Published:Updated:

மகாராஷ்டிரா: ``இது ஒன்றும் தாலிபன் ஆட்சி கிடையாது." முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து!

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

சிவசேனாவினர் கொடுத்த புகாரின் பேரில் நாராயண் ராணே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கைதுசெய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை மத்திய அமைச்சர் நாராயண் ராணே அடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவசேனாவினர் கொடுத்த புகாரின் பேரில் நாராயண் ராணே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அளித்துள்ள பேட்டியில், ``இந்தக் கைது நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம்" என்று தெரிவித்திருந்தார். இது குறித்து மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்திருந்த பேட்டியில், ``நாராயண் ராணே தெரிவித்த கருத்துக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை.

`மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அடிப்பேன்!' - என்ற மத்திய அமைச்சர் கைது!
தேவேந்திர பட்நவிஸ்
தேவேந்திர பட்நவிஸ்

ஆனால் தனிப்பட்ட முறையில் அவருக்குத் துணையாக இருப்போம். நாராயண் ராணே பேசும்போது கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்துக்களை தீவிரவாதிகள் என்று சொன்ன சர்ஜீ உஸ்மானி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ராணே மீது அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸ் படை தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாசிக்கில் பாஜக அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நாசிக் போலீஸ் கமிஷனர் தன்னை சத்ரபதி என்று நினைத்துக்கொண்டாரா? இது ஒன்றும் தாலிபன் ஆட்சி கிடையாது. பாஜக அலுவலகம் தாக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. ஆனால் இது போன்ற தாக்குதலால் எங்களைக் கட்டுப்படுத்திவிட முடியாது’’ என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இது குறித்துக் கூறுகையில், "நாராயண் ராணேயின் கருத்துக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அதே சமயம் அவரது கருத்துக்காக நாங்கள் வருத்தமும் தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான நவாப் மாலிக் இது குறித்து கூறுகையில், "நாராயண் ராணே முதல்வரை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும் அவமதித்திருக்கிறார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு