Published:Updated:

``யாரையும் `ஒழிக' கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா!" - புதுக் கட்சி தொடங்கிய சிவாஜி! #VikatanVintage

மெயின் ஹாலில் சிவாஜி தன் மகன் ராம்குமாருடன் அமர்ந்திருந்தார். சிவாஜி மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாகத் தங்கள் படைகளுடன் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ 'தமிழக முதல்வர் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் எழுப்பி மாலை போட்டுவிட்டுச் சென்றார்கள்

சிவாஜி
சிவாஜி

கடைசியில், சிம்மக் குரலோன் புதுக் கட்சி தொடங்கியேவிட்டார்!

பிப்ரவரி மாதம் 10-ம் தேதி சென்னை - தி.நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான 'பிள்ளை’கள் கூடினார்கள்.

தொடக்க நாளன்று சிவாஜி மிகவும் டென்ஷனாகவே காணப்பட்டார். காரணம் - கட்சியின் பெயர் (தமிழக முன்னேற்ற முன்னணி)கூட 10-ம் தேதி காலை 10 மணி வரை முடிவாகாமல் இருந்ததுதான்!

''சிவாஜிக்கு எந்தப் பதவியும் தராமல் அலட்சியப்படுத்தி, அவர் எதிர்பார்ப்புகளை நிராகரித்தே வந்தது இந்திரா காங்கிரஸ். இந்த நிலையில் வேறு கட்சிக்கு உடனே போவது என்பது கௌரவக் குறைச்சல். எனவேதான், சிவாஜியைத் தனிக் கட்சி ஆரம்பிக்க ஆர்.எம்.வீ. வற்புறுத்தினார். இதனால், எதிர் வரும் தேர்தலில் இ.காங்கிரஸுக்குத் தேர்தல் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் போகலாம். சிவாஜி மன்ற ரசிகர்களுக்கு மட்டும்தான் கொடி கட்டவும், கூட்டத்துக்கு ஆள் திரட்டவும் தெரியும் என்பது மேலிடம் கவனிக்க மறந்த விஷயம். ஆனால், ஆர்.எம்.வீ. அதை மறக்காமல் செயல்பட்டார்...'' என்று நம்மிடம் சொன்னார் ஜானகி கோஷ்டி ஆதரவாளர் ஒருவர்.

ஆனாலும், புதுக் கட்சித் தொடங்க சிவாஜி லேசில் உடன்படவில்லை. அவரை எப்படியும் சம்மதிக்கவைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், 'தமிழ் தேசம்’, 'தமிழர் காங்கிரஸ்’ 'சிவாஜி காங்கிரஸ்’, 'தமிழக முன்னேற்றக் கழகம்’ என்று சுமார் 50 பெயர்களை சிவாஜியின் ஆதரவாளர்கள் தேர்ந்து எடுத்து அவர் முன்வைத்தார்கள். ''ஏம்ப்பா கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே, இவ்ளோ வேகமா செயல்படறீங்களே... இந்த வேகம் கடைசி வரை இருக்குமாப்பா?'' என்று கேட்டார். தொடர்ந்து, ''எந்தக் காரணத்தைக்கொண்டும் காங்கிரஸ் பெயரை உபயோகப்படுத்த வேண்டாம். 'தேசியம்’கிற வார்த்தை வர்ற மாதிரி ஒரு பேரைத் தேர்ந்தெடுங்க...'' என்று சொன்னார். ஆனால், 'தேசியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த அனுமதி கிடைக்காது என்ற தகவல் வந்தது. கடைசியில் 'தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற பெயர் சிவாஜிக்குப் பிடித்துவிட்டது.

கட்சிக் கொடியின் நிறம், அதன் பொருள், கொள்கைபோன்ற விஷயங்கள், வெங்கட்ரமணன், இளங்கோ (முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்) ஆகியோர் அடங்கிய ஒரு குழு முடிவு செய்து சிவாஜியின் ஒப்புதலைப் பெற்றது.

''பாரதப் பிரதமர் டாக்டர் சிவாஜி...'' என்று உணர்ச்சிகரமாய்க் குரல் கொடுக்க... ராம்குமார், தளபதி சண்முகம், ராஜசேகரன் உட்பட எல்லோருமே, ''வாழ்க...'' என்றனர்.

