Published:Updated:

`டயட் கன்ட்ரோல், அசைவத்துக்கு குட்பை..!' - மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு என்ன செய்கிறார் ஓ.பி.எஸ்?

டயட் கன்ட்ரோல் பண்ணுவதில் அக்கறையாக இருப்பார். தேவையில்லாத உணவுகளைச் சாப்பிடக் கூடாது என அனைவரிடம் கூறுவார். குண்டாக ஒருவர் அவர் முன் தோன்றினால், உடம்பைக் குறைக்க வேண்டும் என கண்டிப்போடு சொல்வார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பரிசோதனைகள் முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினார். முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

`திடீரென எதற்கு முழு உடல் பரிசோதனை?' என அவரது ஆதரவாளர்களிடம் கேட்டோம். ``கொரோனா தடுப்புப் பணிகளில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறார். அடிக்கடி பயணம், நேரத்துக்கு ஓய்வு இல்லை. தேனிக்குக் கூட காரில்தான் சென்று வருகிறார். அதனால்தான் பரிசோதனை செய்துகொண்டார். இன்று காலை தனது உதவியாளர்களை அழைத்து, அலுவலக விஷயங்களை அப்டேட் செய்துகொண்டார். நாளை முதல் தனது அரசு அலுவல்களை கவனிக்க உள்ளார்” என்றவர்கள், அவரது உணவு முறைகளை நம்மிடம் விவரித்தனர்.

``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்
துணை முதல்வர் ஓ.பி.எஸ்
துணை முதல்வர் ஓ.பி.எஸ்

``அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். எழுந்ததும் வாக்கிங். 30 நிமிடங்களுக்குக் குறையாமல் யோகா செய்வார். தொடர்ந்து முளை கட்டிய பாசிப்பயறு உட்பட சிறுதானியங்கள் சாப்பிட்டுவிட்டு அன்றைய செய்தித்தாள்களைப் பார்ப்பார். பின்னர் அலுவலகம் கிளம்பிவிடுவார். காலை உணவாக பெரும்பாலும் இட்லி, தோசை இருக்கும். சில நாள்களில் புட்டு, சப்பாத்தி இருக்கும். மதியம் என்ன சாப்பாடு என கேட்டுவிட்டு, சைவ உணவு எதுவா இருந்தாலும் ஓ.கே சொல்லிவிடுவார்.

இன்ன உணவுதான் வேண்டும் எனக் கேட்கும் பழக்கம் அவரிடம் இல்லை! முன்னரெல்லாம் மட்டன், சிக்கன் விரும்பி சாப்பிடுவார். 10 வருடங்களுக்கு முன்னர், நான்வெஜ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். அவித்த உணவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். எண்ணெய் உணவுகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். இரவு உணவாக இட்லி இருக்கும். தூங்கச்செல்ல குறைந்தது 12 மணி ஆகும். தேர்தல் நேரங்களில் நள்ளிரவு 2 மணி கூட ஆகும். எத்தனை மணிக்குத் தூங்கினாலும் சரியாக காலையில் 5 மணிக்கு எழுந்துவிடுவார். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு, தூக்கம் வந்தால் ஒரு மணி நேரம் மட்டும் தூங்குவார். அதுவும் தினசரி இல்லை. எப்போதாவது ஒருநாள்தான்.

`அரசுடன் தொடர்புடைய தொழிலைச் செய்ததில்லை!’-ஓ.பி.எஸ் மீதான குற்றச்சாட்டுக்கு மகன் சொல்வதென்ன?
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

கேழ்வரகு ரொட்டி, கம்பங்கூழ், பனங்கிழங்கு, பணியாரம் போன்ற நம் பாரம்பர்ய உணவுகள் மீது அலாதிப் பிரியம் கொண்டவர். சுக்குமல்லிக் காபி மட்டும்தான் குடிப்பார். தினமும் ஒரு பப்பாளி சாப்பிடுவார். கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு புத்துணர்ச்சி சிகிச்சைக்காகச் செல்லும்போது, இயற்கை உரங்களில் விளைந்த பழங்கள் மட்டுமே உணவாகக் கொடுப்பர். டயட் கன்ட்ரோல் பண்ணுவதில் அக்கறையாக இருப்பார். தேவையில்லாத உணவுகளைச் சாப்பிடக் கூடாது என அனைவரிடம் கூறுவார். குண்டாக ஒருவர் அவர் முன் தோன்றினால், உடம்பைக் குறைக்க வேண்டும் என கண்டிப்போடு சொல்வார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு இந்த உணவு முறையே தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு