Published:Updated:

என்ன நடக்கிறது சி.பி.எம், சி.பி.ஐ கட்சிக்குள்? - போராட்டக் குரல் மௌனமான பின்னணி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

`போராட்டக்களத்தில் ஒன்றுகூடுவதைக் கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்' எனக் கூறியிருக்கிறோம். எவ்வளவு கூறினாலும் சிலர் கேட்காமல் கூடிவிடுகின்றனர்.

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாகவே இடதுசாரி கட்சித் தலைவர்களின் போராட்டக்குரல் பெரிதாக ஒலிக்கவில்லை. `கொரோனா தொற்று பாதிப்பால் மூத்த தலைவர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதால், மற்ற நிர்வாகிகளும் அமைதியாக இருக்கிறார்கள். விரைவில், போராட்டக்களத்துக்கு வருவோம்' என்கின்றனர் தோழர்கள்.

சி.பி.எம் போராட்டம்
சி.பி.எம் போராட்டம்

கொரோனா தொற்று பரவலால் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களும், சில அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளானார்கள். தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக மரணமடைந்தார். கொரோனாவின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியதால், தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கையுடன் சந்திப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். அதேநேரம், மக்கள் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்துவரும் இரண்டு இடதுசாரி கட்சிகளிலும் கனத்த மௌனம் நிலவிவருகிறது.

கொரோனா காலத்திலும் சாத்தான்குளம் விவகாரம், கொரோனா நிவாரண நிதிக் குளறுபடி எனக் குரல் கொடுத்து வந்த சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தங்களுடைய போராட்டங்களை சிறிது நாள்களுக்குத் தள்ளிவைத்திருக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அவர், கடந்த 15-ம் தேதி திருச்சியிலிருந்து சென்னை திரும்பிவிட்டார். அதேபோல், மூத்த தலைவர் நல்லகண்ணுவும் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் பலரும் சிகிச்சையில் இருப்பது, கட்சித் தோழர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

தா.பாண்டியன்
தா.பாண்டியன்

``சி.பி.ஐ கட்சிக்குள் என்ன நடக்கிறது?" என அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியனிடம் கேட்டோம். `` எங்கள் கட்சியின் துணைச் செயலாளர் சி.மகேந்திரனுக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரும் நல்லபடியாக குணமாகி வீடு திரும்பிவிட்டார். அதேபோல், கட்சியின் மாநிலப் பொருளாளர் கோவை ஆறுமுகம், மாதர் சங்கத் தலைவர் சுசீலா ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டது. அவர்களும் உடல்நலமாகி வீடு திரும்பிவிட்டனர்.

தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால், எதிர்பாராதவிதமாக சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து, கட்சியின் தோழர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, `மாநில உரிமைகளுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் போராடலாம். அதேநேரம், கொஞ்சம் அறிவியல்பூர்வமாகவும் செயல்பட வேண்டும், சுற்றுப்புற சுகாதாரம் உட்பட மருத்துவத்துறை சொல்லும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். போராட்டம் என வந்தாலும் தனிமனித இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறோம். மற்றபடி, எங்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வரும் வாரத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சி.பி.எம் கட்சியுடன் இணைந்து போராடவிருக்கிறோம்’’ என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

அதேநேரம், சி.பி.எம் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம், அந்தக் கட்சியின் தோழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. `மிகுந்த சோர்வால் துவண்டுபோயிருக்கிறேன்’ என சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவு, தோழர்களைக் கலங்கவைத்தது. இதையடுத்து, கிங் இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டவர், சில நாள்களிலேயே குணமாகி வீடு திரும்பிவிட்டார்.

``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய?" - தோழர் நல்லகண்ணு #VikatanVintage

சி.பி.எம் கட்சியின் மூத்த நிர்வாகியான திருப்பூர் தங்கவேல், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். அதேநேரம், மாநிலக் குழு உறுப்பினர் டி.லட்சுமணன், காஞ்சிபுரம் தீக்கதிர் நிருபர் ராமநாதன் ஆகியோர் கொரானாவால் உயிரிழந்தனர். ``கட்சிக்கான பேரிழப்பாக இது பார்க்கப்படுகிறது’’ என்கின்றனர் சி.பி.எம் வட்டாரத்தில்.

சி.பி.எம் போராட்டம்
சி.பி.எம் போராட்டம்

தென்சென்னை சி.பி.எம் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாக்கியத்திடம் பேசினோம். `` கொரோனா தொற்றால் போராட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பல தோழர்கள் பாதிக்கப்பட்டனர். இதில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் ஜி.ராமகிருஷ்ணனும் தொடர் பயணத்தில் இருந்தனர். இதில், ராமகிருஷ்ணன் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். `போராட்டக்களத்தில் ஒன்றுகூடுவதைக் கூடுமானவரைத் தவிர்த்துவிடுங்கள்' எனக் கூறியிருக்கிறோம். எவ்வளவு கூறினாலும் சிலர் கேட்காமல் கூடிவிடுகின்றனர்" என்றார் ஆதங்கத்துடன்.

தேர்தல் வருகிறதோ இல்லையோ, இடதுசாரிக் கட்சிகளின் போராட்டக்குரல் ஓய்ந்ததில்லை. கொரோனா பெருந்தொற்றிலும் போராட்டத்துக்கு நாள் குறித்துக்கொண்டிருக்கிறார்கள் தோழர்கள்.

அடுத்த கட்டுரைக்கு