Election bannerElection banner
Published:Updated:

`பூத் கமிட்டிகள் என்னாச்சு...’ - எல்.முருகன் மீது அதிருப்தியில் டெல்லி?

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது பா.ஜ.க டெல்லி மேலிடம் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் பா.ஜ.க., 20 சட்டமன்றத் தொகுதிகளிலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது. பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரான எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் களம்கண்டிருக்கிறார். இந்தநிலையில், டெல்லி எதிர்பார்த்த வியூகத்தை எல்.முருகன் வகுக்கவில்லை என்று புகார்கள் எழுவதால் கமலாலயத்தில் குழப்ப ரேகைகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.

எல்.முருகன்
எல்.முருகன்

இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகிகள் சிலர், ``தேர்தலையொட்டி பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்குமாறு டெல்லி மேலிடம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தளி, மதுரை வடக்கு, திருவையாறு, உதகமண்டலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் தேவையான அளவுக்கு பூத் கமிட்டிகளை அமைக்கவில்லை. பல தொகுதிகளில் பூத் கமிட்டிக்குத் தேவையான ஆட்களை கர்நாடகாவிலிருந்து அழைத்து வந்து பணியாற்றவைத்துள்ளனர். ஊட்டியில் கர்நாடகா பா.ஜ.க பிரமுகர்கள் செய்த சில தவறுகளால், அங்குள்ள பா.ஜ.க பிரமுகர்கள் இருவருக்குச் சிக்கல் ஏற்பட்டு போலீஸ் விவகாரமானதுதான் மிச்சம்.

"பா.ஜ.க இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை!"- எல்.முருகன்... மக்கள் கருத்து? #VikatanPollResults

இதுபோக, தேர்தல் சீட்டுகளை ஒதுக்குவதிலும் எல்.முருகன் சில குழப்படிகளைச் செய்துவிட்டதாகத் தலைமைக் கருதுகிறது. `பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ள தணிகைவேலுக்கு திருவண்ணாமலை தொகுதி எப்படி ஒதுக்கப்பட்டது?’ என்று டெல்லி கடுமை காட்டியிருக்கிறது. பூத் கமிட்டிகள் அமைக்கப்படாதது அமித் ஷா வரை ரிப்போர்ட் ஆகியிருக்கிறது. தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு எல்.முருகன் கட்சிரீதியாக ஓரங்கட்டப்படலாம் அல்லது அவரின் தலைவர் பதவிக்கு ஆபத்துக்கூட வரலாம்” என்றனர்.

அமித் ஷா
அமித் ஷா

எல்.முருகன் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர். ``தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத சில பா.ஜ.க நிர்வாகிகள் பரப்பும் வதந்திதான் இது. டெல்லி பா.ஜ.க தலைமை எல்.முருகன் மீது நம்பிக்கையுடன்தான் இருக்கிறது. அதனால்தான், திருப்பதி இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்காகப் பணியாற்றுமாறு முருகனை ஆந்திராவுக்கு அனுப்பியிருக்கிறது” என்றனர்.

எல்.முருகன் மீது நடவடிக்கை பாயுமா அல்லது பூமழை தூவுமா என்பது மே 2-ம் தேதி ரிசல்ட்டில் தெரிந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு