Published:Updated:

கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா..?! - அதிரடித்தாரா பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
News
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தன் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாகக் கசியும் தகவல், தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க-வில் தகவல் தொழில்நுட்ப அணி 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சமூக வலைதளங்களில் அந்தக் கட்சிக்கென கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க மீண்டும் அரியணையைப் பிடிப்பதற்கு இந்தக் கட்டமைப்பும் ஒருவகையில் உதவியது. தி.மு.க சார்புள்ளவர்கள் சமூக வலைதளங்களில் விரவியிருந்தாலும், இவர்கள் ஒருங்கிணைக்கப்படாததால், அ.தி.மு.க-வின் ஆன்லைன் பிரசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர். அந்தச் சூழலில்தான், ஜூன் 2017-ல் தி.மு.க-வின் சார்பு அணிகளில் ஒன்றாகத் தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டது. அணியின் செயலாளராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பங்கள் மூலமாக தி.மு.க-வின் பிரசாரத்தைச் சாமானியர்கள் வரை ஊடுருவச் செய்யும் பணியைக் கட்டமைத்தார் அவர். சமூக வலைதளங்களில் தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவானதால், 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் பிரசாரத்தைக் கச்சிதமாகக் கடைக்கோடி வரை கொண்டு சேர்த்தது அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி. இப்படித் துடிப்புடன் பணியாற்றியவர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பிறகு, சுணக்கமடைந்ததாகக் கட்சியின் தலைமையிலேயே அதிருப்தி நிலவியது. அணியின் செயலாளரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டதால், கட்சிப் பணியில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், தன்னுடைய கட்சிப் பதவியை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்துவிட்டதாகச் செய்திகள் தந்தியடிக்கின்றன.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இது குறித்து தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ``தி.மு.க ஆட்சியைப் பிடித்த பிறகு சமூக வலைதளங்களில் தி.மு.க-வினரின் செயல்பாடு சுருங்கிவிட்டதாக கட்சித் தலைமையிடம் வருத்தம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலடியை இணைய தி.மு.க-வினர் கொடுப்பதில்லை. உதாரணமாக, 'பொங்கல் பரிசுத்தொகையையும், குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வாக்குறுதியையும் தி.மு.க நிறைவேற்றவில்லை' என்று கடந்த ஆறு மாதங்களாக அ.தி.மு.க கூறிவருகிறது. இதற்குத் தக்க பதிலடியை சமூக வலைதளங்களில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி வீரியத்துடன் எந்த பதிலடியும் கொடுக்கப்படவில்லை. ஒரு வருடத்துக்கு முன்னால் இருந்த வேகம் இப்போது இல்லை. சமீபத்தில் ஒவ்வோர் அரசுத் துறைவாரியாக சமூக வலைதளங்களில் வரும் குற்றச்சாட்டுகளை ஆய்ந்தறிந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் அறிக்கையை முதல்வர் அலுவலகத்துக்கு வாரம்தோறும் அனுப்ப வேண்டும். சமூக வலைதளங்களை அவ்வளவு உன்னிப்பாக முதல்வர் அலுவலகம் கண்காணிக்கிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சியினரின் பிரசாரத்துக்கு பதிலடியாக தி.மு.க-வினர் முனைப்போடு செயல்படவில்லை என்பதுதான் கட்சித் தலைமையை வருத்தமடைய வைத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சில நாள்களுக்கு முன்பாக, இது தொடர்பாக தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் பேசியிருக்கிறது கட்சித் தலைமை. 'நிதியமைச்சர் பணிச்சுமையே ஏராளமாக இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நிதிநிலையையே குட்டிச்சுவராக்கி வைத்துவிட்டனர். அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். என்னால் கட்சிப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரியப்படுத்திவிட்டேன். தகுதியான நபர் இருந்தால், என் பதவியில் அமர்த்தி பணியாற்றச் சொல்லுங்கள்' என்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி தலைமையிடம் அளித்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார். இதுவரை அந்தக் கடிதத்தின் மீது தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றனர்.

ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்
ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்

'கட்சிப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை' என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்ததாகக் கூறப்பட்டாலும், அவர் மனதில் சில காயங்களும் இருந்ததாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க ஐடி விங்கைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், "ஐடி-விங்கின் ஆலோசகராக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டதிலிருந்தே பழனிவேல் தியாகராஜனுக்கு வருத்தம்தான். தி.மு.க-வின் எந்த அணிக்கும் ஆலோசகர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகவல் தொழில்நுட்ப அணிக்கு மட்டும் ஆலோசகர் நியமிக்கப்பட்டதை, தன்னை மட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகத்தான் தியாகராஜன் பார்த்தார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குத் தேவையான புள்ளி விவரங்கள் அனைத்தையும் அவர் சேகரித்துவைத்திருந்தார். தொகுதிவாரியாக தி.மு.க வலுவில்லாமல் இருக்கும் இடங்கள், அதை வலுப்படுத்துவதற்கான வியூகங்களை வகுத்திருந்தார். ஆனால், பிரசாந்த் கிஷோரை ஆலோசகராகக் கொண்டுவந்தது தி.மு.க மேலிடம். இதிலிலும் தியாகராஜன் வருத்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க அரியணை ஏறியதும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார் தியாகராஜன். அந்தச் சமயத்தில்தான், மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி தி.மு.க-வுக்கு வந்தார் மகேந்திரன். அவருக்குத் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சமூக வலைதளப் பொறுப்பை மகேந்திரனுக்கும், புள்ளிவிவரங்களை திரட்டித் தரும் பொறுப்பை தியாகராஜனுக்கும் பிரித்து வழங்கியது கட்சித் தலைமை. கட்சிப் பதவியில் தன்னுடைய அதிகாரம் குறைக்கப்பட்டுக்கொண்டே வருவதை தியாகராஜனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அப்போதே, 'கட்சிப் பதவியை ராஜினாமா செய்வது' என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். இந்த நிலையில்தான், ஜனவரி முதல் வாரத்தில் அவரை அழைத்த கட்சி மேலிடம், சமூக வலைதளங்களில் தி.மு.க-வினர் செயல்பாடு குறைந்துவிட்டதாக புகாரெழுப்பியிருக்கிறது. 'இதற்கும் மேல் கட்சிப் பதவியில் நீடிப்பது நல்லதல்ல' என்று முடிவெடுத்த தியாகராஜன், தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சமூக வலைதளங்களில் தி.மு.க-வினர் சரியாகச் செயல்படவில்லை என்றால், அதற்குப் பொறுப்பேற்றுள்ள மகேந்திரனை அழைத்துத்தான் தலைமை கண்டித்திருக்க வேண்டும். தியாகராஜனிடம் கேள்வி கேட்பது ஏன் என்பது புரியவில்லை. தகவல் தொழில்நுட்ப அணியில் மகேந்திரனை உயர்பொறுப்புக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே, கட்சிக்குள் ஒரு பிரிவினர் தியாகராஜனுக்கு மறைமுக நெருக்கடியைக் கொடுக்கின்றனர்" என்றனர்.

மு.க. ஸ்டாலினுடன் மகேந்திரன்
மு.க. ஸ்டாலினுடன் மகேந்திரன்

ஏற்கெனவே தியாகராஜனுக்கும், முதல்வர் குடும்பத்தின் பிரமுகர் ஒருவருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உறவுநிலை இருக்கிறதாம். அந்தப் பிரமுகர் கொடுக்கும் அழுத்தத்தில்தான், தியாகராஜன் தரப்பு உஷ்ணமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ராஜினாமா கடித விவகாரத்தில் இதுவரை தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறது விவரமறிந்த வட்டாரம். "சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தக் கடிதத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை தியாகராஜனை அழைத்து முதல்வர் சமாதானம் பேசினால், ராஜினாமா விவகாரம் அதோடு முடிந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. ஏதோ கோபத்தில் எடுத்த முடிவுதான் இது. இதில் சமாதானம் ஏற்படவே வாய்ப்பு அதிகம்" என்கிறார்கள் அறிவாலயத்தின் மூத்த உறுப்பினர்கள்.

இந்த ராஜினாமா விவகாரம் குறித்து தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். "அப்படி எதுவும் இல்லை. தவறான தகவல்" என்பதோடு முடித்துக்கொண்டார். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் பேச முயன்றோம். "சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால், அமைச்சர் சற்று பிஸியாக இருக்கிறார்" என்று அவர் தரப்பிலிருந்து பதில் வந்தது. இந்த ராஜினாமா செய்தி அறிவிப்பாக வெளிவந்தால், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியில் 'பிரளயம்' ஏற்படப்போவது என்னவோ நிச்சயம்.