Published:Updated:

எடப்பாடி இமேஜ் பூஸ்ட், ஸ்டாலின் லைவ், தொழில்நுட்ப கிங் கமல்... இணையம் வழி மக்களை நெருங்கும் கட்சிகள்

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

ஸ்மார்ட்டான வழியில் மக்களிடம் தங்கள் பிரசாரத்தைக் கொண்டு சேர்க்கும் தொழில்நுட்ப வசதியைக் கட்சிகள் பெரிதும் விரும்புகின்றன. கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும் டிஜிட்டல் வடிவிலான பிரசாரத்துக்கு முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

எடப்பாடி இமேஜ் பூஸ்ட், ஸ்டாலின் லைவ், தொழில்நுட்ப கிங் கமல்... இணையம் வழி மக்களை நெருங்கும் கட்சிகள்

ஸ்மார்ட்டான வழியில் மக்களிடம் தங்கள் பிரசாரத்தைக் கொண்டு சேர்க்கும் தொழில்நுட்ப வசதியைக் கட்சிகள் பெரிதும் விரும்புகின்றன. கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும் டிஜிட்டல் வடிவிலான பிரசாரத்துக்கு முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

`தலைவா...’, என நாடி நரம்புகள் புடைக்க, கையில் கட்சிக் கொடியை பிடித்துக்கொண்டு மரத்தின் உச்சியிலிருந்து கத்தும் தொண்டனின் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று அப்படி கத்துவதற்குத் தொண்டனும் இல்லை, கட்சிகளும் அதை விரும்புவதில்லை. ஸ்மார்ட்டான வழியில் மக்களிடம் தங்கள் பிரசாரத்தை கொண்டு சேர்க்கும் தொழில்நுட்ப வசதியை கட்சிகள் பெரிதும் விரும்புகின்றன. கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும் டிஜிட்டல் வடிவிலான பிரசாரத்துக்கு முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அன்புமணி
அன்புமணி

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, எல்.இ.டி. திரையில் கட்சியின் பிரசார வாக்குறுதிகள் மின்னலடிக்க, காதில் மைக்ரோபோனை மாட்டியபடி, டிப் டாப் உடையில் `அன்புமணியாகிய நான்...’ என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியபோது தமிழகமே புதுமாதிரியாக திரும்பிப் பார்த்தது. அதுவரை பழைய டெம்ப்ளேட்டில் பிரமாண்ட பந்தல்கள், கொடி - தோரணங்கள், `வாழும் காவியமே, எட்டாம் அதிசயமே’ போஸ்டர்கள் என நடைபெற்று வந்த கட்சி மாநாடுகளை, டிஜிட்டல் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது அன்புமணியின் பிரசார யுத்தி. இந்த யுத்திக்கு புதுவடிவம் கொடுத்து, புதிய டீம்களை இரண்டு கழகங்களும் களமிறக்கியுள்ளன. இதில் ரஜினியின் மகள் சவுந்தர்யாவின் டீமும் இணைந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியலை மாற்றிய கொரோனா

ஏற்கெனவே சமூக ஊடகங்களில் பலரையும் சென்று சேர ஆரம்பிக்கப்பட்ட இந்த வடிவத்தை, இன்னும் அதி தீவிரமாக பின்பற்ற வைத்திருக்கிறது கொரோனா. கொரோனா சமூகத் தொற்றாகப் பரவுவதை தடுக்க, வரும் மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் சில மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கப் போகிறது. வரும் செப்டம்பர் மாதம் வரையில் புதிய திருமண புக்கிங் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாமென திருமண மண்டபங்களை சென்னை, கோவை, மதுரை உட்பட பல மாநகராட்சி, நகராட்சிகளின் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பெருங்கூட்டமாக மக்கள் திரள்வதற்கு இந்த ஆண்டு இறுதிவரை கட்டுப்பாடுகள் இருக்கும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகள் அரசியல் கட்சிகளின் இயக்கத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளன.

144 தடை உத்தரவு
144 தடை உத்தரவு

144 தடை உத்தரவால், புதிய பொதுச் செயலாளராக துரைமுருகனை தேர்ந்தெடுப்பதற்கு தி.மு.க நடத்த வேண்டிய பொதுக்குழு தள்ளிப் போகிறது. வழக்கமாக டிசம்பரில் நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழுவும் இம்முறை நடைபெறுவது சந்தேகம் தான். புதிய கட்சி ஆரம்பித்து, வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த ரஜினியின் திட்டமும் மாறியுள்ளது. இந்த மாற்றம் அரசியல் கட்சிகளின் பிரசார வியூகத்திலும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 2021-ல் சட்டமன்றத் தேர்தல் என்ற நிலையில் முன்னெடுக்க வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு இந்தக் கூட்டம் கூடுவதற்கான தடை தாமதத்தை ஏற்படுத்துகிறது.

