Published:Updated:

``அதிமுக சரிவைச் சந்திக்கும் போதெல்லாம் மீட்டவர் சசிகலா..!" - மேடையில் விம்மி அழுத திவாகரன்

சசிகலா - திவாகரன் ( தே.தீட்ஷித் )

`அம்மா சிறையிலிருந்த போதே சசிகலா கட்சியில் பெரிய பதவியை கேட்டு வாங்கியிருக்கலாம். எனக்கு கட்சியில் ஒரு பதவி கொடுங்கனு கேட்டிருந்தால், அம்மா நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.' - திவாகரன்

``அதிமுக சரிவைச் சந்திக்கும் போதெல்லாம் மீட்டவர் சசிகலா..!" - மேடையில் விம்மி அழுத திவாகரன்

`அம்மா சிறையிலிருந்த போதே சசிகலா கட்சியில் பெரிய பதவியை கேட்டு வாங்கியிருக்கலாம். எனக்கு கட்சியில் ஒரு பதவி கொடுங்கனு கேட்டிருந்தால், அம்மா நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.' - திவாகரன்

Published:Updated:
சசிகலா - திவாகரன் ( தே.தீட்ஷித் )

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித் தனியாகச் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வன்முறைகள் வெடித்தன.

மேடையில் அழும் திவாகரன்
மேடையில் அழும் திவாகரன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த பரபரப்பான சூழலில், தஞ்சாவூரில் சசிகலா தலைமையில் அவர் தம்பி திவாகரன் தொடங்கிய கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தின் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் திவாகரன், அவர் மகன் ஜெய ஆனந்த் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அ.இ.அ.தி.மு.க-வில், அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா முன்னிலையில் இணைத்து கொள்வதாக திவாகரன் தெரிவித்தார்.

சசிகலா,திவாகரன்
சசிகலா,திவாகரன்

பின்னர் பேசிய அவர், ``இந்த இணைப்பு விழாவை லட்சக்கணக்கானவர்களைத் திரட்டி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடத்த விரும்பினோம். ஆனால் இன்றைய அவசரத் தேவை கருதி உடனடியாக இங்கே நடத்துகிறோம். இந்த நேரத்தில் தொண்டர்களின் அரவணைப்பு சசிகலாவிற்கு தேவைப்படுகிறது.

எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா இருவர்மீது யாரெல்லாம் அன்பு, பாசம் வைத்திருந்தனரோ அவர்கள் அனைவரும் சசிகலாமீதும் அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். அ.தி.மு.க-தான் தன்னுடைய குடும்பம் என்று தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தன்னலமற்ற தலைவியாக சசிகலா வந்துள்ளார். எத்தனையோ பேருக்கு எத்தனையோ பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர். அவங்களுக்கு எல்லாம் ஜெயலலிதா நேரடியாகவே பதவி கொடுத்தாங்களா இல்லையே.

திவாகரன்
திவாகரன்

நம்ம வீட்டு கேட்ட திறந்தவங்ககூட பெரிய பதவிகளை அடைந்தனர். ஆனால் நானோ அல்லது என் அக்காவோ, சாரி பொதுச்செயலாளரோ பெரிய பதவிகளுக்கு போகமுடியவில்லை. ஜெயலலிதாம்மா கூட இருப்பதையே போதும் என நினைத்திருந்தோம். ஒவ்வொரு முறை ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் நாங்கதான் நேரடியாக பாதிக்கப்படுவோம். சிதம்பரமும், கருணாநிதியும் என்மீது போட்ட வழக்கை பல வருடங்களாக நடத்தி வருகிறேன்.

பதவியை அடைந்தவர்கள், பணத்தை சேர்த்தவர்கள் சசிகலாவுடன் இல்லை. அவரின் விஸ்வாசத்தை தற்போது அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் மறந்து விட்டனர். இந்த நல்ல நேரத்தில் சசிகலாவிற்காக உதவுவதற்காக நம்மை இணைத்து கொண்டுள்ளோம். அ.தி.மு.க-வில் தற்போது நடக்கும் நிகழ்வை அனைவரும் கவனித்து வருகின்றனர். ஏற்கெனவே அம்மா சிறையிலிருந்த போதே சசிகலா கட்சியில் பெரிய பதவியை கேட்டு வாங்கியிருக்கலாம். எனக்கு கட்சியில் ஒரு பதவி கொடுங்கனு கேட்டிருந்தால், அம்மா நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.

சசிகலா,திவாகரன்
சசிகலா,திவாகரன்

ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது, சசிகலாவை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து ஜெயித்து அமைச்சராக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் சசிகலாவோ முதலில் உங்க உடல் நிலையை கவனிப்போம் எனக்கூறி அதனை அன்புடன் மறுத்து விட்டார். அன்றைக்கு அம்மா சொன்னது நடந்திருந்தால் இன்றைக்கு சண்டை சச்சரவுக்கு வேலையில்லை.

அண்ணா திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற முறையில் சின்னம்மா கரத்தில் ஒப்படைக்கிறேன். அதே நேரத்தில் கூடப்பிறந்த சகோதரி என்கிற ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கின் படி சின்னம்மா சசிகலாவை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவரைப் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

கட்சி இணைப்பு விழா
கட்சி இணைப்பு விழா

அவர்கள் போகிற இடங்களில் எல்லாம் நீங்கள்தான் பாதுக்காக்க வேண்டும். சசிகலா எதற்கும் ஆசைப்படாதவர். டி.வி-யில் கயல் என சீரியல் ஓடுகிறது. அந்த கயல் எப்படியோ அதே போல் கேரக்டர் உடையவர்தான் சசிகலா. சாதரண, சாமான்ய ஆட்களை எல்லாம் மந்திரியாக்கியிருக்கிறார். ஆனால் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது நான் எங்கே போக முடியும் ...அதனால்தான் தனி கட்சி தொடங்கினேன்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் பணியாற்றி வருகிறேன். உறுப்பினராகவும் இருக்கிறேன். புரட்சித் தலைவி காலத்திலும் சகோதரியுடன் சேர்ந்து பணியாற்றினேன். ஜா,ஜெ காலத்தில் பிரச்னை ஏற்பட்டு இரட்டை இலை முடக்கப்பட்ட போது சசிகலாவும், அவர் கணவர் ம.நடராசனும்தான் சின்னத்தை மீட்டனர். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க சரிவை சந்திக்கும் போதெல்லாம் பின்னாளிருந்து சசிகலா தாங்கிப் பிடித்து மீட்டிருக்கிறார்.

திவாகரன்
திவாகரன்

இதெல்லாம் நெனச்சு பாக்கும் போது அவர் எல்லாத்துக்கும் மேல. எனக்கு எவ்வளவு வேதனைகள் இருக்கும்..! " எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையிலேயே அழத் தொடங்கினார். திவாகரன் அழுவதைப் பார்த்த சசிகலாவும் அழுதார். கூட்டத்திலிருந்து, ``அம்மா அழாதீங்க உங்களுக்கு நாங்க இருக்கோம்!" என குரல் வந்ததையடுத்து கர்ஷீப்பால் கண்களை துடைத்துக் கொண்டார் சசிகலா.

தொடர்ந்து பேசிய திவாகரன், ``அ.தி.மு.க பொதுச்செயலாளரான சசிகலா அரணைப்பாக இருந்து துரோகிகளுக்கு இடம் கொடுத்து விடாமல்... அவர் பழைய நிலைக்கு வரவேண்டும். அம்மா இருந்திருந்தால் அவர் எங்கே இருந்திருப்பார் எனத் தெரியும். அவர் இல்லாததே சசிகலாவின் இந்த நிலைக்குக் காரணம்" என்றார்.