Published:Updated:

`வத்தலக்குண்டைத் தொடர்ந்து நிலக்கோட்டை!' -ஐ.பெரியசாமி அசைன்மென்டால் பதறும் அ.தி.மு.க.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சியில் தி.மு.க 90 சதவிகிதம் வெற்றி பெற்றதில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி உற்சாகத்தில் இருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவிகித உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறது தி.மு.க. கடந்த 40 ஆண்டுகாலமாக அ.தி.மு.க வசம் இருந்த வத்தலக்குண்டு, தற்போது தி.மு.க பக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இது, ஐ.பெரியசாமியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க நிர்வாகிகள்
அ.தி.மு.க நிர்வாகிகள்

உள்ளாட்சித் தேர்தலில் வத்தலக்குண்டை உள்ளடக்கிய ஜி.தும்மலப்பட்டி, கோம்பைப்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் பதவிகளை தி.மு.க வென்றிருக்கிறது. இதில், அ.தி.மு.க-வின் கோட்டையை உடைத்ததில் ஐ.பெரியசாமி உற்சாகத்தில் இருக்கிறார்.

வத்தலக்குண்டு தி.மு.க ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகனின் மனைவி பரமேஸ்வரி பெரும்பான்மை பலத்துடன் ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

ஒன்றிய சேர்மன் பதவி; காரில் கடத்தப்பட்ட கவுன்சிலர்கள்! திருவரங்குளம் தி.மு.கவினரிடையே மோதல், பதற்றம்

இதனிடையே, நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க 10, தி.மு.க 7, பா.ம.க 1, சுயேச்சை 2 என வெற்றிபெற்றுள்ளனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தேடும் நிலையில் உள்ளது, அ.தி.மு.க. தற்போது ஐ.பெரியசாமி கொடுத்த திடீர் அசைன்மென்டால் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் பம்பரமாக சுற்றத் தொடங்கியுள்ளனர்.

4 கவுன்சிலர்களைத் தி.மு.க பக்கம் கொண்டு வருவதற்காக அவர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளனது. இதனால் அ.தி.மு.க நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அ.தி.மு.க நிர்வாகிகள்
அ.தி.மு.க நிர்வாகிகள்

அ.தி.மு.க யூனியன் சேர்மனாக வலம்வர நினைத்த ஒன்றியச் செயலாளர் யாகப்பன் நேற்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் பதவியேற்ற கையோடு பா.ம.க கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேரையும் 3 கார்களில் ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றார். ஆனாலும், முயற்சியைக் கைவிடாத தி.மு.க நிர்வாகிகள், கவுன்சிலர்களின் உறவுகள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

`திண்டுக்கல் ஐ.பி-யின் அதிரடி அசைன்மென்டால் என்ன ஆகுமோ?' என்ற தவிப்பில் இருக்கிறது நிலக்கோட்டை அ.தி.மு.க தரப்பு.

அடுத்த கட்டுரைக்கு