Published:Updated:

`வண்ணாரப்பேட்டை போராட்டத்தை நானா தூண்டினேன்?!' -அமைச்சர் ஜெயக்குமார் கருத்தால் கொதித்த லியோனி

திண்டுக்கல் ஐ.லியோனி
திண்டுக்கல் ஐ.லியோனி

வண்ணாரப்பேட்டையில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு முன்பாக நடந்த லியோனி கூட்டம், திட்டமிட்ட செயல் எனத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார், திண்டுக்கல் லியோனி.

` பிப்ரவரி 12-ம் தேதி தி.மு.க சார்பில், திண்டுக்கல் லியோனி பங்கேற்ற கூட்டம் வண்ணாரப்பேட்டையில் நடந்தது. அதற்குப் பிறகு பிப்ரவரி 14-ம் தேதி போராட்டம் நடக்கிறது. திட்டம் போட்டே போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளனர்'' எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

அமைச்சரின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துள்ள திண்டுக்கல் லியோனி, ``வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் போராட்டம் செய்தவர்கள்மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறது காவல்துறை. பெண்களை அடித்துள்ளனர். அதற்குப் பதில் சொல்லாமலும் தாக்குதல் நடத்திய காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்காமலும், `திண்டுக்கல் லியோனி பேசினார். அதனால் போராட்டம் தூண்டப்பட்டது' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்றவர்,

Vikatan

``இதுபோல எதாவது தொடர்பில்லாத ஒன்றைத்தான் அமைச்சர் பேசிக்கொண்டிருப்பார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மிக முக்கியமான பிரச்னை. இந்தியா முழுக்கவே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், வண்ணாரப்பேட்டையில லியோனி கூட்டம் போட்டு, தூண்டிவிட்டார் எனத் திசைதிருப்பும் வேலையை அமைச்சர் பார்க்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரையில், அவர் இப்படிப் பேசியது கிடையாது. ஜெயலலிதா அம்மையார் இறந்தபிறகு ஒரு நாளைக்கு மூன்று முறை பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தொடங்கி, அனைத்துக்கும் இவர்தான் பதில் சொல்கிறார். இதைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. பாறைக்கு அடியில் இருக்கும் தவளை, வெயில் காலத்தில் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருக்கும். ஆனால், லேசா மழை பெய்தவுடன் தவளை மேல் சற்று ஈரம்பட்டவுடன் 'சவுண்ட்' கொடுக்கத் தொடங்கிவிடும். தவளைச் சத்தம் கொடுப்பதைப் பார்த்து பக்கத்தில் இருக்கும் பாம்பு உஷாராகிடும். அது தவளையைக் கவ்விவிடும். நான் இந்த உதாரணத்தைத்தான் ஜெயக்குமாருக்குச் சொல்கிறேன். ஜெயலலிதா இருந்தவரையில் அமைதியாக இருந்த ஜெயக்குமார், ஆட்சி அதிகாரம் என்கிற ஈரம்பட்டவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்" எனக் கொதித்தவர்,

லியோனி
லியோனி

`` வண்ணாரப்பேட்டையில் மத ஒற்றுமைக்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் மட்டுமே பேசினேன். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஜனநாயகரீதியாகப் போராடுகிறார்கள். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்த அன்று, அந்தத் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று இந்தியாவில் உள்ள அத்துணை ஜமாத்துகளும் கூறின. அது இந்திய மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி.

ஆனால், இன்றைக்குக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இத்தனை போராட்டம் எதற்காக நடக்கிறது. நாங்கள் மசூதியை நேசிப்பதைவிட இந்த மண்ணை நேசிக்கிறோம். இந்தியாவிடமிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது என இஸ்லாமியர்கள் நாட்டுப்பற்றோடு போராட்டம் நடத்தி வருகின்றனர். உரிமைகளைப் பறிக்கும்போது தன்னெழுச்சியாக உருவான போராட்டம் இது. உண்மை இப்படியிருக்க என்மீது பழியைப் போட்டுப் பிரச்னையைத் திசைதிருப்பும் வேலையைப் பார்க்க வேண்டாம் என ஜெயக்குமாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு