Published:Updated:

ஜெயலலிதா லெஜென்ட்; படம் எடுக்கும் முன் எங்களிடம் கேட்க வேண்டாமா?'- கொதிக்கும் தீபா உறவுகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சாதாரண மனிதர் அல்ல. சினிமா மற்றும் அரசியலில் கோலோச்சியவர். இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், அவர்கள் எந்த நோக்கத்திற்காக எடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

தலைவி
தலைவி

``ஜெயலலிதாவைப் பற்றி படம் எடுக்க நினைப்பது தவறில்லை. எங்களிடம் கேட்காமல், எந்த நோக்கத்திற்காகப் படம் எடுக்கிறார்கள் என்று உறவினர்களிடம் சொல்லாமல் படம் எடுத்தால் எப்படி?'' என்று ஆதங்கப்படுகிறார்கள் தீபா தரப்பினர்.

தீபா
தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பின்பு, தி.நகரில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியைக் கட்சி அலுவலகமாக மாற்றினார். இந்நிலையில், அரசியலை விட்டு விலகுவதாக தீபா திடீரென அறிவித்ததோடு, அரசியலில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்துவருகிறார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் படத்துக்குத் தடை விதிப்பது தொடர்பாக வழக்கு தொடர ஜெ.தீபாவுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் தமிழிலும், 'ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிவருகிறார். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதேபோல், கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதளத் தொடராகத் தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாகவும் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

தலைவி
தலைவி

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் 'தலைவி' படத்தையும், இணையதளத் தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்துப் படங்கள் எடுக்கத் தடை விதிக்க உரிமையியல் வழக்குத் தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதுகுறித்து தீபாவிடம் பேசினோம். "இதுகுறித்து பல பத்திரிகையாளர்கள் பேசுகிறார்கள். அவர்களிடம் பேச மறுத்துவிட்டேன். உங்களிடம் பேசினால் தவறாகிவிடும்" என்று முடித்துக்கொண்டார்.

ஜெயலலிதா சமாதியில் தீபா! தலைவணங்கி மரியாதை
ஜெயலலிதா சமாதியில் தீபா! தலைவணங்கி மரியாதை

அடுத்ததாக அவரது உறவினரிடம் பேசினோம். " ஒரு லெஜென்ட்டைப் பற்றி படம் எடுக்கும்போது, அவர்களது குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டாமா? ஏதோ ஒரு விஷயத்தை தவறாக எடுத்துவிட்டால், அடுத்த தலைமுறையினருக்கு அது உண்மை என்றாகிவிடாதா... எங்களுக்கே தெரியாமல் படக் குழுவினர் படத்தை எடுக்கத் தொடங்கியுள்ளதோடு, திடுதிப்பென பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாகப் படக்குழுவினரைச் சந்திக்க பலமுறை முயன்றோம். அவர்கள் எங்களுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்கள். இந்த ஆதங்கத்தில்தான் வழக்குத் தொடுத்தோம். இதில் எந்தத் தவறுமில்லையே" என்றார்.