இணையமே துணை

ஒரு வட்டச் செயலாளரைப் பிடித்து, வேனுக்கு 5000, ஆளுக்கு ஒரு குவாட்டர், ஒரு பிரியாணி, கையில் 300 ரூபாய் என ஆயிரக்கணக்கில் ஆட்களை ரெடி பண்ணி, கட்சிக் கூட்டத்துக்கு அழைத்துவரும் பார்முலாவை எல்லாம் கொரோனா துவம்சம் செய்துவிட்டது. அருகில் வந்தாலே கொரோனா தொற்றிக் கொள்ளும் என்கிற பீதியால், எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சி மாநாடுகள், பிரசாரக் கூட்டங்களை நடத்துவதே கேள்விக்குறிதான். இதற்காக இணையவழி பிரசாரத்தை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 50 முதல் 100 ஸ்மார்ட் போன்களாவது இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோரிடம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் இருக்கின்றன. இவர்கள்தான் கட்சிகளின் டார்க்கெட். இந்த ஸ்மார்ட்போன்களுக்குள் ஊடுருவிவிட்டால் போதும், மொத்த கிராமத்துக்கும் பிரசாரத்தைக் கொண்டு சேர்த்துவிடலாம் எனத் திட்டமிடுகின்றனர். டிவி விளம்பரங்கள், நகரும் எல்.இ.டி. திரை வாகனங்கள் என மற்ற பிரசார வியூகங்களை எல்லாம் வகுத்துள்ளனர்.

மிதுன் டீம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் பூஸ்ட் செய்யும் பணியை மேற்கொள்வது அவரின் மகன் மிதுன்தான். `மக்கள் நாயகன், சாமானியர்களின் முதல்வர், விவசாயி முதல்வர்’ என அடைமொழிகளை உருவாக்கி, அதை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து எடப்பாடியின் இமேஜை பெரிய பிம்பமாக காட்டுவதற்கு ஒரு பெரும்படையையே மிதுன் வைத்திருக்கிறார். முதல்வரின் இரண்டு ட்விட்டர் கணக்குகளையும் மேற்பார்வையிடுவது இவர்தான்.

மிதுன்
மிதுன்

பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சியின் சர்வே வல்லுநர் பிரதீப் பண்டாரியுடன் மிதுன் தரப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இதன்படி, அ.தி.மு.க ஆட்சி, எடப்பாடியின் நிர்வாகம் குறித்து பொதுமக்களிடம் பண்டாரியின் டீம் சர்வே எடுத்துள்ளனர். இம்முடிவுகளில், நகர்ப்புறங்களில் எடப்பாடியின் இமேஜ் கூடியிருப்பதாகவும் ஆட்சிக்கு எதிரான மனநிலை கிராமப்புறங்களில் சற்று தணிந்திருப்பதாகவும் ரிசல்ட் கிடைத்துள்ளது. இதை மூலதனமாக வைத்து, வரும் தேர்தலுக்குள் சரிந்திருக்கும் அ.தி.மு.க-வின் இமேஜை தூக்கி நிறுத்த மிதுன் வியூகம் வகுத்துள்ளார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் மட்டுமல்லாமல், ஹலோ, இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் என அத்தனை சமூக வலைதளங்களையும் ஆக்கிரமிப்பது, வாரத்துக்கு ஒரு ஹேஷ்டேக்கில் தி.மு.க-வை வம்புக்கு இழுத்து டிரெண்ட் செய்வது, 15 நாள்களுக்கு ஒருமுறை எடப்பாடியின் நிர்வாகத்தைப் பாராட்டி ஒரு ஹேஷ்டேக்கில் டிரெண்ட் செய்வது என ஒரு டஜன் ஐடியாக்களைப் போட்டு வைத்துள்ளனர்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

கிராமத்துக்கு 5 பேர் வீதம், தமிழகத்திலுள்ள சுமார் 12,500 கிராமங்களிலும் 62,500 ஆட்களை தேர்வு செய்கிறது மிதுனின் டீம். அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்தவர்களான இவர்கள் மூலம், கிராமத்துக்கு ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, தினமும் அ.தி.மு.க அரசின் சாதனைகளை எளிமையான வீடியோக்கள் வடிவில் பரப்ப திட்டமிட்டுள்ளனர். ஸ்டாலினைக் கிண்டலடிக்கும் வீடியோக்களை வடிவமைக்கவே ஒரு குழு தனியாக செயல்படுகிறதாம்.

தி.மு.க-வில் `நமக்கு நாமே’ திட்டத்தை வகுத்துக் கொடுத்த சுனில், அக்கட்சியில் இருந்து கழன்று கொண்டது நினைவிருக்கலாம். கர்நாடக துணை முதல்வர்களில் ஒருவரான அஸ்வத் நாராயணனுக்குப் பணியாற்ற கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு சென்ற சுனில், மூன்றே மாதத்தில் அந்த ஒப்பந்தத்தையும் முறித்துக்கொண்டு அங்கேயிருந்தும் கிளம்பிவிட்டார். இப்போது மிதுனுடன் கைகோத்திருக்கும் சுனில், கடந்த மாதத்திலிருந்து எடப்பாடி பழனிசாமிக்காக தேர்தல் பணியாற்ற துவங்கிவிட்டாராம்.

சபரீசன் டீம்

ஸ்டாலின் மருமகன் சபரீசன்
ஸ்டாலின் மருமகன் சபரீசன்

சபரீசனின் நியமித்துள்ள பிரசாந்த் கிஷோரின் டீம் களமிறங்குவதற்கு முன்னரே, பெரிய சர்வேக்களை நடத்தி பக்கா ப்ளானோடு வேலையை ஆரம்பித்துள்ளது. `ஒன்றிணைவோம் வா’ என ஸ்டாலின் ஆரம்பித்திருக்கும் பிரசாரம் கூட இந்த டீம் கொடுத்த ஐடியாதான். வீடியோ கால் ஆலோசனைகள், நிர்வாகிகளின் வொர்க் ஷீட், டிஜிட்டல் விளம்பரங்கள் என தூள் கிளப்புகிறது சபரீசன் நியமித்த ஐபேக் டீம்.

எழுத்தாக இல்லாமல், வீடியோவாக ஒருவிஷயம் கொண்டு சேர்க்கப்படும்போது மக்களிடம் வரவேற்பு அதிகம் கிடைப்பதாக கூறுகிறது ஐபேக் டீம். இதற்காக, ஸ்டாலினின் பழைய பிரசார பரப்புரைகளை சிறுசிறு வீடியோக்களாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கி, தேர்தல் வரையில் அதை தக்க வைக்கும் பணியைச் செய்ய தனி டீம் வேலை செய்கிறது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

கிராமம்தோறும் எல்.இ.டி திரை வாகனங்கள் மூலமாக ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் ஸ்டாலினை லைவாக பேசவைக்கும் மெகா திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளனர். கையில் ஆப்பிள் லேப்டாப், ஹெட்செட்டில் புரியாத இந்திப் பாட்டு, நுனிநாக்கு ஆங்கிலம் என இவர்கள் சுற்றித் திரிவது அறிவாலயத்து கரைவேட்டிகளுக்குப் புதிதாக இருந்தாலும், வருங்காலம் இதுதான் என அவர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

டி.டி.வி தினகரன் டீம்

இன்றுள்ள அரசியல் கட்சிகளில் 25 வயதுக்கு கீழானவர்களை அதிகம் உறுப்பினராக வைத்திருப்பது டி.டி.வி தினகரன்தான். டி.டி.வி-யின் அறிக்கை வெளிவந்த நிமிடத்தில், அதை போட்டோ கார்டுகளாக வடிவமைத்து வைரலாக்கி விடுகின்றனர். இதில் அ.ம.மு.க-வின் ஐ.டி. விங் பங்களிப்பைவிட, தனிநபர்களின் ஆர்வமே மிக அதிகம். சமூக வலைதளங்களில் இவர்களின் எண்ணிக்கை தி.மு.க., அ.தி.மு.க-வை விட குறைவு என்பதால், தேசிய அளவில் டிரெண்ட் செட் செய்வது சற்று சவாலான காரியமாக உள்ளது.

சவுந்தர்யா டீம்

சவுந்தர்யா ரஜினிகாந்த் 
சவுந்தர்யா ரஜினிகாந்த் 

திராவிடக் கட்சிகள் ஒருபுறம் ஆள் பலம், படை பலத்தை திரட்டிவைத்திருக்கும் நிலையில், அரசியலில் குதிக்கப் போகும் தன் அப்பா ரஜினிகாந்துக்காக சவுந்தர்யாவும் ஒரு டீம்மை உருவாக்கியுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் என சுமார் 20 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில் செய்யப்படும் கொரோனா நிவாரணப் பணிகள் ஒவ்வொன்றும் மன்றத் தலைமைக்கு தினமும் ரிப்போர்ட் கார்டுகளாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதையெல்லாம் தொகுத்து, டேட்டா மேப் ஒன்றை சவுந்தர்யா உருவாக்கியுள்ளார்.

எந்தெந்த தொகுதியில், எந்தெந்த வார்டு, கிராமங்களில் மன்றத்தின் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன. இவற்றின் வாக்காளர்கள் தொகை எவ்வளவு, அவர்களின் தேவைகள் என்ன என்பது போன்ற தகவல்களை எல்லாம் திரட்டி வைத்துள்ளார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பட்சத்தில், இந்த டேட்டா பெருமளவு உதவும் என்பது சவுந்தர்யாவின் திட்டம். கூட்டம் போட்டு மாநாடு எல்லாம் நடத்த தேவையில்லை, ரஜினி பிரசாரம் செய்யும் வீடியோக்களை வைரலாக்கினாலே போதும், ஓட்டாக மாற்றிவிடலாம் என கணக்குப் போடுகிறது அவரது டீம்.

டிஜிட்டல் கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இப்போதுள்ள அரசியல் தலைவர்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அறிவு அதிகமிருக்கும் தலைவர் என்றால் அது கமல்ஹாசனாகத்தான் இருக்கக்கூடும். இது அவரது மக்கள் நீதி மய்யத்துக்கு பெரும் பலம் என்று உற்சாகத்தில் இருக்கிறது கமலின் வட்டாரம். திரைத்துறையிலேயே பல வருடங்களுக்கு முன்பே புதுப்புது தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த தங்கள் தலைவர், அரசியலும் மற்றவர்களைவிட முன்பே இணையம் மூலம் பல தொழில்நுட்பங்களின் உதவியுடன் ரேஸில் முந்துவார் என்பது அவர்கள் கணக்கு. சமீபத்தில் வீடியோ கால் மூலமாக விஜய் சேதுபதியுடன் கமல்ஹாசன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தனக்குள்ள இந்த தொழில்நுட்ப திறனை வைத்து, மக்கள் நீதி மய்யத்தை, இதுவரை எந்தளவுக்கு மக்களிடம் கமல்ஹாசன் கொண்டு சென்றார் என்பது கேள்விக்குறிதான். ஆனால், இந்தக் கொரோனா காலகட்டத்தில் இணையத்தின் பயன்பாட்டைப் பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டிருக்கும்போது, இனி அவர் போடும் திட்டங்கள் என்னவாக இருக்கும் எதுபதை அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு அஸ்திவாரமே தெருமுனைக் கூட்டங்களும் மக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் பிரசார வியூகமும் தான். இதைக் கொரோனா நொறுக்கியிருக்கும் நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு இணையாக இணையவழி பிரசாரத்தை அவரது கட்சியால் முழுவீச்சாக செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு `ஏற்கெனவே அண்ணனின் வீடியோக்கள் வைரலாவது வரலாறு’ என்கிறார்கள் தம்பிகள். சரிதான்.. ஆனால், என்ன வகையில் வைரலானது என்பது விவாதத்துக்குரியது. இருந்தாலும் இனி இணையவழியில் மக்களைச் சென்றடைவதுதான் எதிர்காலத்தில் அதிக நன்மை பயக்கும் என்றால் அதற்கு எப்போதும் தயார் என்கிறது தம்பிகள் சூழ் இளைஞர் பட்டாளம்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கும் கணிசமான எண்ணிக்கையில் சமூக வலைதளங்களில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்போது பெருமளவில் அவர்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. தேவைப்படும்போதுமட்டும் இரண்டு திராவிடக் கட்சிகளையும் திட்டிவிட்டு அமைதியாகிவிடுகின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க கைவசம் எடுத்துள்ள இந்த இணையவழி பிரசாரத் திட்டத்திற்கு செலவழிக்கும் பணம், தேவைப்படும் ஆட்கள், தொழில்நுட்ப வசதி மற்ற சிறுகட்சிகளுக்கு வாய்ப்பது கடினம். ஒரு புதிய பிரசார கட்டமைப்பை தமிழகம் பார்க்கப் போகிறது. யார் வலு உள்ளவர்கள், யார் தப்பி பிழைக்கப் போகிறார்கள் என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.