Published:Updated:

அமித் ஷாவுடன் சந்திப்பு.. தேசத் துரோக வழக்கு அனுமதி... அரவிந்த் கெஜ்ரிவாலின் மனமாற்றம் ஏன்?

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஜே.என்.யூ தேசத் துரோக வழக்கை மேற்கொண்டு தொடர கெஜ்ரிவால் அரசு தற்போது அனுமதியளித்துள்ளது.

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா 2016 ஜனவரியில் தற்கொலை செய்துகொண்டார். சாதிய ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதே அவருடைய தற்கொலைக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கடுமையான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. அதே சமயத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) அரங்கேறிய ஒரு சம்பவம் தலைப்புச் செய்தியாக்கப்பட்டது.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

ஜே.என்.யூ மாணவர்கள் அப்சல் குருவுக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்தியதாகவும் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும் கூறி அப்போதைய ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட மூவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரோகித் வெமுலாவின் மரணத்திலிருந்து திசைதிருப்ப ஜே.என்.யூ விவகாரம் பெரிதாக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டும் ஒருபுறம் உள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கன்னையா குமார், உமர் காலித் அனிர்பன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A-வின் (தேசத் துரோகம்) கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சட்டவிதிகளின்படி தேசத்துரோக பிரிவின் கீழ் ஒருவரை விசாரிக்க வேண்டுமென்றால் அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் வேண்டும்.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

ஜே.என்.யூ வழக்கை மேற்கொண்டு தொடர டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை ஒரு குற்றச்சாட்டாகவே பா.ஜ.க முன்வைத்தது. தேசத் துரோகிகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி உள்ளது எனத் தேர்தல் பிரசாரங்களின்போது குற்றம்சாட்டியது. இந்த நிலையில் பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது ஆம் ஆத்மி.

ஆனால் சி.ஏ.ஏ போன்ற முக்கிய பிரச்னைகளில் எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்காமல் கெஜ்ரிவால் மிதவாத இந்துத்துவப் போக்கை கடைப்பிடித்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகும்கூட டெல்லியில் நடைபெற்று வருகிற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டக் களத்துக்குச் செல்வதை ஆம் ஆத்மி கட்சியினர் தவிர்த்தே வந்தனர். சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர் பற்றியும் ஆம் ஆத்மி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். டெல்லியின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அதன் பின்னர் பேட்டிகளில் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது டெல்லி அரசு ஜே.என்.யூ தேசத் துரோக வழக்கில் விசாரணையைத் தொடர அனுமதியளித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது திடீரென கெஜ்ரிவால் அரசு அனுமதி வழங்கியுள்ளது பலராலும் கண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு அனுமதி வழங்கியதற்கு பா.ஜ.க நன்றி தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் - அமித் ஷா
அரவிந்த் கெஜ்ரிவால் - அமித் ஷா

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``தேசத் துரோக பிரிவைப் பற்றிய டெல்லி அரசின் புரிதல் மத்திய அரசின் புரிதலைவிடவும் குறுகியதாக உள்ளது. கன்னையா குமார் உள்ளிட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கைத் தொடர அனுமதி வழங்கியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றுள்ளார்.

இதுபற்றி உமர் காலித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``டெல்லி அரசு அனுமதியளித்துள்ளது எங்களுக்கு எந்த அதிர்ச்சியயையும் அளிக்கவில்லை. நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்களும் கேட்கிறோம். வழக்கு விசாரணை எங்கள் மீது சுமத்தப்பட்ட போலியான குற்றச்சாட்டுகளை முடிவுக்குக் கொண்டு வரும். நீண்ட காலம் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமந்துகொண்டு இருந்துவிட்டோம். அரசின் போலி பிரசாரத்தை தோலுரிக்க இது எங்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும்” என்றுள்ளார்.

உமர் காலித் - கன்னையா குமார் - அனிர்பன்
உமர் காலித் - கன்னையா குமார் - அனிர்பன்

ஆம் ஆத்மி கட்சி முன்னர் இந்த வழக்கைத் தொடர அனுமதி வழங்க மறுத்ததோடு பல நேரங்களில் கன்னையா குமாரை ஆதரித்தும் பேசியுள்ளது.

கன்னையா குமாருக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னர் பதிவிட்டிருந்த ட்வீட்களைப் பகிர்ந்தும் கெஜ்ரிவால் அரசின் நடவடிக்கைகளைப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

வெறும் கோஷங்கள் எழுப்புவது தேசத் துரோகப் பிரிவின் கீழ் வராது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இன்று தேசத்துரோகப் பிரிவுகள் மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசத் துரோகப் பிரிவை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்கிற குரலும் ஒருபுறம் இருந்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு