Published:Updated:

`வாக்குறுதி கொடுக்கவில்லை, ஆனாலும் காத்திருந்தோம்!’- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் இந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. சுழற்சி முறையில் சிவசேனா முதல்வர் பதவியைக் கேட்டதால் பா.ஜ.க ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையில் யாரும் ஆட்சியமைக்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த அஜித் பவார், பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். அவரும் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். இதுதொடர்பாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீதிமன்றம் சென்றன.

இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு, இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை (27.11.2019) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும், ரகசிய வாக்கெடுப்பாக அல்லாமல் வெளிப்படையான வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

`இது ஒன்றும் கோவா அல்ல;   மகாராஷ்டிரா!’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார் #WeAre162

நீதிமன்ற உத்தரவையடுத்து துணை முதல்வர் அஜித் பவார் மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதையடுத்து பட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இன்று மதியம் 3.30 மணிக்கு பட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்திப்பதாகக் கூறப்பட்டது. அதன்படி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசியவர், ``பா.ஜ.க - சிவசேனா கூட்டணிக்கே மகாராஷ்டிரா மக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகளில் மக்களின் முழு ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. சிவசேனாவை விட பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மற்ற கட்சிகளைவிட அதிக இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது.

`வாக்குறுதி கொடுக்கவில்லை, ஆனாலும் காத்திருந்தோம்!’- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்

வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையைக் கொண்டு சிவசேனா பேரம் பேசத் தொடங்கியது. முதல்வர் பதவி சிவசேனாவுக்கு வழங்கப்படும் என எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. சுழற்சி முறையில் முதல்வர் பதவி போன்ற வாக்குறுதியும் அளிக்கவில்லை. நாங்கள் சிவசேனாவுக்காகக் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவை. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அஜித் பவாருடன் இருப்பதாக நினைத்தோம். அஜித் பவார் தன்னால் கூட்டணியில் தொடரமுடியாது எனத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். பா.ஜ.க எந்தக் கட்சிகளையும் உடைக்காது; குதிரை பேரத்திலும் ஈடுபடாது. ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளிக்கவுள்ளேன்” என்றார்.

மகாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்ற பட்னாவிஸ், துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவார் ஆகிய இருவரும் 4 நாள்களில் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.