Election bannerElection banner
Published:Updated:

தி.மு.க அலுவலகத்தில் திவாகரன்; உற்சாகத்தில் டி.ஆர்.பி.ராஜா ஆதரவாளர்கள் - பின்னணி என்ன?

திவாகரன்
திவாகரன் ( ம.அரவிந்த் )

சசிகலாவின் தம்பி திவாகரன் சமீபகாலமாகவே தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். கடந்த வருடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட திவாகரன் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மன்னார்குடியில் தி.மு.க தேர்தல் அலுவலகத்துக்கு சசிகலாவின் தம்பி திவாகரன் சென்றது, மன்னார்குடியில் அரசியல் வட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சசிகலாவுடன் திவாகரன்
சசிகலாவுடன் திவாகரன்

சசிகலாவின் தம்பி திவாகரன், `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியை நடத்திவருகிறார். சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தபோது திவாகரன் அதை வரவேற்பதாகவும், `சசிகலாவின் அருகிலுள்ள என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அவரது முதுகில் குத்தத் தயாராகிவிட்டார்கள் என்பதை உணர்ந்தே இந்த முடிவை சசிகலா எடுத்திருக்கிறார்’ என்றும் பேசினார்.

`தினகரன் நினைத்தது நடந்திருக்கிறது’ என திவாகரன் ஓப்பனாகப் பேசியது அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது. இந்தநிலையில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திவாகரன், கன்னியாகுமரி, நாகர்கோயில், போடி, விராலிமலை உள்ளிட்ட 22 தொகுதிகளில் தனது அண்ணா திராவிடர் கழகம் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார். அவர்களும் தீவிரமான பிரசாரப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தி.மு,.க அலுவலகம்
தி.மு,.க அலுவலகம்

இந்தநிலையில், திமுக தேர்தல் அலுவலகத்துக்கு திவாகரன் சென்ற காராணம் என்ன என்று விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தோம், `` சசிகலாவின் தம்பி திவாகரன் சமீபகாலமாகவே தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். கடந்த வருடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட திவாகரன், ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அமர்ந்ததுடன் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு பல இடங்களில் தி.மு.க-கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாகக் கூறியிருந்தாலும், நமது நிரந்தர எதிரியான தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் எனக் கூறிவருகிறார். தினகரனும் தேர்தல் பிரசாரங்களில் தி.மு.க-வை விமர்சனம் செய்து பேசிவருகிறார். திவாகரனும் தனது கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறர்.

தி.மு.க அலுவலகம்
தி.மு.க அலுவலகம்

இந்தச் சூழ்நிலையில் மன்னார்குடியில் பெரிய கோயில் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோயில் திருவிழா நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் சாமி தரிசனம் செய்வதற்காக காந்தி சாலையிலுள்ள வெண்ணெய் தாழி மண்டபத்துக்கு திவாகரன் வந்தார்.

ஆனால் சாமி வருவதற்கு தாமதமானது. இதையடுத்து சிறிது நேரம் நின்றபடி காத்திருந்த திவாகரன், பின்னர் அருகிலுள்ள தி.மு.க அலுவலகத்துக்குப் போய் இருபது நிமிடங்கள் வரை அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகள் `அண்ணே டீ, ஜூஸ் எதுவும் வாங்கி வரட்டுமா...’ என பவ்யம் காட்ட எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு, அவர்களுடன் அரசியல் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அங்கிருந்த தி.மு.க நிர்வாகியான கண்ணதாசனிடன் `இந்த முறை கோட்டை விட்டுடாம ஆட்சியைப் புடிச்சிடுங்க’ என்றும், `எங்கே உங்க எம்.எல்.ஏ ராஜா?’ என திவாகரன் கேட்க, அதற்கு அவர் பிரசாரத்திற்கு சென்றிருக்கிறார் என பதிலளித்திருக்கிறார்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

திவாகரன் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க நிர்வாகிகள் திவாகரனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இந்தத் தகவல் லோக்கல் அரசியல் வட்டத்தில் வேகமாகப் பரவியது. தற்போது அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் சிவ.ராஜமாணிக்கம், திவாகரனுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்தவர். பின்னர் அ.ம.மு.க முகாமுக்குச் சென்றவர் அதன் பிறகு அ.தி.மு.க-வுக்குச் சென்றார். ஏற்கெனவே மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவ.ராஜமாணிக்கம் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். தன்னைவிட்டுச் சென்றதிலிருந்தே அவர்மீது திவாகரன் வருத்தத்தில் இருந்துவந்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஏற்கெனவே தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசிவந்த திவாகரன், தி.மு.கவின் தேர்தல் அலுவலகத்துக்கும் சென்றிருப்பது, டி.ஆர்.பி.ராஜா ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றனர்.

மகன் ஜெயானந், திவாகரன்
மகன் ஜெயானந், திவாகரன்

அ.தி.மு.க தரப்பிலோ, ``தி.மு.க-வுக்கு ஆதரவாகவும், ஸ்டாலின் முதல்வராவார் எனவும் கூறிவரும் திவாகரன் தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் அங்கு சென்றதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி’’ எனத் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு