Published:Updated:

`ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் யார்?!' - சசிகலா விளக்கத்தால் கொந்தளித்த ஜெ.தீபா

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்டவை தனக்கே சொந்தம் என சசிகலா விளக்கமளித்துள்ளார்.

சசிகலா Vs தீபா
சசிகலா Vs தீபா

``என் அத்தையின் சாவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகத் தகவல் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவரது சொத்துகள் எப்படி சசிகலாவுக்குச் சொந்தமாகும். பங்குதாரரின் ஒப்பந்தத்தைக் கேட்டு சசிகலாவின் மீது வழக்கு தொடர இருக்கிறேன்" என அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஜெ.தீபா.

சசிகலா
சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டவர், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலையாகிவிடுவார் என்று அவரின் உறவினர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ரூ.1,900 கோடி மதிப்பில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாகத் தகவல் வெளியானது. அப்படி வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகளுக்கு முறையான பெயர் மாற்றம் செய்யப்படாமல் பணம் மட்டுமே கைமாறியிருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்டவை தனக்கே சொந்தம் என சசிகலா விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ்
ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ்

அதற்கு ஜெ.தீபா, பங்குதாரர் ஒப்பந்தம் ஆவணங்களைக் கேட்டு வழக்கு தொடர உள்ளதாக அறிக்கை வெளியிட்டு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இத்தனை வருடங்களாக இல்லாமல் சசிகலாவின் சொத்து விவகாரம் அடிபட என்ன காரணம்... இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் ஜெயலலிதாவின் வேதா இல்லம், சசிகலா நிர்வாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்களை ஆய்வு செய்த வருமானவரித் துறையினர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.1,900 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இதற்குக் கடந்த 11ம் தேதி சசிகலாவின் ஆடிட்டர் விளக்கக் கடிதம் ஒன்றை வருமான வரித்துறைக்கு அனுப்பியுள்ளார்.

தீபா
தீபா

இதில் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு நிறுவனங்கள் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் தனக்கே சொந்தம் என்றும் அந்த நிறுவனங்கள் வர்த்தகங்கள் மற்றும் இதர வகைகளிலிருந்து வருமானம் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சசிகலாவின் இந்த விளக்கக் கடிதம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், ஜெயலலிதாவின் வாரிசாகத் தன்னைக் குறிப்பிட்டு சொத்துகளுக்கு உரிமை கோரி வரும் ஜெ. தீபா சொத்து தொடர்பான சசிகலாவின் விவரங்கள் குறித்துக் கூறுகையில், 'சசிகலா விளக்கம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தைக் கட்டாயம் நாடுவோம். ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் வெளியாகி இருப்பதால் பங்குதாரர் தொடர்பான ஆவணங்களைக் கேட்டு நீதிமன்றத்தில் சசிகலா சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாகப் பங்குதாரர் ஒப்பந்தங்களைக் காட்ட வேண்டும்.

தீபா
தீபா

ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்ற அடிப்படையில் ஏற்கெனவே இரண்டு வழக்குகளைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்குகளின் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

எந்தெந்த நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார், அவற்றின் விவரம் என்ன.. சொத்தின் மதிப்பு என்ன என்பது குறித்து உயர் நீதிமன்றத்தை நாட இருக்கிறார் ஜெ.தீபா. இதைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவும் சசிகலா தரப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.