Published:Updated:

` சசிகலா வந்துவிட்டால், அ.ம.மு.க, அ.தி.மு.க-வோடு இணையுமா?' - கும்பகோணத்தில் பதில் கொடுத்த தினகரன்

யாரோ ஒரு சிலர், சுயநலத்துக்காக இந்தக் கட்சியை விட்டு வெளியேறுவதால், இந்த இயக்கத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

T.T.V.DINAKARAN
T.T.V.DINAKARAN ( ம.அரவிந்த் )

` அ.ம.மு.க-வில் யாரோ ஒரு சிலர், சுயநலத்துக்காக கட்சியை விட்டு வெளியேறுவதால், இந்த இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் என்றுமே ஏற்படாது' என கும்பகோணத்தில் பேசினார், தினகரன்.

T.T.V.DINAKARAN
T.T.V.DINAKARAN

கும்பகோணத்துக்கு இன்று வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, `` அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு, மேலும் மேலும் வளர்ந்துவருகிறது. காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இயக்கம் இது.

யாரோ ஒரு சிலர், சுயநலத்துக்காக இந்தக் கட்சியை விட்டு வெளியேறுவதால், இந்த இயக்கத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வருங்காலத்தில், அ.ம.மு.க தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக மாறி, சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். யாரோ ஒருவர் கட்சியில் இருந்து விலகுவதால், அவரால் பாதிக்கப்பட்ட பலர் கட்சியில் இணைந்து புதிய ரத்தத்தைப் பாய்ச்சுகிறார்கள்.

T.T.V.DINAKARAN
T.T.V.DINAKARAN

புகழேந்தியின் கருத்துக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவர், அ.ம.மு.க-வில் இருக்கிறாரா இல்லையா என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மத்திய உள்துறை அமைச்சர், இந்தி மொழியை இந்தியா முழுவதும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் அவருடைய கருத்தைக் கூறியுள்ளார். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, 1967-ம் ஆண்டு இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.

தமிழகத்தில் யாரும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தித் திணிப்புக்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்தியை விரும்பிப் படித்தால் சரிதான். மாணவர்கள் விரும்பிப் படித்தால் யாரும் அதைத் தடுக்கப் போவதில்லை. இந்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

T.T.V.DINAKARAN
T.T.V.DINAKARAN

மத்திய அரசு, தமிழகத்தில் இந்தியைத் திணிக்காது என நம்புகிறோம். சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு, அ.தி.மு.க–அ.ம.மு.க இணைவது தொடர்பான யூகங்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது" என்றார்.