சிவாஜி மூலம் எம்.எல்.ஏ. பதவி பெற்றவர்கள் சிலர் இந்தப் புதுக் கட்சியில் சேராமல் நழுவியது குறித்து சிவாஜி வருத்தப்பட்டார். ''நம்பிக்கைத் துரோகம் பல ரூபத்திலே தொடருதேப்பா...'' என்றார்.

``யாரையும் `ஒழிக' கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா!" - புதுக் கட்சி தொடங்கிய சிவாஜி! #VikatanVintage

அருகில் இருந்த சைதை துரைசாமி, ''நாங்க இருக்கோம்ணே... கவலைப்படறதை விட்டுட்டுத் தலைவருக்குரிய பந்தாவைக் காட்ட ஆரம்பிங்கண்ணே..'' என்றார் சிவாஜியிடம்.

இதுபோல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையேதான் புதன்கிழமை தொடக்க விழா நடந்தது. சாலையின் முனையில் பிரமாண்டமான கட்-அவுட். அதில்கூடக் கவனமாக சிவாஜியின் வேஷ்டியில் இருந்த காங்கிரஸ் பார்டரை நீக்கி இருந்தார்கள்! வீட்டுக்கு வெளியே பெரிய பந்தலும், வீட்டுத் தோட்டத்தில் ஷாமியானாவும் போட்டு அலங்காரம். காலை 8 மணியில் இருந்தே, ரசிகர்களின் கூட்டம். வந்தவர்கள் எல்லோருமே மிகவும் அந்நியோன்யமாக, சிவாஜி வீட்டின் எல்லா அறைகளுக்கும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள்.

மெயின் ஹாலில் சிவாஜி தன் மகன் ராம்குமாருடன் அமர்ந்திருந்தார். சிவாஜி மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாகத் தங்கள் படைகளுடன் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ 'தமிழக முதல்வர் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் எழுப்பி மாலை போட்டுவிட்டுச் சென்றார்கள். திருநெல்வேலி ரசிகர் மன்றத்தினர் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் போட, ராம்குமார் அவர்களை அருகே அழைத்து, ''இன்னும் என்னங்க... அண்ணன் சிவாஜிங்கிறீங்க... தலைவர் சிவாஜின்னு சொல்லுங்க...'' என்று உத்தரவிட்டதும், அடுத்து வந்தவர்கள் எல்லாம் 'தலைவர்’ கோஷமே எழுப்பினார்கள்.

புதுக் கட்சி உருவாக்கித் தலைவரான சிவாஜி, அன்றே வாரிசையும் அறிமுகப்படுத்திவிட்டாரா? அப்பாவுக்கு அருகில் இருந்த ராம்குமாரிடம், ''என்ன... நீங்களும் அரசியல் பிரவேசமா?'' என்றதும், ''நோ... நோ... அப்பாவுக்கு ஹெல்ப்பா இன்னிக்கு மட்டும்... அதுவும் இந்த புது அனுபவத்தை என்ஜாய் பண்றதுக்காகத்தான்...'' என்று சொல்லிவிட்டு, ''இதுல ஒண்ணும் தப்பில்லையே...'' என்று 'சிவாஜி’ பாணியிலேயே கேட்டார்.

ஒரு ரசிகர் வெகு ஆவேசமாய் வந்து தன் கையை பிளேடால் கீறி ரத்தம் தொட்டு, ''பாரதப் பிரதமர் டாக்டர் சிவாஜி...'' என்று உணர்ச்சிகரமாய்க் குரல் கொடுக்க... ராம்குமார், தளபதி சண்முகம், ராஜசேகரன் உட்பட எல்லோருமே, ''வாழ்க...'' என்றனர். தொடர்ந்து அந்த ரசிகர், ''துரோகி ராஜீவ் காந்தி...'' என்று கத்த, சிவாஜி மிகச் சத்தமாய்... ''வாழ்க...'' என்றார். (பலே!) தொடர்ந்து, ''எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன்... நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் ரொம்ப உயர்வா இருக்கணும். படிச்சவங்களும் பாராட்டற மாதிரி இருக்கணும். யாரையும் 'ஒழிக’ கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா... அதுவும் மறைந்த அந்த அன்னையோட பிள்ளையை - என்ன இருந்தாலும் ரொம்ப பெரிய பதவியிலே இருக்கறவரை, அப்படி சொல்லக் கூடாது. அரசியல்லே நாமளாவது நாகரிகத்தோட, நாணயத்தோட, நல்லோரோட கைகோத்து நடப்போம்...'' என்றார் கம்பீரமாக!

