Published:Updated:

`தங்க.தமிழ்ச்செல்வனுக்கு ஆடியோ; புகழேந்திக்கு வீடியோவா?'- என்ன சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

அன்று தங்க.தமிழ்ச்செல்வன் குறித்த ஆடியோ வெளியானது. இப்போது, அ.ம.மு.க புகழேந்தி வீடியோ வெளியாகியுள்ளது. அமமுக திட்டமிட்டு வெளியிடுகிறதா என்ற கேள்விக்கு, தினகரன் பதில் அளித்துள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன், கடந்த 3-ம் தேதி தி.மு.க-வில் இணைந்தார். அப்போது அவர், “ புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அ.ம.மு.க-வில் என்ன பிரச்னை என்பதுகுறித்து அந்த மாநாட்டில் கூறுவேன். அ.ம.மு.க-விலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் பல நிர்வாகிகள் தி.மு.க-வில் இணைய உள்ளனர்” என்று தெரிவித்தார்.

ttv dinakaran
ttv dinakaran

இந்நிலையில், புதுக்கோட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளை இன்று திருச்சிக்கு வரவழைத்துக் கூட்டம் நடத்தினார் தினகரன். அப்போது, ``தொண்டர்கள், நிர்வாகிகள் வெளியேறுவது அவரவர் சொந்த விருப்பத்தின்படிதான். மற்றபடி எந்த ஒரு காரணமும் இல்லை. நமது நோக்கம், ஜெயலலிதா தலைமையிலான இயக்கத்தையும் சின்னத்தையும் மீட்டெடுப்பதுதான்'' என்றார்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “ தேனியில், மாவட்டச் செயலாளர் ஒருவர் மாற்றுக் கட்சிக்கு சென்றபோது, முக்கிய நிர்வாகிகளை மதுரைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினோம். அதைப்போன்றுதான், இப்போதும் புதுக்கோட்டை நிர்வாகிகளை திருச்சிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளோம். அடுத்த மாவட்டச் செயலாளர் குறித்து முடிவுசெய்து அறிவிப்பு வெளியிடப்படும்.

dinakaran
dinakaran

அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். கட்சித் தொண்டர்களை அழைத்து கூட்டம் கூட்டினால் மண்டபம் தாங்காது என்பதால், முதற்கட்டமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது'' என்றவர், “கடந்த சில தினங்களாக நடக்கும் அனைத்தையும், ஒரு பார்வையாளராக தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். யார் தவறு செய்தாலும் உரிய நேரத்தில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றவர்,

“எங்களுடன் இருந்தவர்கள் கட்சியைவிட்டு வெளிவருவது என்பது அவர்களின் சொந்த விருப்பமாக இருக்கும். அதற்கு, நாம் எதுவும் சொல்ல முடியாது. போகிறவர்கள் ஏதாவது சொல்லிவிட்டுத்தான் செல்வார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?'' என்று பதில் அளித்தார்.

pugalenthi
pugalenthi

``தங்க.தமிழ்ச்செல்வன் கட்சியை விட்டு வெளியேறியபோது ஆடியோ ஒன்று வெளியானது. தற்போது, புகழேந்தி குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அமமுக திட்டமிட்டு செய்கிறதா?'' என்ற கேள்விக்கு, ``தங்க.தமிழ்ச்செல்வன் ஆடியோ வெளியாவதற்கு முன்பாக எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. சம்பந்தப்பட்டவரிடம் நான் அந்த ஆடியோவை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவரோ, எங்கள் தலைவரை இவ்வளவு மோசமாகப் பேசிய பிறகு இதை சும்மா விடக்கூடாது எனக்கூறி வெளியிட்டுவிட்டார். புகழேந்தி விவகாரத்திலும், நடக்கும் அனைத்தையும் ஒரு பார்வையாளனாக உங்களைப்போல் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவர் வெளியிடுவதற்கு எப்படிக் கட்சித் தலைமை பொறுப்பாக முடியும்?” என்றார் கொதிப்புடன்.