Published:Updated:

`ஹெச்.ராஜா வேண்டாம்… அதிரடித்த பி.ஜே.பி தலைமை? - கிடுகிடுக்கும் பி.ஜே.பி தலைவர் ரேஸ்

ந.பொன்குமரகுருபரன்

தமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

H Raja
H Raja

தமிழக பி.ஜே.பி-யின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், சமீபத்தில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அமரப்போகும் அடுத்த பி.ஜே.பி தலைவர் யார்? என்கிற ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழிசை
தமிழிசை

பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவில் தொடங்கி, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்பிரமணிய பிரசாத் வரை தினமும் ஒருவரின் பெயர், தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. உண்மையில், மாநிலத் தலைவரை நியமிக்கும் பணியை இன்னும் டெல்லி மேலிடம் தொடங்கவே இல்லையாம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி முக்கிய நிர்வாகி ஒருவர்,``ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சந்திரயான் ரோவர் பூமியில் கால்பதிப்பதைக் காண, நாளை அதிகாலை பெங்களூரு வருகிறார். பின்கழுத்தில் அறுவைசிகிச்சை செய்திருப்பதால், பி.ஜே.பி தலைவர் அமித் ஷா ஓய்வில் இருக்கிறார். இருவருமே, தமிழக பி.ஜே.பி தலைவர் பதவிக்குத் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வேலையைத் தொடங்கவில்லை.

ஜெ.பி.நட்டா, நரேந்திர மோடி, அமித்ஷா
ஜெ.பி.நட்டா, நரேந்திர மோடி, அமித்ஷா
'ஹெச்.ராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு நெகட்டிவ் இமேஜ் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையை தினமும் எதிர்கொள்ள நேரிடும்' என தேசிய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
.

மாநிலத் தலைவர் பதவிக்கு, 5 முதல் 7 பேரின் பெயர் கொண்ட பட்டியலை பி.ஜே.பி தேசிய நிர்வாகிகளும் மேற்பார்வையாளர்களும் தயார்செய்வார்கள். இப்பட்டியலில் உள்ளவர்களின் பின்புலம், மத்திய உளவுத்துறை மூலமாக `செக்’ செய்யப்பட்ட பின்னர், பெயர் பட்டியல் பி.ஜே.பி நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்படும். பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மாநிலத் தலைவராக இக்குழு அறிவிக்கும். இதுதான் நடைமுறை என்றாலும், ஏற்கெனவே அமித் ஷாவும் மோடியும் தேர்ந்தெடுத்த ஒருவர்தான் தலைவராகப் பதவி பெறுவார்.

தலைவர் பதவிக்கான ரேஸில், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கிருஷ்ணகிரி நரசிம்மன், வானதி சீனிவாசன், கோவை முருகானந்தம், திருத்தணி ரவிராஜ், ராமநாதபுரம் குப்புராமு உள்ளிட்டோர் உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள லாபி மூலமாக பி.ஜே.பி தலைமையை நெருங்குகிறார்கள். இதில், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் இருவருக்கும் மாநிலத் தலைவர் பதவியளிக்க டெல்லி மேலிடம் யோசிக்கிறது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

'ஹெச்.ராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு நெகட்டிவ் இமேஜ் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையைத் தினமும் எதிர்கொள்ள நேரிடும்' என தேசிய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள். வானதி சீனிவாசன் மீது அடுக்கடுக்கான புகார்களை தமிழக நிர்வாகிகள் டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். இதைத் தகர்த்தெறிவது அவருக்கு சவாலான காரியம்தான். இன்னும் பெயர்ப்பட்டியலே தயாராகவில்லை என்பதால், மாநிலத் தலைவரை நியமிக்க நீண்ட நாள்கள் ஆகலாம்” என்றனர்.

ஹெச்.ராஜா தரப்பில் பேசியவர்கள், ``தான் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக ஹெச்.ராஜா எங்குமே குறிப்பிடவில்லை. இந்நிலையில், அவருக்கு டெல்லி மேலிடம் பதவியளிக்க மறுத்துவிட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறு. அவர் ஏற்கெனவே தேசியச் செயலாளராகத்தான் செயல்படுகிறார். மாநிலம் முழுவதும் கட்சியைக் கட்டமைக்கும் பணியை அமித் ஷாவின் வழிகாட்டுதலில் செய்துவருகிறார். கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பார்” என்றனர்.

 வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் தரப்பு கூறுகையில், ``என்ன புகாரளித்தாலும், அதில் உண்மைத் தன்மை இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும். வானதி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் வயிற்றெரிச்சலில் வந்தவை. பி.ஜே.பி மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு அவர் நடப்பார்” என்றது.

சமீப நாள்களாக, டெல்லிக்குச் செல்லும் விமானங்களில் தமிழக பி.ஜே.பி தலைவர்களை அதிகம் காண முடிகிறது. விடுகதைக்கு விடையளிக்கவேண்டிய பி.ஜே.பி மேலிடம், மௌனம் காக்கிறது.