ஒரு மூதாட்டி - சுமார் 80 வயது இருக்கும். ''அப்பா... நானொரு அநாதை... அந்த மவராசன் - எம்.ஜி.ஆரு இருந்த வரைக்கும் எனக்குக் கொள்ளி போட வருவாருன்னு நெனைக்காட்டியும், எம் புள்ளையா நெனைச்சிருந்தேன்... இனி நீதாம்பா எம் புள்ளை...'' என்று அழுதபடியே ஏதேதோ பேச, சிவாஜி எழுந்து அந்த மூதாட்டியின் காலில் விழுந்து, ''உங்க ஆசீர்வாதம் கிடைக்கவே எனக்குக் குடுத்துவெச்சிருக்கணும். உங்க பிள்ளையாவே ஏத்துக்கிட்டீங்களே... என் பாக்கியமம்மா... பாக்கியம்!'' என்றவர் உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, ''சாப்பிட்டீங்களாம்மா...'' என்று கேட்டு, சாப்பிட ஏற்பாடு செய்து அனுப்பினார்!

அடுத்து சிறுவர்கள் நான்கைந்து பேர் வந்து மாலை போட்டுவிட்டு, ''அண்ணே... எங்க ஏரியா முழுக்க உங்க பக்கம்தாண்ணே...'' என்றார்கள். சிவாஜி சிரித்தபடியே, ''உங்க ஏரியான்னா? உங்க வயசுப் பிள்ளைகளா? ஹூம்... உங்க ஆதரவு இருந்தா, டிஸ்ட்ரிபியூட்டருக்குத்தான் லாபம்... எனக்கு இல்லையேப்பா. ஆனா, பெரியவங்க சொல்றபடி கேட்டு நடக்கணும்... படிக்கிறீங்களா?'' என்று விசாரித்து, தட்டிக்கொடுத்து அனுப்பினார்.

சிவாஜி
சிவாஜி

காலை 10 மணியில் இருந்தே காத்திருந்த நிருபர்களில் ஒருவர், ''எப்போ சார் கட்சியைத் தொடங்கப்போறாரு...?'' என்றார். அதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், ''கொஞ்சம் பொறுங்க சார்... இன்னிக்குப் புதன்கிழமை... பன்னிரெண்டு ஒன்றரை ராகு காலம். அது முடிஞ்சதும் கரெக்டா 1.35-க்கு ஆரம்பிச்சிடலாம். நல்ல காரியத்தை நல்ல நேரத்துலே பண்ணுவோமே...'' என்று சமாதானப்படுத்தினார்.

சரியாக 1.40 மணிக்குக் கை கூப்பியபடியே மேடைக்கு அருகே வந்த சிவாஜி, பிள்ளையார் கோயிலை நமஸ்கரித்துவிட்டு மகன் ராம்குமாருடன் மேடை ஏறினார். சிவாஜியை வாழ்த்தும் கோஷமும், பட்டாசு வெடிக்கும் கோஷமுமாகத் தூள் கிளம்பியது.

முதலில், தளபதி சண்முகம் புதிய கட்சியின் தலைவராக சிவாஜியை முன்மொழிந்தார். அதை ஒவ்வொரு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்களும் வழிமொழிந்தார்கள். பலரும் தம் பேச்சின் முடிவில் 'ஜெய்ஹிந்த்’ என்று சொன்னார்கள். சண்முகம், ''பழக்கதோஷம்... லேசிலே போகுமா...'' என்று சொல்லிச் சிரித்தார்.

கடைசியில் சிவாஜி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டு, புதுக் கட்சி ஆரம்பித்ததற்கான அறிக்கையை வாசித்து முடித்தார்.

மேடையைவிட்டு இறங்கும் சமயம் ஒரு தயாரிப்பாளர் சிவாஜியின் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே, ''பூஜையைப் பிரமாதமா போட்டிருக்கீங்க அண்ணே...'' என்றார். சிவாஜி தனக்கே உரிய பாணியில், ''வாஸ்தவம்தான்... வழக்கப்படி நம்ம பிள்ளைங்க காப்பாத்துவாங்கங்கற நம்பிக்கைதான்...'' என்றார்!

காப்பாற்றுவார்களா?

- வி.குமார் | ஜூனியர் விகடன் 17.2.88 இதழில் இருந்து.

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2MuIi5Z