Election bannerElection banner
Published:Updated:

வில்லிவாக்கம்: பள்ளி நிலத்தை ஆக்கிரமித்தாரா அ.தி.மு.க வேட்பாளர்?! -விவகாரத்தை கையில் எடுத்த திமுக

ஜே.சி.டி.பிரபாகர்
ஜே.சி.டி.பிரபாகர்

தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில் வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் மீது பள்ளி நிலத்தை ஆக்கிரமித்ததாக தி.மு.க செய்யும் பிரசாரத்தினால் அனலாகக் கொதிக்கிறது வில்லிவாக்கம் தொகுதி.

பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதால், இந்த நேரம்தான் வாக்காளர்களின் எண்ணங்களை மாற்றும் நேரம் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறது தி.மு.க., இதனடிப்படையில் எதிர் வேட்பாளரின் குற்றச்செயல்களை மக்களிடம் எடுத்துச்சென்று வாக்கு சேகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரின் மைனஸ் பாயிண்ட்களைச் சொல்லி பிரசாரம் செய்கிறார் தி.மு.க வேட்பாளர் வெற்றியழகன்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், “2011 முதல் 2016 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் இதே வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஜே.சி.டி.பிரபாகர். அப்போது, வில்லிவாக்கத்தில் இயங்கி வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிங்காரம்பிள்ளை அரசு உதவிபெறும் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். சுமார் பன்னிரெண்டரை கிரவுண்ட் அளவுக்கு மிகப்பெரிய பள்ளியாக இருந்தது. ஏரி புறம்போக்கு நிலமான அதனை எவராலும் பத்திரப்பதிவு செய்ய முடியாது.

எனினும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது பினாமிகள் பெயரில் அப்பள்ளியின் முக்கால்வாசி நிலத்தை பத்திரப்பதிவு செய்து, அதில் பெரிய காம்பிளக்ஸ் உள்ளிட்ட கட்டடங்களைக் கட்டிவிட்டார் பிரபாகர். பள்ளி இருப்பதே தெரியாத வகையில் செயல்பட்டு வருகிறது. பிரபாகரும், இன்னும் சிலரும் சேர்ந்துதான் பள்ளி நிலத்தை ஆக்கிரமித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. பிரபாகரின் ஃபார்ச்சூனர் கார் தினமும் பள்ளி இடத்தில் கட்டப்பட்டுள்ள காம்ப்ளக்ஸில் நிற்பதே அவர் இதில் சம்மந்தப்பட்டதற்கு ஆதாரம்.

பிரசாரத்தில் வெற்றியழகன்
பிரசாரத்தில் வெற்றியழகன்

இவர் மட்டும் மீண்டும் எம்.எல்.ஏ-வாக வந்தால் பலருடைய நிலம் சூறையாடப்படும் என்பதை பிரசாரத்தில் வெற்றியழகன் பேசி வருகிறார். மேலும், தான் எம்.எல்.ஏ-வானதும் அப்பள்ளியின் இடத்தை மீட்டுக்கொடுப்பதாகவும் உறுதி கொடுக்கிறார் வெற்றி. இதுமட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் பெண்கள் கல்லூரி இல்லாத குறையைப்போக்க அயனாவரத்தில் புதிய மகளிர் கல்லூரியை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார்” என்றனர். வெற்றியழகனின் இந்த ’அட்டாக் பிரசாரம்’ தொகுதிக்குள் நல்ல ரெஸ்பான்ஸையும் கொடுத்து வருகிறது.

இதுகுறித்து அ.தி.மு.க வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் பேசியபோது, “பள்ளி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதற்கும், பிரபாகருக்கும் எந்த வித நேரடித் தொடர்பும் இல்லை. இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதால் மேற்கொண்டு இதுபற்றி பேச விரும்பவில்லை. இதை மையமாக வைத்து தி.மு.க செய்யும் பிரசாரம் மக்களிடம் எடுபடாது என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. இதற்கு தக்க பதிலடிகளை நாங்களும் கொடுத்தே வருகிறோம்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு