அலசல்
சமூகம்
Published:Updated:

டெல்டா ரௌடிகள் கைது... களையெடுக்கவா... கட்சிப் பணத்தை மீட்கவா?

துரைக்கண்ணு - அய்யப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
துரைக்கண்ணு - அய்யப்பன்

எளிமையானவர் எனப் பெயரெடுத்திருந்த துரைக்கண்ணு, வேளாண்மைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ரொம்பவே மாறிப்போயிருந்தார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்துக்குப் பிறகு, டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரம் பரபரத்துக்கிடக்கிறது. ‘மறைந்த துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க மேலிடம் கொடுத்த பணத்தை அவரின் பினாமிகளாக இருந்த ரௌடிகள் சுருட்டிவிட்டதால், அவர்களைக் கைதுசெய்து பணத்தை மீட்கும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியிருக்கிறது’ என்று சூடாகப் பேசப்பட்டுவருகிறது.

டெல்டா மாவட்டங்களில் ரௌடிகளான மணல்மேடு சங்கர், முட்டை ரவி உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிறகு, ரௌடிகளின் கொட்டம் அடங்கிக்கிடந்தது. ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் அரசியல்வாதிகளின் அரவணைப்பு ரௌடிகளுக்குக் கிடைத்ததும், டெல்டா மாவட்டங்கள் மறுபடியும் ரௌடிகளின் ஆதிக்கத்துக்குள் சென்றன. அரசியலைக் கேடயமாகப் பயன்படுத்திய ரௌடிகள், சட்டவிரோதச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபட்டார்கள்.

மத்திய மண்டல ஐ.ஜி-யாக ஜெயராம் பொறுப்பேற்றதும் ரௌடிகளை ஒடுக்கத் தீவிரம் காட்டினார். ஆனால், அரசியல் கட்சிகள் குறுக்கே நின்றதால் அவரால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. இப்போது மேலிடத்திலிருந்து கிடைத்திருக்கும் கிரீன் சிக்னல் காரணமாக, ரௌடிகள்மீது நடவடிக்கை பாயத் தொடங்கியிருக்கிறது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் கரைவேட்டிகள்.

ஜெயராம்
ஜெயராம்

தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு சில அரசியல்வாதிகள் நம்மிடம் பேசினார்கள். ‘‘எளிமையானவர் எனப் பெயரெடுத்திருந்த துரைக்கண்ணு, வேளாண்மைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ரொம்பவே மாறிப்போயிருந்தார். துரைக்கண்ணுவின் மகன் அய்யப்பன் துறைரீதியான விஷயங்களில் தலையிட்டு கமிஷன் வாங்கியதாகப் புகார் எழுந்தது.

கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ரௌடி ‘பெரியவன்’ முருகன், அ.ம.மு.க-வின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் சுரேஷ்குமார், பா.ம.க-வின் கும்பகோணம் நகர முன்னாள் செயலாளர் பாலகுரு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா செல்வம், முருகனின் சகோதரி மகன் அய்யர் என்கிற சக்திவேல் எனச் சிலர் துரைக்கண்ணுவின் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தார்கள். கோடிகளில் பணம் புரளத் தொடங்கியதால், கும்பகோணத்தில் பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கிக்குவிக்க ரௌடி ‘பெரியவன்’ முருகன் உள்ளிட்ட பலரையும் பயன்படுத்தினார். துரைக்கண்ணுவின் சொத்து மதிப்பு 4,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். தவிர, வரும் தேர்தலுக்காகச் செலவு செய்ய, கட்சி மேலிடத்திலிருந்து பெருந்தொகை வந்திருக்கிறது. துரைக்கண்ணு மருத்துவமனையில் இருந்தபோதே அது பற்றிக் கேட்டதற்கு, எதுவும் தெரியாது என்று அய்யப்பன் கைவிரித்துவிட்டாராம்.

துரைக்கண்ணு - அய்யப்பன்
துரைக்கண்ணு - அய்யப்பன்

துரைக்கண்ணு மறைந்ததும், சொத்து விவகாரம் தொடர்பாக மகன் அய்யப்பனுக்கும் மருமகன் கனகதாரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. தவிர, அமைச்சரின் பினாமியாக இருந்த ‘பெரியவன்’ முருகன், தமிழகத்தின் மூன்றாவது பெரிய மார்க்கெட்டான தாராபுரம் காய்கறி மார்க்கெட்டை மூன்றரைக் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார். இந்த நிலையில், கட்சிச் செலவுக்காக துரைக்கண்ணுவிடம் கொடுத்த பணத்துக்கு இதுவரை எந்த பதிலும் இல்லாததால், அவரின் பினாமிகளைக் கைதுசெய்து விசாரிக்க மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. அதையே சாக்காகவைத்து, அனைத்து ரௌடிகளையும் கைதுசெய்து மறுபடியும் ரௌடிகள் இல்லாத பகுதியாக டெல்டாவை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் போலீஸார்.

டெல்டா ரௌடிகள் கைது... களையெடுக்கவா... கட்சிப் பணத்தை மீட்கவா?

‘பெரியவன்’ முருகன், சுரேஷ்குமார், பாலகுரு, வேதா செல்வம், அய்யர் என்கிற சக்திவேல் ஆகிய ஐந்து பேரும் நவம்பர் 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்கள். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, பினாமி சொத்துகள் குறித்த விசாரணை நடந்திருக்கிறதாம். அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கவும் வேலை நடப்பதால், டெல்டா ரௌடிகள் கிலியில் இருக்கிறார்கள்’’ என்றார்கள்.

நேர்மையான சில காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம்... ‘‘டெல்டா மாவட்டங்களில் ரௌடிகள் தலைதூக்கியதால் கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து அதிகமாகிவிட்டது. யார் பெரியவன் என்கிற போட்டியில் சாதிரீதியாகவும் அடிக்கடி மோதல் நடந்தது. பழிக்குப் பழி கொலைகள், நில அபகரிப்பு, மணல் திருட்டுச் சம்பவங்களும் அதிகமாகின. இதையெல்லாம் ஒடுக்க, தஞ்சை மாவட்டத்தில் 80 ரௌடிகள் உட்பட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட 400 பேரை கடந்த ஜூலை மாதத்தில் கைதுசெய்தோம். ரௌடிகளை விடுவிக்கச் சொல்லி அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களிடமிருந்து அழுத்தம் வந்ததால், எங்களால் வேலை செய்ய முடியவில்லை. இப்போது மேலிடமே கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால், மறுபடியும் ரௌடிகளைக் குறிவைத்திருக்கிறோம்’’ என்றார்கள்.

பாலகுரு, முருகன், சுரேஷ்குமார், வேதா செல்வம், சக்திவேல்
பாலகுரு, முருகன், சுரேஷ்குமார், வேதா செல்வம், சக்திவேல்

துரைக்கண்ணுவின் மகன் அய்யப்பனிடம் பேசினோம். ‘‘கைது செய்யப்பட்டவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ரௌடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ளும் அவசியம் எங்களுக்கு இல்லை. எங்கப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் செலவுகளுக்காகக் கட்சித் தலைமை பணம் கொடுத்ததாகவும், எங்கள் சொத்து மதிப்பு பற்றியும் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. அவையனைத்தும் பொய். என்னையும், என் குடும்பத்தையும் பற்றி முதல்வருக்கு நன்றாகத் தெரியும்’’ என்று படபடத்தார்.

மத்திய மண்டல ஐ.ஜி-யான ஜெயராமிடம் பேசியபோது, ‘‘பினாமி சொத்துகள் தொடர்பாக ரௌடிகளைக் கைதுசெய்கிறோம் என்பது தவறானது. 1998-லிருந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த ‘பெரியவன்’ முருகன் மீது மட்டும் 30 வழக்குகள் இருக்கின்றன. ‘பெரியவன்’ முருகன் மற்றும் கூட்டாளிகளைக் கைதுசெய்திருக்கிறோம். யார் தவறு செய்தாலும் அவர்களைக் கைதுசெய்வோம்’’ என்றார்.

`டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் இத்தகைய ரௌடி ஒழிப்பு நடவடிக்கைகள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இல்லாதது ஏன்?’ என்ற கேள்வி எழுகிறது. அரசியல் லாபத்துக்காகவோ அரசியல் கட்சி இழந்த பணத்தை மீட்கவோ மேற்கொள்ளப்படும் இத்தகைய துரித நடவடிக்கையை, அப்பாவி மக்களைப் பாதுகாக்கவும் காவல்துறை மேற்கொள்ளுமா?