Published:Updated:

தீபாவளி தற்காலிகக் கடைகள்... மாநகராட்சி ஏற்பாட்டுக்கு இடையூறு செய்தாரா திமுக எம்.எல்.ஏ நீலமேகம்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திமுக எம்.எல்.ஏ., டி.கே.ஜி.நீலமேகம்
திமுக எம்.எல்.ஏ., டி.கே.ஜி.நீலமேகம்

``நான் கடைகள் அமைக்க இடையூறு செய்வதாகக் கூறப்படும் தகவல் துளியும் உண்மையில்லை. நான் மாநகராட்சிப் பகுதி முழுவதும் துல்லியமாக அறிந்திருப்பதால் மக்களுக்கான சர்வீஸைச் சிறப்பாகச் செய்துவருகிறேன்” என்கிறார் திமுக எம்.எல்.ஏ நீலமேகம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், அதிலிருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையமும், சுமார் 50 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. 95 சதவிகிதப் பணிகள் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் பேருந்து நிலையத்தைத் திறக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் வாடகைக்குவிடுவதற்கு மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் நடவடிக்கை எடுத்தார்.

தஞ்சாவூர்
மாநகராட்சி அலுவலகம்
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம்

இதற்கு திமுக-வின் தஞ்சை மாநகரச் செயலாளரும், தஞ்சை தொகுதி திமுக எம்.எல்.ஏ-வுமான நீலமேகம் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. என்றாலும் சரவணக்குமார் ஓப்பன் டெண்டர் முறையில் கடைகளை வாடகைக்கு விட்டார்.

தஞ்சை: 60 நாள்களில் ரூ.150 கோடி அரசு இடம் மீட்பு! - அதிரடிகாட்டும் மாநகராட்சி ஆணையர்

பேருந்து நிலையம் திறப்பதற்கு தாமதமாவதால் கடை வாடகைக்கு எடுத்த வணிகர்களான அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகக் கடைகளை அமைத்துத் தருவதற்கான ஏற்பாட்டைச் செய்துவருகிறது. குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆட்டோ நிறுத்துவதற்கும், ஆட்டோ ஸ்டாண்டுக்கான போர்டையும் வைத்து, கடைகள் அமைக்க திமுக எம்.எல்.ஏ இடையூறு செய்வதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் சிலரும், வணிகர்கள் தரப்பிலும் பேசப்படுவது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்

இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டு, அவை புதிதாகக் கட்டப்பட்டன. மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கியதால் கடைகளை சொற்ப வாடகைக்கு விடாமல் ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம்விட்டு வாடகைக்கு விட்டார் ஆணையர். ஒரு கடைக்கு டெபாசிட், 12 மாத வாடகை அட்வான்ஸ் தொகையாகப் பெறப்பட்டு அனைத்துக் கடைகளும் வாடகைக்கு விடப்பட்டன. இதன் மூலம் ஒரு கடைக்கு லட்சக்கணக்கில் பணம் பெறப்பட்டதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் வந்தது. இதையடுத்து நிதி நெருக்கடியிலிருந்து தப்பியது மாநகராட்சி நிர்வாகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சூழலில், ``கடை வாடகைக்கு எடுத்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வணிகருக்கும் தீபாவளி பண்டிகைக்கான வியாபாரம் என்பது முக்கியமானது. எனவே சீக்கிரம் நாங்கள் கடைகளைத் திறக்க வேண்டும், பேருந்து நிலையத்தைத் திறந்து கடைகளை ஒப்படையுங்கள்” என வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். `இன்னும் ஐந்து சதவிகிதப் பணிகள் இருப்பதால் உடனடியாகத் திறப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, தீபாவளிக்கு சாலையோரங்களில் கடைகள் போடப்படும். அதேபோல் தற்காலிகக் கடைகள் அமைத்துத் தருகிறோம். அதில் கடைகளை நடத்திக்கொள்ளுங்கள்’ என அதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி நிர்வாகம் செய்தது.

ஆட்டோ ஸ்டாண்டுக்காக வைக்கப்பட்ட போர்டு
ஆட்டோ ஸ்டாண்டுக்காக வைக்கப்பட்ட போர்டு

தொடர்ந்து தகர சீட் அமைத்து, கடைகள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. ``கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் விட்டதிலிருந்தே நீலமேகத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. எனவே, ஆட்டோக்களை மட்டுமே நிறுத்த வேண்டும். கடைகள் அமைக்கக் கூடாது என ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்தியதுடன், அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்டுக்கான போர்டையும் வைத்தனர். இதன் பின்னணியில் நீலமேகம் இருந்துகொண்டு, ஆட்டோ டிரைவர்களைத் தூண்டிவிட்டு ஆட்டோவை நிறுத்த வைத்திருக்கிறார். மாநகராட்சி நிர்வாகத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதைச் செய்கிறார். இதனால் கடைகள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர் சிலர்.

இது குறித்து டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ-விடம் பேசினோம். ``25 வருடங்களுக்கு மேலாக குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டுவருகிறது. யூனியன் கிளப் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு, அந்த இடத்தில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. நான் சி.எம்-ஐ பார்ப்பதற்காக சென்னையில் இருப்பதால், ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என எங்கள் கட்சிக்காரர்கள் சிலரைச் சந்தித்துக் கூறியிருக்கின்றனர்.

தற்காலிகக் கடைகள்
தற்காலிகக் கடைகள்

அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசினர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீஸ், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடைகளுக்கு பின்புறம் ஆட்டோவை நிறுத்திக்கொள்ளவும், ஒரு ஆட்டோ வெளியே வந்து செல்கிற வகையில் வழிவிட்டு கடைகள் அமைக்கவும் யோசனை கூறப்பட்டது. இவை அனைத்துத் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நான் கடைகள் அமைக்க இடையூறு செய்வதாகக் கூறப்படும் தகவல் துளியும் உண்மையில்லை. நான் மாநகராட்சிப் பகுதி முழுவதையும் துல்லியமாக அறிந்திருப்பதால் மக்களுக்கான சர்வீஸைச் சிறப்பாகச் செய்துவருகிறேன். அதன் மூலம் எனக்கென நல்ல பெயரும் உள்ளது. இதை ஏற்க முடியாத எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரே என்மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக இது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்பிவிடுகின்றனர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு