Election bannerElection banner
Published:Updated:

அமித் ஷாவை ஒதுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமை... ஏன்?

 அமித் ஷா
அமித் ஷா

இந்துக்கள் இந்தச் சட்டத்துக்கு பெரும் ஆதரவைத் தருவார்கள் என்றுதான் நினைத்தோம். இஸ்லாமியர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதுவும் நமக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அமித் ஷா திட்டம்போட்டார். ஆனால்...

``அரசியல் சாணக்கியன் அமித் ஷா” என்று பி.ஜே.பி தொண்டர்களால் துாக்கிக் கொண்டப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய சறுக்கல்களைப் பார்த்தால் அடுத்தடுத்த காலம் அமித் ஷாவுக்கு அவ்வளவு உகந்ததாக இருக்காது என்கிற கருத்தை முன்வைக்க ஆரம்பித்துள்ளார்கள் டெல்லி பி.ஜே.பி நிர்வாகிகள்.

அமித் ஷா
அமித் ஷா

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக முதல்முறை தேர்வானபோது தனது நம்பிக்கைகுரிய நண்பராகவும் அரசியல் ஆலோசனையில் தனக்குக் கிடைத்த சாணக்கியனாகவும் கருதி குஜராத் மாநிலத்திலிருந்து அமித் ஷாவை டெல்லி பி.ஜே.பி-க்கு அழைத்து வந்தார். அதிலும் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான பி.ஜே.பி-க்கு தேசியத் தலைவர் என்கிற வலிமையான பொறுப்பும் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டது. அமித் ஷாவும் அசகாய சூரனாகப் பணிகளை ஆரம்பித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் நடந்த பெரும்பாலான மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடித்தது

மாநிலத்துக்கு ஒரு ஃபார்முலா, கட்சிகளுக்கு ஓர் கணக்கு என்று புதிய யுக்திகளைக் கையாண்டார் அமித் ஷா. பி.ஜே.பி-க்கு செல்வாக்கே இல்லாத வடகிழக்கு மாநிலம் முழுவதையும் பி.ஜே.பி வசம் கொண்டுவந்தார். கல்யாண வீடு என்றால் மாப்பிள்ளையாக மட்டுமே இருப்பேன் என்று சொல்லாடல் போல, தேர்தல் என்று ஒன்று நடந்தால் ஆட்சிக்கு வரும் கட்சியாக பி.ஜே.பி மட்டுமே இருக்க வேண்டும் என்கிற உத்வேகம் அமித் ஷாவுக்கு இருந்தது. கட்சிகளை உடைப்பது இந்திய அரசியலில் வழக்கமான பாலிஸி. ஆனால், எம்.எல்.ஏ-க்களை கூண்டோடு உடைத்து ஆட்சியையே மாற்றும் புதிய யுக்தியை இந்திய அரசியலுக்கு புகுத்தியது அமித் ஷாதான். சாணக்கியத்தனம் என்றால் ஒரு தவற்றைக்கூட நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்கிற கூற்றை அடிக்கடி உணர்த்திக்கொண்டே இருந்தவர். ஆனால், அமித் ஷாவின் அதிரடிகளுக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐந்து மாநில தேர்தல். ஆட்சியிலிருந்த மூன்று மாநிலத்தை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்தது பி.ஜே.பி.

மோடி மற்றும் அமித் ஷா
மோடி மற்றும் அமித் ஷா

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இல்லாவிட்டாலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பி.ஜே.பி தலைவர்கள், ``கோவா பாலிஸியை விரைவில் அமித் ஷா இந்த இரண்டு மாநிலங்களிலும் அமல்படுத்துவார். இரண்டு மாதங்கள்கூட இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி நீடிக்காது” என்று கமென்ட் அடித்தனர். ஆனால், அவர்கள் சொல்லி ஓராண்டாகிவிட்டது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு, அமித் ஷாவின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றது. மோடி அசுர பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் ஏற, அவருக்கு உறுதுணையாக உள்துறை அமைச்சர் பதவியை எட்டிப்பிடித்தார் அமித் ஷா.

``பி.ஜே.பி-யின் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் இந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படும்” என்று பதவியேற்றதுமே திருவாய் மலர்ந்தார். அவர் சொன்னது போலவே புதிய அரசு பதவியேற்றபோது நடந்த முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையில் முத்தலாக் முதல் குடியுரிமைச் சட்ட நிறைவேற்றம் வரை எல்லாம் இடம்பெற்றன. ஜனாதிபதி உரையைப் படித்தபோது நாடாளுமன்றமே குலுங்கும் அளவுக்கு மேஜையைத் தட்டி ஆர்ப்பரித்தனர் பி.ஜே.பி உறுப்பினர்கள். அவர்கள் அப்போது நினைக்கவில்லை இதே பிரச்னைக்காக, பின்னால் இந்திய நாடே போராட்டத்தால் குலுங்கப்போகிறது என்று.

அமித் ஷாவின் அதிரடிகள் ஒவ்வொன்றாக செயலுக்கு வர ஆரம்பித்தன. முதல் கூட்டத்தொடரிலே, முத்தலாக் மசோதாவை இரண்டு அவைகளிலும் கொண்டுவந்தனர். அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் போனதால் அந்த மசோதாவை நிறைவேற்றினார்கள்.

அமித்ஷா
அமித்ஷா

அடுத்தகட்டமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 50 ஆண்டுகள் கனவை நிறைவேற்றும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார் அமித் ஷா. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் சட்டத் திருத்ததைக் கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 100 நாள்களைக் கடந்தும் இன்றுவரை காஷ்மீர் மூடுதிரைக்குள் உள்ள மந்திர தேசமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு கரும்புள்ளியாகப் பார்க்கப்பட்டது பாபர் மசூதி விவகாரம். ஆனால், பி.ஜே.பி-க்கு ராஜகாரியமே அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான். அதையும் நீதிமன்றத்தின் மூலம் விரைந்து முடித்தது மத்திய அரசு. இந்துக்களுக்கு எல்லாம் நடந்தது எங்கள் ஆட்சியில்தான் என்று பி.ஜே.பி தரப்பு கொண்டாட்ட மனநிலையில் இருந்தபோது, ``ராமர் கோயிலைக் கட்ட உத்தரவிட்டது நீதிமன்றமே. நீங்கள் அல்ல” என்று அதற்கு மறுவிமர்சனமும் எழுந்தது. இந்த விவகாரத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்துகொண்டிருந்த அமித் ஷாவின் சாணக்கியத்தனம் முழுமையாகச் செயல் இழந்துபோனது மஹாராஷ்டிரா விவகாரத்தில்தான்.

நாடாளுமன்றத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற அந்தக் கட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து பி.ஜே.பி அரசை சில நாள்களில் கொண்டுவந்தது. ஆனால், அதன் பிறகு மஹாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தலில் ஹரியானாவில் ஆட்சியைப் பறிகொடுக்கும் நிலைக்குச் சென்று சௌதாலா கட்சியின் தயவால் ஆட்சி அமைத்தது. ஆனால், மஹாராஷ்டிராவில் தனிப்பெரும் பலத்தோடு வெற்றி பெற்றபோதும் 30 ஆண்டுக்கால இந்துத்துவா நண்பனின் கடைசி நேர கழுத்தறுப்பை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் அமித் ஷா.

ஆளுநர் ஆட்சியில் இருந்த மாநிலத்தில் அஜித் பவார் என்கிற ஒருவரின் பேச்சை நம்பி இரவோடு இரவாக ஆளுநரை துாங்கவிடாமல் செய்து அனைத்து காரியங்களையும் சத்தமில்லாமல் செய்ய நினைத்தார் அமித் ஷா. அவரின் வழக்கமான பாலிசியான அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை வைத்து ஆட்சியைப் பிடிப்பது எப்படி என்ற தந்திரம் மஹாராஷ்டிராவில் பலித்துவிடும் என்று அவர் போட்ட கணக்கு முற்றிலும் தகர்ந்தது.

30 ஆண்டுகள் பி.ஜே.பி-யின் நிழலாக இருந்த சிவசேனா இந்த முறை உஷாராகியது. அமித் ஷாவின் ஆட்டத்துக்கு நேர் எதிராக அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆடியது. மறுபுறம் அமைதியான அரசியல் வாதியாகக் கருதப்பட்ட சரத்பவாரை உக்கிரமடையச் செய்தது. ''எனக்குப் பதவி முக்கியமல்ல பி.ஜே.பி-யின் தோல்விதான் முக்கியம் என்று களத்தில் இறங்க சாணக்கியத்தனம் சரிந்து அமித் ஷாவுக்கு தலைகுனிவே இந்த விவகாரத்தில் ஏற்பட்டது.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

அதற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்தம் பி.ஜே.பி அரசுக்கு இவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவர்களே நினைத்துப் பார்க்கவில்லை. இதுகுறித்து பி.ஜே.பி-க்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், ``மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரும் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தது. ஆனால், நாங்கள் கணக்கு போட்டது வேறு. குறிப்பாக, இந்துக்கள் இந்தச் சட்டத்துக்கு பெரும் ஆதரவை தருவார்கள் என்றுதான் நினைத்தோம். இஸ்லாமியர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதுவும் நமக்கு சாதமான நிலையை ஏற்படுத்தும் என்று அமித் ஷா திட்டம் போட்டார். ஆனால், அதற்கு நேர்மாறாக மாணவர்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராகக் களம் இறங்கியதுதான் எங்களது கணக்கு பலிக்காமல் போனதற்குக் காரணம்.

அவர்கள் இந்தச் சட்டத்தைப் பற்றிப் படித்துவிட்டு களத்துக்கு வந்தது எங்களுக்கு சிக்கலாகிவிட்டது. அதனால், இதுவரை தான் எடுத்த எந்த முடிவிலும் பின்வாங்காத அமித் ஷாவை இந்தப் போராட்டங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டன. NRC இப்போது வராது என்று அவரே சொல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள்.

குடியுரிமை சட்டம் மட்டுமல்ல தேசிய குடிமக்கள் பதிவேடும் இந்த அரசு கொண்டுவரும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பு கர்ஜனையாகச் சொன்ன அமித் ஷா கப்சிப் என்று இந்த விவகாரத்தில் இப்போது மௌனம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஒரு முடிவை எடுத்தால் அதை உடனடியாகச் செயல்படுத்தி விட வேண்டும் என்கிற அவரது அரசியல் பாடம் இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுக்கொண்டே வருகிறது.

தமிழ்நாடு தினம்... பிளாஸ்டிக் தடை... புதிய மாவட்டங்கள்... தமிழ்நாட்டில் 2019-ல் நடந்த மாற்றங்கள்!

குறிப்பாக, குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மோடியே அமித் ஷாவிடம் கோபத்துடன் நடந்துகொண்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இனி அவசரப்பட்டு எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லியுள்ளார். மற்றொருபுறம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்த இரட்டையர்களின் அசுர வளர்ச்சியால் ஆட்டம் கண்டுபோனது. பி.ஜே.பி ஆட்சியில் ஆள்பவர்கள் யார் என்பதை கண்டுகொள்ள வேண்டாம், பொம்பலாட்டத்தில் திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் கரங்களைப் போல ஆட்சியை செலுத்தும் கரங்களாக இருப்பது ஆர்.எஸ்.எஸ் தலைமையே. ஆனால், இந்த இரட்டையர்களின் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமையே கொஞ்சம் அச்சத்தோடுதான் இருந்தது.

பி.ஜே.பி-யின் தலைமையை விரைவில் மாற்றி தங்களுக்கு ஒத்துவரும் நபரை அந்தப் பதவிக்குக் கொண்டு வர முயற்சி எடுத்தது. ஆனால், அங்கும் தனது விசுவாசியான நட்டாவை உள்ளே நுழைக்க பார்த்தார் அமித் ஷா. இப்போது செயல் தலைவராக இருக்கும் நட்டாதான் ஜனவரி மாதம் பி.ஜே.பி தலைவராகப்போகிறார். அமித் ஷா, தன் பேச்சுக்கு நட்டா கட்டுப்படுவார் என்று முழுமையாக நம்புகிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தலைமை முழுமையாக நட்டாவை கையில் எடுக்க முடிவு செய்துவிட்டது. இனி, அமித்ஷா சொல்லுவதைக் கேட்பதா, சித்தாந்த தலைமை சொல்லுவதைக் கேட்பதா? என்கிற சிக்கல் நட்டாவுக்கு வரும். ஆனால், அமித் ஷாவின் பதவி முடிந்த பிறகு, கட்சிக்குள் எந்தப் பதவியையும் அவருக்கு அளிக்க வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துவிட்டது.

குடியுரிமைப் போராட்டம்
குடியுரிமைப் போராட்டம்
AP

இப்போது ஜார்க்கண்ட் தேர்தலில் பி.ஜே.பி தழுவிய தோல்வி ஆர்.எஸ்.எஸ் தலைமையை யோசிக்க வைத்துவிட்டது. ஆட்சியில் இருந்த ஒவ்வொரு மாநிலமும் நம் கையைவிட்டுப் போகிறது. அமித் ஷாவின் அவசரமே அனைத்துக்கும் காரணமோ என்கிற விவாதம் அந்த அமைப்புக்குள் எழுந்துவிட்டதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒப்புக்கொள்கிறார்கள். சந்திரகுப்தரின் ஆஸ்தான ஆலோசகராக இருந்த சாணக்கியன் அந்த சந்திரகுப்தராலேயே ஒருகட்டத்தில் ஓரம்கட்டப்பட்டு, அவருடைய இறுதிநாள்கள் துயரமாகக் கழிந்தது. அமித்ஷாவை இப்போது ஆர்.எஸ்.எஸ் தலைமை ஒதுக்க நினைப்பது இனி அவர் வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும் என்று வருத்தப்படுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அமித்ஷா தன்னை மீண்டும் நிரூபித்துக்கொள்ள ஜனவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யை கரைசேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆனால், அங்கு கள நிலவரங்கள் அமித் ஷாவுக்கு சாதகமாக இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். எனவே, தன்னை நிரூபி்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியும் அவருக்கு அதிகரித்துள்ளது. பிறக்கப்போகும் புத்தாண்டு அமித் ஷாவுக்கு அவ்வளவு எளிதாக இருந்துவிடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இனி அமித் ஷாவின் அரசியல் சதுரங்க காய்கள் எப்படி நகரப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- லியானா

தொடரும் மாநிலத் தேர்தல் முடிவுகள்... சரியும் பா.ஜகவின் செல்வாக்கு!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு