்டு வைத்திருப்பவருக்குத்தான் சீட்’ என்று கூறி தனக்குவேண்டிய ஒருவருக்கு ஒன்றியப் பதவியைக் கொடுத்தார் என்று புகார் கிளம்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்களான பொன்.முத்துராமலிங்கம், அமைச்சர் பி.மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தங்களுக்குத் தோதானவர்களை ஒன்றியச் செயலாளர்களாக நியமிக்க, இருக்கும் ஒன்றியத்தையே பிரித்திருக்கிறார்களாம்.

திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் பிரகாஷ் என்பவர், மா.செ பூண்டி கலைவாணன் ஆதரவில் மீண்டும் பதவியைப் பிடிக்க முயல, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் ஆதரவில், தி.மு.க ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத் என்பவர் அவரை எதிர்த்து போட்டியிட்டிருக்கிறார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

விழுப்புரம் மாவட்ட ஒன்றியங்கள் ஏற்கெனவே இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாகப் பிரித்துள்ளனர். அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், மா.செ புகழேந்தி, எம்.எல்.ஏ லட்சுமணன் என நான்கு முனைப்போட்டி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தரணிவேந்தன் ஒன்றியச் செயலாளர்களை மாற்ற நினைக்க, அமைச்சர் எ.வ.வேலு, ‘இருப்பவர்கள் தொடரட்டும், புகார் வந்தால் மாற்றிவிடலாம்’ என்று உத்தரவுபோட்டுவிட்டதால் இருந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோல், தூத்துக்குடி, கரூர், நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பிரச்னைக்குப் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது ஒன்றியச் செயலாளர் தேர்தல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த கட்டமாக, மாவட்டச் செயலாளர் தேர்தல் நடக்கவிருக்கிறது. கட்சியில் மொத்தமுள்ள 77 மாவட்டங்களில், 44 மாவட்டங்களில் பொறுப்பாளர்களும், 33 மாவட்டங்களில் செயலாளர்களும் உள்ளனர். அதாவது, முன்பு கட்சிரீதியாக 52 மாவட்டங்கள்தான் தி.மு.க-வில் இருந்தன. அவற்றை அதிகப்படுத்தியபோது, பிரிக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களைப் பொறுப்பாளர்கள் என்றே தலைமை நியமித்தது. ஏனெனில், கட்சி விதிப்படி தேர்தல் மூலமே மாவட்டக் கழகச் செயலாளர்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தற்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் தேர்வுசெய்யப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள்தான் மாவட்டச் செயலாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால், வழக்கம்போல தேர்தல் வரை செல்லாமல், பேச்சுவார்த்தை மூலமே முடிந்துவிடும் என்கிறார்கள். அப்படி முடிந்த பின்னர்தான் பொறுப்பாளர்கள் எல்லோரும் மாவட்டச் செயலாளர்களாக அழைக்கப்படுவார்கள்.

இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. முதலில் 77 மாவட்டங்களை மீண்டும் பழையபடி குறைக்கப்போவதாக தகவல் கசிந்தது. அதன் பின்னர், அந்த முடிவு கைவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதோடு, ஒரு மாவட்டச் செயலாளருக்கு தலா 3 தொகுதிகள் வீதம் பிரிக்கப்படவிருப்பதாகவும் கூறப்பட்டது. இறுதியாக, முன்பிருந்த நிலைக்கு, அதாவது 77 மாவட்டங்களை 55 மாவட்டங்களாகக் குறைக்கும் முடிவு இறுதி செய்யப்பட்டிருக்கிறதாம்.

விழுப்புரம் மத்தி, தஞ்சை வடக்கு, சேலம் கிழக்கு ஆகியவை நீக்கபடலாம் என்கிறார்கள். கோவையிலுள்ள ஐந்து மாவட்டங்கள், மூன்றாகச் சுருக்கப்படவிருப்பதாகவும் தகவல். இவ்வாறு, 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நீக்கப்படவுள்ளன. இதுபோக, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, சேலம், விழுப்புரம், தஞ்சை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், தென்காசி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என 15-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களும் பொறுப்புகளிலிருந்து தூக்கப்படவிருக்கின்றனர். அவர்களுக்கு பதில் புதியவர்கள் பொறுப்புக்கு வரவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மா.சுப்பிரமணியன், சேகர் பாபு
மா.சுப்பிரமணியன், சேகர் பாபு

சென்னையைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் தா.மோ.அன்பரசனிடம் தலா ஆறு தொகுதிகளும், மா.சு-விடம் ஐந்து தொகுதிகளும் உள்ளன. இவர்கள் மூவருமே ஒருவரை ஒருவர் கைகாட்டிக்கொண்டு, மாவட்டங்களைப் பிரிப்பதற்குச் சம்மதிக்க மறுக்கிறார்கள். இதேபோல மற்ற மாவட்ட அமைச்சர்கள் சிலரும், தலைமை சொல்லியும் மா.செ பொறுப்பை விட்டுத்தர மறுத்துவருகிறார்களாம். இதனால்தான், மாவட்டச் செயலாளர், பொறுப்பாளர் தேர்தல் இத்தனை காலம் தள்ளிப்போய்க்கொண்டே செல்கிறது” என்பதோடு முடித்துக்கொண்டார் அந்த அறிவாலயப் புள்ளி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism