Published:Updated:

`மநீம-வில் சர்வாதிகாரம் தலைதூக்கிவிட்டது' - கமல் மீது புகார்; பொதுச் செயலாளர் முருகானந்தம் விலகல்!

முருகானந்தம்
முருகானந்தம்

மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான். பல பிரச்னைகள் கட்சிக்குள் நிலவுவதால், இந்த கட்சியிலிருந்து எந்த புண்ணியமும் இல்லை என்கிற காரணத்தால் விலகுகிறேன் என அறிவித்தார் முருகானந்தம்.

``மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்று சொல்லிவந்த கமல், தற்பொழுது எனது கட்சி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். கட்சியில் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலை தூக்கிவிட்டது. இனியும் இந்த கட்சியிலிருந்து எந்த புண்ணியமும் இல்லை" என்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதோடு கமல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் முருகானந்தம்.

கமல்
கமல்

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதனைத்தொடர்ந்து மகேந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு உள்படப் பலரும் ராஜினாமா செய்தனர். இதில் பதவி விலகிய மகேந்திரன், ஜனநாயக முறையில் கட்சி செயல்படவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். அதனைத்தொடர்ந்து மகேந்திரன் ஒரு துரோகி என்று கமல் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், கட்சியின் மேல்மட்ட மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து விட்டதாகவும் கட்சியைச் சீரமைக்கும் அதிகாரம் கமலிடம் கட்சி வழங்கியுள்ளதாக அதன் துணைத் தலைவர் பொன்ராஜ் சமீபத்தில் பேசினார். அதன்பிறகு, கமல் முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். பேசிய பின்பும் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் முருகானந்தம்.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர்முருகானந்தம்
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர்முருகானந்தம்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் முருகானந்தம். ஏன் விலகுகிறார்,? அப்படி என்ன பேசினார். ”நான் கட்சியில் இணைந்தபோது எனக்கான சுதந்திரமும், கட்சியில் கொடுக்கப்பட்டதால் முழுமையாக என்னால் உழைக்க முடிந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகக் கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது. கட்சிக்குள் ஜனநாயகம் ஒன்றே இல்லாமல் போய் சர்வாதிகாரம் தலைதூக்கிவிட்டது.

கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்று சொல்லிவந்த கமல் தற்பொழுது அதனை மறந்து, அது என்னுடைய கட்சி எனக் கூற ஆரம்பித்து விட்டார். சட்டமன்ற தேர்தலில் கட்சியில் எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நூறுக்கும் அதிகமான இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுதால் தான் படுதோல்வி அடையக் காரணம். எதற்காக நூறு இடங்களைக் கூட்டணிக்கு ஒதுக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை.

முருகானந்தம்
முருகானந்தம்

கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை நான் எழுப்பினேன். ஆனால் அவர் எதற்குமே பதிலளிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்குக் காரணம் தலைமைதான். கமல் தன்னுடைய புகழுக்காகச் செயல்பட்டாரோ என்கிற சந்தேகம் அதிகமாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல, சரியான பாதையில் அந்த கட்சியை வழி நடத்தப்படவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் எங்கள் மீது திருப்பபார்க்கிறார்கள்.

கமல்
கமல்

மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான். இதுபோன்று பல பிரச்னைகள் இக்கட்சிக்குள் நிலவுவதால் இனியும் இந்த கட்சிக்குள் இருந்து எந்த புண்ணியமும் இல்லை என்கிற காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். என்னுடன் சேர்ந்து கட்சியில் இன்னும் சில நிர்வாகிகளும் விலகி விட்டனர். வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள்" என்று முருகானந்தம் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு